ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தைச் சார்ந்தவர் என்பதால் ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு அண்ணாமலை வக்காலத்து வாங்குவது தமிழ்நாட்டு மக்களை இழிவு செய்யும் நடவடிக்கை என்று சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் சாசன விதிமுறைகளுக்கு மாறாக நடந்து கொண்டதற்காக தமிழ்நாடு ஆளுநரும், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் அண்ணாமலையுமே பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டியவர்கள்.
ஆளுநரின் ஜனநாயக விரோதச் செயல்களுக்கும், அடாவடித்தனத்திற்கும் பாஜகவினர் ஆதரவு தெரிவிப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
தமிழ்நாடா, தமிழகமா என்ற சர்ச்சையை ஆளுநர் கிளப்புவது அண்ணாமலை கருதுவதைப் போல மேலோட்டமான பிரச்சினையல்ல. ஆர்எஸ்எஸ்ஸின். ‘ஒரே நாடு, ஒரே மொழி’ என்ற தத்துவத்தின் வெளிப்பாடாகும்.
கடுமையான கண்டனங்கள் எழுந்த பிறகு ஆளுநர் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். இவ்வாறு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளுநர் தள்ளப்பட்டுள்ளார் என்பதே உண்மை. அந்த விளக்கம் கூட ஏற்புடையதல்ல.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது இந்திய வரலாற்றில் எப்போதும் இல்லாதவாறு தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே அவையை விட்டு ஆளுநர் வெளிநடப்பு செய்தது தமிழ்நாடு சட்டமன்றத்தை அவமதிக்கும் செயல்.
அதுமட்டுமின்றி அவையின் உரிமை மீறிய செயலாகும். இச்செயலை அண்ணாமலையும், அவரது கட்சியும் கண்டிக்க துப்பில்லாமல் முதலமைச்சரையும், எதிர்க்கட்சிகளையும் வசைபாடுவது வெட்கக் கேடானது.
தற்போது குடியரசு தின விழாவிற்கான அழைப்பிதழில் ஆளுநர் முறைப்படி தமிழ்நாடு ஆளுநர் எனவும், தமிழ்நாடு அரசின் இலச்சினையும் அச்சிட்டு அனுப்பியுள்ளார்.
ஏற்கெனவே தான் செய்த தவற்றை ஆளுநரே ஒப்புக்கொண்டிருக்கும்போது அண்ணாமலை மட்டும் குதியாட்டம் போடுவது ஏன்?
தமிழ்நாடு அரசு நீட் தேர்விற்கு விலக்கு, ஆன்லைன் ரம்மி தடை உள்ளிட்ட 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மியால் இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்தச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் ஆன்லைன் ரம்மி நிறுவன பிரதிநிதிகளை சந்தித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இந்திய அரசமைப்பின் பிரிவு 200, சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தரலாம், ஒப்புதல் தராமல் மறுக்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம் என்கிறது.
அதன் பொருள் கால வரையறையற்று அதன்மீது முடிவெடுக்காமல் இருக்கலாம் என்பதல்ல. இதற்கு மாறாக சட்டமன்ற மாண்பை சீர்குலைக்கும் வகையில் மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுவது மக்களாட்சி தத்துவத்தை காலில் போட்டு மிதிக்கும் நடவடிக்கையாகும்.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தைச் சார்ந்தவர் என்பதால் ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு அண்ணாமலையும், அவரது கட்சியும் வக்காலத்து வாங்குவது தமிழ்நாட்டு மக்களை இழிவு செய்யும் நடவடிக்கையாகும்.
இத்தகைய இழி செயலை புரிந்து வரும் அண்ணாமலையை ஒருபோதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: தினமும் பிரெட் சாண்ட்விச் சாப்பிடுபவரா நீங்கள்?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!