நோக்கம் origin stories plantations computers 3
தமிழ் ஊடக வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக, உலக அரங்கில் வெளியாகும் சிறப்புக் கட்டுரைகளை தமிழ் உலகில் அறிமுகம் செய்யும் நோக்கத்தில், மின்னம்பலம் இணையதளம் மற்றும் அமெரிக்காவின் பெருமைமிகு கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ’லாஜிக்ஸ்’ பத்திரிக்கை இணைந்து வழங்கும், உலகப்புகழ்பெற்ற சிக்னல் (Signal) செயலியின் தலைவர் மெரிடித் விட்டேக்கர் எழுதும் சிறப்புத் தொடர் இது.
தோட்ட தொழிலாளர்களின் அவலங்களையும், தொழிற்துறையின் மற்றொரு பரிமாணம் மற்றும் அதன் வரலாற்றையும் ஆழமாக எடுத்துரைக்கும் இத்தொடரை, புது முயற்சிகளை புத்துணர்ச்சியுடன் தொடரும் நம்முடைய மின்னம்பலம் இணையதளத்தில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
கணினியில் தோட்டம்
பாபேஜின், தொழிற்சாலைத் தொழிலாளர் கட்டுப்பாடுக் கோட்பாடுகளை உருவாக்கும் பணியும் கணக்கீட்டு இயந்திரங்களை உருவாக்குவதற்காக வாழ்நாள் முழுவதும் ஆற்றிய பணியும் ஒரே கேள்விக்கு பதிலளிப்பதற்கான இரண்டு அணுகுமுறைகளாக ஒன்றாக இணைத்துப் பார்க்கலாம்: முதலாளித்துவத்திற்கும், பிரிட்டிஷ் பேரரசிற்கும் சேவையாற்றும் பணியை எப்படித் தரப்படுத்தி ஒழுங்குபடுத்துவது என்பதேயாகும்.
நவீன கணக்கீட்டிற்கான வார்ப்புருவை உருவாக்கிய அவரது சிக்கலான இயந்திரங்களை உருவாக்கும் முயற்சியில் தான், பாபேஜ் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் உள்ள தொழிற்சாலைகளுக்கும் பட்டறைகளுக்கும் சென்று பார்த்தார். இந்த சுற்றுப்பயணங்களின் போது கவனித்தவை தான் ஆன் தி எகானமி ஆஃப் மெஷினரி அண்டு மனுஃபாக்சர்ஸ் நூலுக்கு அடித்தளமாக அமைந்தது.
பாபேஜ் தனது இயந்திரங்களை பிரிட்டிஷ் பேரரசிற்கு உதவும் கருவிகளாகக் காட்டினார், எதிர்காலத்தில் பிரிட்டிஷ் கடற்படைக்கான வழிகாட்டும் அட்டவணைகளை உருவாக்குவதற்குப் பயன்படும் என்ற அடிப்படையில் அரசாங்கத்திடம் தாராளமான நிதியுதவியை அவர் கோருவதை நியாயப்படுத்தினார். அந்தக் காலகட்டத்தில், தவறுகள் நிறைந்த வழிகாட்டும் அட்டவணைகள் பல கப்பல் விபத்துகளுக்கு வழிவகுத்தன. அதனால் வலிமையான கடற்படையாக இருந்தும் பிரிட்டிஷ் பேரரசின் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
பாபேஜின் இயந்திரங்களுக்கும், தொழிலாளர் கட்டுப்பாடு பற்றிய அவரது கோட்பாடுகளுக்கும் இடையே உள்ள தொடர்பை புரிந்து கொள்வதற்கு, ஆட்டோமேஷன் பற்றிய அவரது பார்வையை நாம் முதலில் பார்க்கலாம். பாபேஜின் காலத்தில், “எஞ்சின்” என்ற சொல் “இயந்திரம்” என்பதற்கு இணையான சொல்லாக இருந்தது. அது பாரம்பரியமான தொழிலாளர் நடைமுறைகளை மாற்றியமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட தொழில்துறை இயந்திரங்களின் பெருக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்டது.
