சாகச காட்சியின் போது இரண்டு போர் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு விபத்துக்குள்ளான வீடியோ காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கிறது.
டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் நேற்று (நவம்பர் 12)மதியம் போர் விமான சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
விமானப் படைக்கு சொந்தமான இந்த போர் விமானங்கள் சாகச காட்சியில் ஈடுபட்டு இருந்தபோது அதனை அந்த சுற்று வட்டாரத்தில் இருந்தவர்கள் கண்டு களித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக ஒரு விமானம் மீது மற்றொரு விமானம் மோதிய விபத்தில் சட்டென்று இரு விமானங்களும் கீழே விழுந்து நொறுங்கியதோடு தீப்பற்றி எரிந்தது.
விண்ணை முட்டும் அளவுக்கு நெருப்பு குழம்பு போல் எழுந்த காட்சி பார்ப்பவர்களின் மனதை பதற வைக்கிறது.
இரு விமானங்களும் குறிப்பிட்ட அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது நடுவானில் திடீரென போயிங் விமானத்தின் மீது சிறிய விமானம் இடது புறத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சாகச காட்சியில் பங்கேற்ற ஒரு விமானம் பெரிய ரக போயிங் பி.17 குண்டுகள் வீசும் விமானமாகும். இந்த விமானம் ஜெர்மனிக்கு எதிராக இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற உதவிய 4இன்ஜின்கள் கொண்ட விமானம் ஆகும்.
மற்றொரு சிறிய விமானம் இரண்டாம் உலகப் போரின் போது தயாரிக்கப்பட்டது. இது சோவியத் விமானப்படையால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் விபத்தில் விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் விமான ஓட்டிகளின் நிலைமை பற்றி அதிகாரிகள் எந்த தகவல்களையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
எனினும் இந்த விமான காட்சியை நடத்திய நிறுவனத்தின் தலைவர் ஹாங் கோட்ஸ், பி.17 விமானத்தில் நான்கு முதல் ஐந்து பேர் பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மற்றொரு சிறிய விமானமான பி.63 கிங் கோப்ரா போர் விமானத்தில் ஒரு பைலட் மட்டுமே பயணிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
பிரியா
வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
”தென் தமிழகத்தில் சம்பவம் இருக்கு”: எச்சரிக்கும் வெதர்மேன்!