மக்களவை தேர்தலையொட்டி வரும் ஜூலை 2024 வரை 3,500 கோடி ரூபாய் அபராதம் கட்டுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி மீது எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று வருமான வரித்துறை இன்று (ஏப்ரல் 1) உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
மக்களைவை தேர்தலையொட்டி நாடு முழுவதும் அரசியல் களம் பரபரக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையே தேசிய எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி வருமானவரித்துறையால் அடுத்தடுத்து சோதனைகளை சந்தித்து வருகிறது.
கடந்த 2018-19-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் 45 நாள்கள் கால தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும் அக்கட்சியின் வங்கி கணக்குகளில் இருந்து அபராதத் தொகையாக ரூ.135 கோடி வசூலிக்கப்பட்டது.
தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு உரிய வருமான வரி பாக்கி மற்றும் அதற்குரிய அபராதமாக ரூ.1,823 கோடி செலுத்தக் கோரி காங்கிரஸுக்கு வருமான வரித்துறை கடந்த 29ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2014-15-ஆம் ஆண்டுக்கு ரூ.663 கோடி, 2015-16-ஆம் ஆண்டுக்கு சுமார் ரூ.664 கோடி, 2016-17-ஆம் ஆண்டு ரூ.417 கோடி என மொத்தம் ரூ.1,745 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு காங்கிரஸுக்கு வருமான வரித்துறை மீண்டும் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
ஏற்கெனவே வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, ரூ.135 கோடி வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், வருமான வரி பாக்கி மற்றும் அபராத தொகையாக மொத்தம் ரூ.3,500 கோடி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி அவசர மனுவை தாக்கல் செய்தது.
அந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி வி நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “மக்களவைத் தேர்தலின் போது எந்த கட்சிக்கும் வருமான வரித்துறை இடையூறு ஏற்படுத்த விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ரூ. 3,500 கோடி வசூல் செய்வதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்படாது” என்று உறுதியளித்தார்.
மேலும், வழக்கின் விசாரணையை தேர்தலுக்கு பிறகு ஜூன் 2வது வாரத்துக்கு ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
துஷார் மேத்தாவின் கருத்தை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, ”மக்களவைத் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு எதிராக கெடுபிடி நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது” என்று வருமான வரித்துறைக்கு அறிவுறுத்தியது.
மேலும் வழக்கு விசாரணையையும் ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Rain Update: ‘ஜில்லென ஒரு மழைத்துளி’… குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்!
எம்.பில் படித்தவர்களையும் அனுமதிக்க வேண்டும்: ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கோரிக்கை!