உழைப்பைத் தானியக்கம் செய்யும் பிற இயந்திரக் கருவிகளுடன் அவரது இயந்திரங்களும் இடம் பெற்றன. அவை அறிவு சார்ந்த (உடல் உழைப்பு அல்லாத) உழைப்பின் தானியக்கத்தை நோக்கமாகக் கொண்டுள்ளதால் வேறுபடுகின்றன. பாபேஜ், தனது இயந்திரங்கள் உட்பட ஆட்டோமேஷனும் உழைப்புப் பிரிவைச் சார்ந்தது என்று பொதுவாகப் புரிந்துகொண்டார்.32 அதன் செயல்முறைகளைச் செயல்படுத்துவதற்கு கருவிகளும் இயந்திரங்களும் பயன்படுவதை உழைப்புப் பிரிவு பரிந்துரைப்பதை அவர் கவனித்தார்.
சில எளிய கருவிகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு செயல்முறையும் செய்யப்பட்டால், ஒரு இயங்கு சக்தியால் உந்தப்படும் இந்தக் கருவிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, ஒரு இயந்திரமாகிறது.33 பாபேஜைப் பொறுத்த வரையில், உழைப்பை தர்க்க ரீதியாகப் பிரிப்பது, அதாவது ஒவ்வொரு பணியின் விவரக்குறிப்பிற்கும் கவனிக்கக்கூடிய, அளவிடக்கூடிய மற்றும் “அதிகார மட்டத்திலிருந்து” கட்டுப்படுத்தக்கூடிய வேலை செயல்முறையை (மற்றும் அதைச் செய்பவர்களை) வழங்குவது, ஆட்டோமேஷன் செய்வதை இயலச் செய்வதற்கான நிலையாகும்.
எனவே, அறிவு சார்ந்த உழைப்பை தானியக்கமாக்கும் இயந்திரங்களை வடிவமைப்பதற்கு, பாபேஜ் முதலில் தொழிலாளர் பிரிவு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளைப் பின்பற்ற (அல்லது உருவாக்க) வேண்டியிருந்தது.
சார்லஸ் பாபேஜ்
பாபேஜ் தனது இயந்திரங்களின் இரண்டு முக்கியப் “பதிப்புகளை” உருவாக்கினார். ஒவ்வொன்றையும் பல முறை திரும்பத் திரும்ப மாற்றியமைத்து உருவாக்கினார்: “டிஃபெரன்ஸ் எஞ்சின்”னைத் தொடர்ந்து அவரும் அடா லவ்லேஸும் இணைந்து உருவாக்கியது “அனாலிடிகல் எஞ்சின்.”34 பாபேஜ் தனது டிஃபெரன்ஸ் எஞ்சினை வடிவமைப்பதற்காக, முன்னணி சிவில் இன்ஜினியரான காஸ்பார்ட் டி ப்ரோனி, பிரான்சின் தொழிலாளர் பிரிவுக்காக உருவாக்கிய வார்ப்புருகளை எடுத்துக்கொண்டார்.
பாபேஜ் இந்த இயந்திரத்தை “டி ப்ரோனி’ஸ் சிஸ்டம் ஆஃப் மெக்கானிக்கல் அனலாக்” ஆகப் பார்த்தார்.35 புரட்சிக்குப் பின்னர் நாடு முழுவதும் ஒரே மாதிரியான அளவீடுகளை நடைமுறைபடுத்தும் பிரெஞ்சு அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக, டி ப்ரோனி பிரஞ்சு நிலப் பத்திரப் பதிப்புத் துறைக்கு ஒரு பெரிய சிக்கலான மடக்கை மற்றும் முக்கோணவியல் அட்டவணைகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்.
அவர் பணியை ஏற்றுக்கொண்டபோது, டி ப்ரோனிக்கு அதை எப்படிச் செய்வது என்பது பற்றி உறுதியாகத் தெரிந்திருக்கவில்லை – அதைச் செய்வதற்குப் போதுமான கணிதவியலாளர்களும் இல்லை. ஆனாலும் பணி தொடர்ந்தது, டி ப்ரோனிக்கு ஆடம் ஸ்மித்தின் வெல்த் ஆஃப் நேஷன்ஸின் நகல் கிடைத்தது. அதை அடிப்படையாகக் கொண்டு கணக்கீடு செய்யும் பணியில் வேலைப் பிரிவைப் பயன்படுத்தினார். அவர் மனிதக் “கணக்கீட்டாளர்களை” மூன்று படி நிலைகளாகப் பிரித்தார்.
