தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நேற்று(ஏப்ரல் 13) தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வேட்டி, சட்டை அணிந்து கலந்து கொண்டார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, “இந்தியா உலகின் மிகவும் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றாகும். இதற்கான வரலாற்று குறிப்புகள் தமிழ் மொழியில் உள்ளன.
தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் 1,100ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கல்வெட்டுக்கள் உள்ளாட்சி அமைப்புகளை பற்றியும் தேர்தல் நடைமுறைகளை பற்றியும் குறிப்பிடுகிறது.
உலகத்திலேயே மிகவும் பழமையான மொழியாக தமிழ் மொழி உள்ளது. இதற்காக அனைத்து இந்தியர்களும் பெருமை கொள்ள வேண்டும். தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்கள் மிகவும் மதிப்புக்குரியவையாக உள்ளன. தமிழ் புத்தாண்டு உறுதிமொழியாக திணை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
குஜராத் மாநிலத்தில் வசித்த பல தமிழ் மக்கள் எனக்கு வாக்களித்து என்னை சட்டமன்ற உறுப்பினராகவும், முதல்வராகவும் ஆக்கினார்கள். அவர்களை நான் மறக்க மாட்டேன்.

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் நவீன கட்டமைப்பிற்கு தமிழ் மக்களின் பங்களிப்பு இந்தியாவை புதிய உயரத்திற்கு அழைத்து சென்றது.
தமிழ் கலாச்சாரமும் தமிழக மக்களும் உலகம் முழுவதும் உள்ளனர்.
சென்னையிலிருந்து கலிஃபோர்னியா வரை மதுரையில் இருந்து மெல்போர்ன் வரை கோயம்புத்தூரில் இருந்து கேப் டவுண் வரை சேலத்திலிருந்து சிங்கப்பூர் வரை தங்களுடைய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் தமிழ் மக்கள் உலகம் முழுவதும் கொண்டு சென்றுள்ளனர்.
பழமையான தமிழ் கலாச்சாரம் இந்த புத்தாண்டிற்கு புதிய ஆற்றலை அளிக்கக்கூடியதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
சாலையோர வாகனங்கள்: சென்னை மாநகராட்சி அதிரடி!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!