ஆன் லைன் ரம்மி சட்டம்- ஆளுநர் மீது பழி: அண்ணாமலை

Published On:

| By Kalai

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் மீது திமுக அரசு எல்லா பழியையும் போடப் பார்க்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, அண்ணாமலை ராஜ்பவனில் இன்று (நவம்பர் 29) சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “காவல்துறை மற்றும் உளவுத்துறைக்கு முதலமைச்சர் மீது மட்டுமே அக்கறை உள்ளது. சாதாரண மக்களை பாதுகாப்பதற்கு நேரமில்லை.

அதனுடைய மெத்தனப்போக்குதான் தமிழகத்தில் நடக்கும் அசம்பாவிதங்கள். வேறு மாநிலத்தில் குண்டு வெடிக்கிறது, உடனே அந்த மாநிலத்தில் காவல்துறை 2 மணி நேரத்தில் சொல்கிறது, ’இது தீவிரவாதத் தாக்குதல், விசாரணையை தொடங்கிவிட்டோம்’ என்று.

ஆனால் இங்கு கோவையில் நடந்ததை தீவிரவாதத் தாக்குதல் என்று சொல்வதற்கு இன்னும் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள். தீவிரவாதத் தாக்குதல் என்று சொன்னால் நம்மை பணியில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்று காவல்துறையினர் பயப்படுகின்றனர்” என்றார்.

’ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது ஏன்’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ”ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் நடக்கும் விஷயத்தில் கருத்து சொல்வது சரியாக இருக்காது. நான் அரசியல் கட்சியில் இருக்கக்கூடிய ஒரு தொண்டன்.

மாநில அரசு எல்லாப் பழியையும் ஆளுநர் மீது போட்டு தப்பிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆக்கப்பூர்வமான முறையில் ஆளுநர் கேள்விகளுக்கு பதிலளித்து, சட்டத்தில் இருக்கும் சிறு ஓட்டைகளை எல்லாம் அடைத்து, இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவது போல், தமிழகத்திலும் செயல்படுத்தவேண்டும். 

ஆன்லைனில் பல பரிவர்த்தனைகள் நடக்கிறது. இதில் பல சட்டப்பிரச்சினைகள் இருக்கிறது. அதற்காகதான் ஆளுநர் நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளுநர் மீது குற்றம் சுமத்தி வருகிறது” எனத் தெரிவித்தார்.

’அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், நிரந்தர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதது ஏன்’ என்று கேள்வி எழுப்பியபோது, ”அவசர சட்டத்தை பொறுத்தவரை அதற்கு உடனே அனுமதி கொடுப்பார்கள். அதில் பிரச்சினையில்லை.

ஆனால் அதையே நிரந்தர சட்டமாக்கும்போது பல சட்ட சிக்கல்களை ஆளுநர் ஆராய வேண்டியிருக்கிறது. அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தபோது அதை ஏன் அரசாணையாக கொண்டு வரவில்லை?

BJP State President Annamalai meets Governor

கடந்த 6 மாத காலமாக தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் நடந்துகொண்டுதான் இருக்கிறது” என்றார்.

ஆளுநர் குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பேசிய கருத்துக்கு பதிலளித்த அண்ணாமலை, ”மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது, சட்டமன்றத்தில் அவரது சட்டை கிழிந்தபோது முதலில் ஓடிவந்தது ஆளுநர்தான்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கூட, பஞ்சாப் சிங்கம் என்று ஒரு ஆளுநரை புகழ்ந்து பேசியிருக்கிறார். இதையெல்லாம் கனிமொழி அவர்கள் பார்த்து பேசவேண்டும். தற்போது ஆட்சியில் இருக்கிறோம் என்பதற்காக பேசக்கூடாது.

யாரும் எங்களை கேள்வியே கேட்கக்கூடாது என்று பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அரசியல் நிர்பந்தத்திற்காக பேசக்கூடாது, உண்மையை பேசவேண்டும்” என்றார்.

’துணை ராணுவப் படை வீரர் குருமூர்த்தி குடும்பத்திருக்கு பாதுகாப்பு கோரி புகார் அளித்தற்கு ஆளுநர் என்ன பதில் சொன்னார்’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் நாட்டிற்காக வேலை செய்யக்கூடிய துணை ராணுவத்தினரை கேவலமாக, மோசமாக, ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.

ஆனால் மாநில அரசு அந்த குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள். அதேநேரம் யார் அப்படி மிரட்டல் விடுத்தார்களோ அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

கலை.ரா

இந்தியில் பதாகை: எதிர்ப்பால் கிழித்த ரயில்வே அதிகாரிகள்

நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சதி: மு.க.ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share