அதில் “குறைந்த திறன்” கொண்ட மிகப்பெரிய நிலை 60 முதல் 80 எழுத்தர்களை உள்ளடக்கியதாக இருந்தது (அவர்களில் பலர் பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னர் பிரபுக்களுக்கு சிகையலங்காரம் செய்யும் நிபுணர்களாக இருந்து பின்னர் வேலை இழந்தவர்கள்).36 ஒரு சில “மிகவும் திறமையான” கணிதவியலாளர்கள் நடுவிலும் கீழ் மட்டத்திலும் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உருவாக்குவதற்குப் பணியமர்த்தப்பட்டனர்.
சிகையலங்கார நிபுணர்கள்
பாபேஜின் டிஃபெரன்ஸ் எஞ்சின்கள் “குறைந்த திறமையான” கணிதவியலாளர்கள், 60 முதல் 80 முன்னாள் சிகையலங்கார நிபுணர்கள் ஆகியோரின் வேலைகளைத் தானியக்கமாக்குவதற்காகவே தொழிலாளர் பிரிவு மற்றும் கட்டுப்பாட்டு வார்ப்புருக்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டன. 37பாபேஜின் இரண்டாவது இயந்திரமான அனாலிட்டிகல் இன்ஜின் அடா லவ்லேஸுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டதாகும்.
தொடக்கத்திலேயே நவீன கணக்கீட்டு முறைகளை அடைவதற்காக உருவாக்கப்பட்ட இந்த இயந்திரமானது தொழில்துறை-சகாப்தத்தின் தொழிலாளர் பிரிவின் சிக்கலான கட்டமைப்புகளைச் சார்ந்திருந்த தொழிலாளர்-தானியங்கி சாதனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்: ஜக்கார்ட் லூம். இது பழைய பொறிமுறை-தறி வடிவமைப்புகளின் பரிணாம வளர்ச்சியாகும்.
சிக்கலான நெசவு முறைகளை சீராக்கவும் அமலாக்கவும் பஞ்ச் கார்டுகளை இந்த இயந்திரம் பயன்படுத்திய அதே வேளையில், அதை கவனிக்கும் பணியில் தொழிலாளர்களைப் பணியமர்த்தவும் ஒழுங்குபடுத்தவும் செய்தது. (தனது பெயரையே தான் கண்டுபிடித்த இயந்திரத்திற்குப் பெயரிட்ட ஜக்கார்ட், அவரது தறியால் வேலை இழந்ததால் ஆத்திரமடைந்த தொழிலாளர்களால் ஒருமுறை ஆற்றில் தூக்கி எறியப்பட்டார்.)
தறியால் ஈர்க்கப்பட்ட பஞ்ச் கார்டுகள்தான், நிரலாக்கக்கூடிய அனாலிடிகல் எஞ்சின் செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட்ட “நிரலை” உருவாக்கியது.39 முந்தைய டிஃபெரன்ஸ் எஞ்சினுடன் ஒப்பிடும்போது அனாலிடிகல் எஞ்சினின் நன்மைகள், அவற்றின் முன்னோடிகளை விட அதிகமான பணிகளைச் செய்யும் (அல்லது தானியங்கும்) அதே நேரத்தில் அவற்றின் தொழிலாளர்களின் பணியை ஒழுங்குபடுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ளன.
இந்த நன்மைகளைப் பிரதிபலிக்கும் வகையில், இத்தாலிய விஞ்ஞானி லூய்கி ஃபெடெரிகோ மெனாப்ரியாவின் அனாலிடிகல் எஞ்சின் பற்றிய விளக்கம் நமக்கு மிகவும் முழுமையான சமகால புரிதல் ஒன்றை வழங்குகிறது, இது டி ப்ரோனியின் மூன்றாவது நிலை மட்டுமன்றி இரண்டாம் நிலைக் கணிதத் தொழிலாளர்களுக்கு மாற்றாகும் திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறுகிறார்.
“இயந்திரம் உருவாக்கப்பட்டவுடன்… சில எளிய குறிப்புகள் மூலம், அவற்றைச் செயல்படுத்துவதை ஒரு தொழிலாளிக்கு ஒப்படைப்பது எளிதாக இருக்கும்” என்றும் அவர் தெளிவுபடுத்துகிறார். இது “தூரத்தில் இருந்து கொண்டே நிர்வாகம்” செய்வதை எளிதாக்குவதில் இயந்திரத்தின் பங்கைச் சுட்டிக்காட்டுகிறது.
