ஆளுநர் மாளிகையில் இந்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி நடைபெறும் பொங்கல் விழாவுக்கான அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை தவிர்க்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசிற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சனாதனம், இந்து தர்மம், மனுஸ்மிருதி குறித்து ஆளுநர் பேசியதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் தடைசட்ட மசோதா, சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா போன்றவற்றிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி-க்கள், ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி குடியரசு தலைவருக்கு மனு அளித்திருந்தனர்.
இந்தநிலையில், நேற்று சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் சில பத்திகளை ஆளுநர் தவிர்த்து விட்டு பேசியிருந்தார்.
இதனை தொடர்ந்து, தமிழக அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இந்தநிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழாவின் அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினையை ஆர்.என்.ரவி தவிர்த்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் இந்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் விழா நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழ் இன்று வெளியானது. அதில் தமிழக ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் இலட்சினை தவிர்க்கப்பட்டு, 3 இடங்களில் இந்திய இலட்சினை மட்டுமே இடம் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான சித்திரைத் திங்கள் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு என்று குறிப்பிட்டும், தமிழ்நாடு இலட்சினை இருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் சித்திரை திங்கள் விழா அழைப்பிதழில் திருவள்ளுவர் ஆண்டு என்று குறிப்பிட்டிருந்த ஆளுநர் மாளிகை, இப்போதைய பொங்கல் விழா அழைப்பிதழில் திருவள்ளுவர் ஆண்டையும் தவிர்த்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
செல்வம்
நான் கொலை செய்து விட்டேன்: வைரலாகும் ராகுல் காந்தியின் பேச்சு!
மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம்!
Thimiru