பணமோசடி… ஆற்றல் அசோக் மீது தாய்மாமா பகீர் புகார்: பரபரக்கும் ஈரோடு களம்!

அரசியல்

ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் தன்னை ஏமாற்றியதாக அவரது தாய்மாமா வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி துணை செயலாளர் பிரகாஷ், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வேணுகோபால் போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில், அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் தனது பணத்தை ஏமாற்றி விட்டதாக அவரது தாய்மாமா செல்வராஜ் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதில், ” ஆற்றல் அசோக் குமார் என்னுடைய அக்கா பையன். எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். சொத்துப்பிரச்சனையில் ஜீவனாம்சம் வாங்கி கொடுப்பதற்காக ரூ.1 கோடி வாங்கினார். அந்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தேன். ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது போன்ற பல முறைகேடான வேலைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கிறார். வேற யாராச்சும் நல்லவங்களுக்கு ஓட்டு போடுங்க. இவரை நம்பாதீங்க” என்று  கண் கலங்கி பேசியிருக்கிறார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், இது குறித்து திமுக வேட்பாளர் பிரகாஷ் தனது முகநூல் பக்கத்தில், ” அதிமுக வேட்பாளரின் தாய்மாமா பேசும் காணொளியை பார்த்தேன். அவரின் வார்த்தைகளில் உள்ள வலியையும், வேதனையையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டாக இல்லாமல் தெளிவாகவும் புள்ளி விவரத்துடனும் தனது கருத்தை தெரிவிக்கிறார்.

அவரது கருத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, நான் கூறியதை போல ஆற்றல் அசோக் குமார் பணத்தை நம்பி மட்டுமே தேர்தலில் நிற்கிறார். மக்கள் பணியில் ஈடுபடுவது போல விளம்பரத்தை தேடிக்கொள்ளும் நபராக இருக்கிறார். ஆனால், இவரின் விளம்பரங்களை நம்பி ஈரோட்டு மக்கள் ஏமாற தயாராக இல்லை என்பதை எங்களின் பிரச்சாரத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்க்கும் போது உணர முடிகிறது.

மேலும், இது போன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு தனது சொந்த தாய்மாமாவிற்கே துரோகம் செய்திருக்கிறார் என்பதை மக்கள் உற்று நோக்கவேண்டும். காரணம் நாளை நமக்கும் இந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதை அறிந்து வாக்களிக்க வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமாரின் தாய்மாமா வெளியிட்ட இந்த வீடியோ ஈரோட்டுத் தேர்தல் களத்தில் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.  இது அதிமுகவுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹீரோவான பிக்பாஸ் போட்டியாளர்… சரியான ஜாக்பாட்… ரசிகர்கள் வாழ்த்து..!

ED விசாரணையில் நடந்தது என்ன? – அமீர் பேட்டி!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *