பாஸ்கர் செல்வராஜ்
- அதென்ன பட்ஜெட்?
வரும் ஆண்டில் ஒன்றிய அரசுக்குத் தோராயமாக எவ்வளவு பணவரவு வரும் அதை எப்படிச் செலவு செய்யப் போகிறோம் என்று நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் உத்தேச வரவுசெலவு கணக்கு அறிக்கைதான் இந்தப் பட்ஜெட். (இப்போது திட்டமிட்டிருப்பதைவிட வரவும் செலவும் கூடலாம் குறையலாம்)
- ஒன்றியத்தின் வரவுசெலவு திட்டம் ஏன் முக்கியமானது?
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி = தனிநபர் நுகர்வு + அரச தனிநபர் முதலீடுகள் + அரசின் செலவுகள் + நிகர ஏற்றமதி இறக்குமதி) காரணிகள் அனைத்திலும் அரசின் பங்களிப்பும் கொள்கை முடிவுகளும் முதன்மையானதாக இருப்பதால் இது அவ்வளவு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் எல்லோருடைய அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடையதாகவும் இருக்கிறது.
- வரவுசெலவு திட்டத்தால் எனக்கென்ன ஆகப்போகிறது?
ஒன்றியம் மளிகைப்பொருள்கள், வருமான வரி, தங்க இறக்குமதி, மது, புகையிலை மீதான வரியை உயர்த்தி வருமானத்தைக் கூட்டப் போவதாக அறிவித்தால் இந்தப் பொருள்களை வாங்குபவர்கள் அதிகம் செலவழிக்கவும் மாத சம்பளத்தில் கூடுதலாக ஒரு பகுதியை அரசுக்கு வரியாகவும் கட்டவேண்டி இருக்கும்.
ஒன்றியம் உரம், சமையல் எரிவாயு உருளைக்குக் கூடுதலாக மானியம் கொடுத்து செலவு செய்யப் போவதாக அறிவித்தால் இவற்றின் விலைகள் குறையும். மக்கள் வீடுகள், மேற்கூரையில் சூரிய மின்தகடுகள் பொறுத்த நிதி ஒதுக்குவதாக அறிவித்தால் அதில் பயனடைபவர்களில் ஒருவராக நீங்கள் இருக்கலாம். இப்படி மாநிலங்கள், தொழிற்துறையினர், விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என எல்லோரின் மீதும் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ நேரடியாக பாதிப்புகளை ஏற்படுத்தும்.
நன்றி தி இந்து
- ஒன்றியத்துக்கான வரவுகள் என்னென்ன?
நாம் வாங்கும் பொருட்களின் மீது போடப்படும் ஜிஎஸ்டி வரி, தொழிற்துறையினர் மீதான வரி, மாத வருமானம் பெறுபவர்களின் மீதான வரி, கலால் வரி, சுங்கவரி என வரிகள்தாம் அரசின் வரவுக்கான முதன்மையான மூலம். இந்த வருவாய் ஒன்றியத்தின் செலவுக்குப் பெரும்பாலும் போதுமானதாக இருப்பதில்லை ஆதலால் மிகப்பெரும் அளவில் கடன் வாங்குகிறது.
- ஒன்றியம் யாரிடம் இருந்து அதிக வருவாய் ஈட்டுகிறது?
நம்மிடம் இருந்துதான். இந்த ஆண்டு வரிவிதிப்பில் எந்த மாற்றமும் இல்லை என ஒன்றியம் அறிவித்திருந்தாலும் அதிகளவில் வருமானம் ஈட்டும் தொழிற்துறையினரைவிட குறைவான அளவு வருமானம் ஈட்டும் தொழிலாளர்கள், பொதுமக்களிடம் இருந்து கறக்கும் வரியின் அளவு வரலாறு காணாத அளவு உயர்ந்திருக்கிறது. இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்கவரி இரண்டாயிரத்துப் பதினாராம் ஆண்டிற்குப் பிறகு மிகப்பெரும் அளவில் குறைந்திருக்கிறது.
- ஒன்றியம் வரவுக்காக நம்மீது வரிச்சுமையைக் கூட்டியதால் என்னவானது?
இந்தியப் பொருளாதாரத்தில் ஐம்பது விழுக்காட்டுக்கும் மேலாக பங்களித்து வந்த தனிநபர் நுகர்வு வீழ்ச்சியடைந்து வருகிறது. இதற்குக் காரணம் பொருள்களின் விலையும் அரசின் வரியும் கூடிய அதேவேளை மக்களின் வருமானம் கடந்த ஐந்து ஆண்டுகளாக உயராமல் தேங்கியதால் மக்கள் பணமின்றி பொருள்களை வாங்குவதைக் குறைத்திருக்கிறார்கள்.
நன்றி மின்ட்
- ஒன்றியம் வரிக்கொள்கையை மாற்றியதால் வேலைவாய்ப்பு என்னவானது?
ஜிஎஸ்டி செயல்படுத்தப்பட்ட பிறகு “மக்கள் நுகர்வு அதற்கான முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி” என்றிருந்த உள்நாட்டு உற்பத்திச் சமநிலை குலைந்து இறக்குமதியும் இதர செலவீனங்களும் கூடியிருக்கிறது. இருபது விழுக்காட்டுக்கும் மேலாக இருந்த சுங்கவரி பத்துக்கும் கீழாகக் குறைந்திருக்கிறது.
அதாவது ஜிஎஸ்டி அறிமுகத்துக்குப் பிறகு உள்நாட்டு உற்பத்தி குறைந்து மலிவான விலையில் சீனாவில் இருந்து ஜிக்கு வேண்டப்பட்டவர் வைத்திருக்கும் கப்பல் துறைமுகம் வழியாக சரக்குகளை குறைவான சுங்கவரியில் இறக்குமதி செய்து அதிக விலைக்கு விற்று இலாபம் பார்த்திருக்கிறார்கள். அதுவும் வேறு யாராக இருக்கப் போகிறார். இணையதள வணிகத்தில் கொடிகட்டி பறக்கும் ஜீக்கு வேண்டப்பட்ட இன்னொருவாராகத்தான் இருக்கும்.
உற்பத்திக்காக முதலீடு செய்யாமல் தரகர்கள் வாங்கி விற்று கொழுத்ததால் நாட்டில் வேலைவாய்ப்பு அருகி வருகிறது. போர் நடக்கும் இஸ்ரேலில் உயிர்போகும் ஆபத்து இருந்தும் இந்தியர்கள் கட்டிட வேலைக்கு வரிசையில் நிற்கிறார்கள். சரியும் தனியார் முதலீடுகளை ஈடுசெய்ய ஒன்றியம் முதலீடுகளைக் கூட்டி வருகிறது.
- ஒன்றியத்தின் முதலீடுகள் கூடினால் என்னவாகும்?
இந்தியாவின் கடன் கூடும். ஆண்டுக்கு இந்தியா இவ்வளவு வளர்ந்திருக்கிறது அவ்வளவு வளர்ந்திருக்கிறது என்று அளந்து விடுகிறார்கள். ஆனால் சொல்லாமல் விட்டது அதில் பெரும்பகுதி அரசின் கடன் இருக்கிறது என்பதைத்தான். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 39.4 விழுக்காடாக இருந்த நாட்டின் கடன் இப்போது 51.4 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.
- அரசின் கடன் கூடினால் என்னவாகும்?
நம்மிடம் வரியாக ஒன்றியம் கறக்கும் வருவாயின் பெரும்பகுதி வட்டி கட்டுவதற்கே செல்லும். ஒன்றியம் செலவிடும் நூறு ரூபாயில் இருபத்தைந்து ரூபாய் வட்டிக்கே சென்றுவிடுவதால் மேலும் கடன் வாங்குகிறது. நலத்திட்டங்களுக்கான செலவைக் குறைக்கிறது.
- எந்தத் துறைகளுக்கான செலவை வெட்டியிருக்கிறது ஒன்றியம்?
உரத்துக்கான மானியம் அதிகளவில் வெட்டப்பட்டிருப்பதால் விவசாயிகள் அதிக விலை கொடுத்து உரம் வாங்கவேண்டி இருக்கும். வருவாய் குறைந்து சோப்பு சீப்பு வாங்குவதைக்கூட குறைத்திருக்கும் கிராமப்புற விவசாயப் பொருளாதாரம் மேலும் நலிவடையும். அரசின் உணவு, கல்வி, மருத்துவம், சுகாதார உதவியை எதிர்பார்த்திருப்பவர்களும் இந்த கிராமப்புற ஏழைகள்தாம். இந்தத் துறைகளுக்கும் ஒன்றியம் செலவைக் குறைத்திருப்பது அவர்களின் வலியை மேலும் கூட்டும்.
- மக்களுக்கு அரசு ஒன்றுமே அறிவிக்கவில்லையா?
ஒரு கோடி குடும்பங்கள் தங்களது மேற்கூரையில் சூரிய மின்னாற்றல் தகடுகளை நிறுவி செலவில்லாமல் மின்சாரம் பெறுவதோடு உற்பத்தியாகும் கூடுதல் மின்சாரத்தை மின்சார நிறுவனங்களுக்கு விற்று இலாபம் அடையலாம் என்று ஒன்றியம் அறிவித்திருக்கிறது. இந்தியாவில் உள்ள 30.2 கோடி குடும்பங்களில் சூரியமின் தகடுகள் பொறுத்த தோதான மேற்கூரை உள்ளவை எத்தனை?
மாநிலங்கள் வழியாக அல்லாமல் ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்கள் வழியாக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் பாஜக ஆளாத அவர்களுக்கு ஆதரவு இல்லாத மாநில குடும்பங்களுக்கும் சென்று சேருமா? அப்படியே சென்றாலும் அந்த மாநிலத்தில் எந்த அடுக்கில் உள்ளவர்கள் இதற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? இதை எல்லாம் தாண்டி இதில் பயனடைய எனக்கு வாய்ப்பிருக்கிறது என நினைப்பவர்கள் மகிழ்ச்சி கொள்ளலாம்.
- மகிழ்ச்சியும் கோபமும் கொள்ளும் மாநிலத்தவர்கள் யார்?
தெற்கு மாநில மக்கள் ஒன்றியத்துக்கு அதிக வரிவருவாய் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். ஒன்றிய செலவுகளால் அதிகம் பலனடைபவை பாஜக வலுவாக இருக்கும் மாநிலங்களாக இருக்கின்றன. இந்த ஓரவஞ்சனை தென்மாநில மக்களை விரக்திக்கும் கோபத்துக்கும் ஆளாக்குகிறது.
- மாநிலங்களிடம் ஒன்றியம் காட்டும் ஒரவஞ்சனை எதில் முடியும்?
தென்மாநிலங்களை இணைத்து திராவிட நாடாக்க அறைகூவல் விடுத்த தமிழகம்தான் இதுவரையிலும் தனிநாடு, மாநில தன்னாட்சி, நிதிப் பங்கீட்டில் ஒன்றியத்தின் ஓரவஞ்சனை என்று பேசி வந்தது. இப்போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் ஒன்றியம் இப்படி தென்மாநிலங்களை வஞ்சித்தால் நாங்கள் தனிநாடு கேட்கவேண்டி வரும் என்று எச்சரித்திருக்கிறார். இப்படியான ஒற்றுமையை உடைக்கும் பேச்சுக்கள் இந்துதேசிய நோயின் அறிகுறி. இதனைப் புரிந்துகொண்டு இந்துத்துவம் தனது ஆதிக்க வெறுப்பு அரசியல் போக்கை மாற்றிக்கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியுமா?
கட்டுரையாளர் குறிப்பு
பாஸ்கர் செல்வராஜ் – தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு!
அதானியின் உலகிலேயே மிகப்பெரிய காப்பர் ஆலை: எதற்காக?
தமிழகத்துக்கு ஏன் இந்த அநீதி? – திருச்சி சிவா காட்டம்!
பியூட்டி டிப்ஸ் : பருக்களை நீக்க எளிய மருத்துவக் குறிப்புகள்!