பதஞ்சலி விவகாரத்தில் பாபா ராம்தேவ் இரண்டாவது முறையாக மன்னிப்பு கேட்டு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
கொரோனா காலத்தில் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத மருந்துகளை அறிமுகம் செய்தது. இதுதொடர்பாக பதஞ்சலி வெளியிட்ட விளம்பரத்தில், “எங்களது ஆயுர்வேத மருந்துகள் மூலம் கொரோனா, சர்க்கரை நோய், ஆஸ்துமா நிரந்தரமாக குணமாக்கப்படும்” என்று கூறியிருந்தது.
இந்த விளம்பரத்தை எதிர்த்து இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என்று எச்சரித்த உச்ச நீதிமன்றம் இதுதொடர்பாக பதிலளிக்க அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதன் பிறகும் அந்த நிறுவனம் அடுத்தடுத்து விளம்பரங்களை வெளியிட்டது. இதையடுத்து பதஞ்சலி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
உச்ச நீதிமன்றம் நோட்டீஸுக்கும் பதஞ்சலி சார்பில் பதில் அளிக்காததால் அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி கடந்த 2ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி பாபா ராம்தேவும், மேலாண் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணாவும் மன்னிப்பு கேட்டனர். அதை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 10) நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அசானுதீன் அமானுல்லா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பதஞ்சலி ஆயுர்வேதா சார்பில் யோகா குரு பாபா ராம்தேவ் அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆச்சாரியா பாலகிருஷ்ணா ஆகியோர் சார்பில், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதனை ஏற்க நீதிபதிகள் மறுப்புத் தெரிவித்தனர்.
பதஞ்சலி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியிடம், மன்னிப்பு என்பது வெறும் காதிதத்தில் மட்டுமே உள்ளது. தவறான விளம்பரத்தை வெளியிடக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள். மக்கள் பாதிக்கப்பட கூடிய விஷயம் இது. நாங்கள் எந்த தயவையும் காட்ட விரும்பவில்லை.
நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்துவிட்டு அலட்சியமாக செயல்படும்போது, அதே வகையில் உங்கள் மன்னிப்பை நாங்கள் ஏன் அலட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
உங்கள் மன்னிப்பையெல்லாம் நம்பவில்லை. நிராகரிக்கிறோம்” என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.
விசாரணையின் முடிவில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, பொது மன்னிப்பு கேட்கவும் தயார் என்று தெரிவிக்க, அதையும் நீதிபதிகள் ஏற்கவில்லை.
இன்றைய விசாரணையின் போது, பதஞ்சலி நிறுவனத்தின் மீது ஏன் உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது. மாநில அதிகாரிகள் இந்த நிறுவனத்துக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பதஞ்சலி விவகாரத்தில் எந்தெந்த அரசு அதிகாரிகள் எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கவில்லையோ அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பணமோசடி… ஆற்றல் அசோக் மீது தாய்மாமா பகீர் புகார்: பரபரக்கும் ஈரோடு களம்!
Video: “நான் பேச வேண்டாமா?”… மேடையில் நடிகை அனுபமாவிற்கு நடந்த மோசமான சம்பவம்…!