இயந்திரம் மேற்பார்வையாளர்களிடமிருந்து (“முதல் அடுக்கு”) வழிமுறைகளைப் புரிந்து கொள்கிறது, மேலும் தொழிலாளர்கள் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிவதோடு மட்டுமல்லாமல், கீழ்ப்படிதலை அமலாக்குவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு இயந்திரத்தைப் பராமரிக்கவும் பணியமர்த்தப்படுகிறார்கள்.
“வேலைக்கான திறனைக் குறைப்பதில்” இயந்திரத்தின் பங்கும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது: விவரக்குறிப்பு, நிரலாக்கப் பணியும் “அதிகார மட்டத்திலிருக்கும்” “திறமையான” தொழிலாளர்களால் செய்யப்படுவதுடன், இயந்திரத்தையே ஒரு தொழிலாளிக்கு “ஒப்படைக்கலாம்”. அதற்கு எந்தவிதமான சிறப்பான அறிவு அல்லது “திறன்” இல்லாமல் அவர் சாதனங்களை எளிதாக மேற்பார்வையிட முடியும்.
தொழிலாளர்கள் origin stories plantations computers 3
பாபேஜின் இரண்டு இயந்திரங்களும் அவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களைக் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டன. பாபேஜின் வற்புறுத்தலின் காரணமாக, அவற்றின் வடிவமைப்பு சிக்கல் பெருமளவில் அதிகரித்ததுடன் அவற்றின் செயலாக்க எளிமையும் குறைந்து, செயல்முறை முழுவதும் அவற்றின் கணக்கீட்டின் முடிவுகளை அச்சிட வேண்டும்.
அத்தகைய தனிச்சையான ஆவணங்கள் பிழை திருத்துவதற்கு எளிமையாக இருக்கிறது. ஆனால் இதுவும், சந்தேகத்திற்கு இடமின்றி, தொழிலாளர்களைக் கண்காணிப்பதற்கான ஒரு முறையாகும். இயந்திரங்களை இயக்குவதற்காக பணியமர்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தையும் தவறிழைக்கக்கூடிய சாத்தியமான செயல்களையும் பதிவு செய்தது.
நாம் ஏற்கனவே பார்த்தது போல் பாபேஜின் நோக்கம் கண்காணிப்பது மட்டுமல்ல கண்காணிப்பை தானியக்கமாக்குவதும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவரது பல பொறிமுறை பங்களிப்புகளில் ஒன்று எர்லி டைம் கிளாக்கான “டெல்-டேல்” ஆகும். இது ஒரு தொழிலாளி பணிக்கு வந்திருப்பதை அல்லது வராமலிருப்பதைப் பதிவு செய்யும் வேலையைச் செய்கிறது, மேலும் “தொழிலாளி எதையாவது தவறவிட்டாரா என்பதை உரிமையாளருக்குத் தெரிவிக்கிறது.”42
பாபேஜின் எழுத்தில் பெரும்பகுதி ஆட்டோமேஷனையும் இயந்திரமயமாக்கலையும் புகழ்ந்து பாடும் அதே வேளையில், அவர் குறிப்பிடும் “மனித முகவர்களின் கவனக் குறைவு, சும்மா இருக்கும் போக்கு அல்லது நேர்மையின்மைக்கு எதிராக” தானியக்கம் வழங்கும் ஒழுங்குமுறை சரிபார்ப்பு உள்ளிட்ட நன்மைகள் எப்பொழுதும் முதலாளிகளுக்கே கிடைக்கின்றன.
ஆன் தி எகானமி ஆஃப் மெஷினரி அண்டு மனுஃபாக்சர்ஸ் நூலின் ஒரு அத்தியாயத்தில் சுருக்கமாக, ஆட்டோமேஷனால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் தீமைகளை அவர் ஒப்புக்கொள்கிறார்.
அங்கும் தொழிலாளர்கள் அமைப்பாகத் திரள்வதை விமர்சிக்கிறார். தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும்போது, முதலாளிகள் அவநம்பிக்கை அடைகிறார்கள் என்றும், இந்த விரக்தியானது வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் உழைப்பிற்கு மாற்றாக ஒன்றைக் கொண்டுவருவதற்கு அதிக ஊக்கத்தை அளிக்கிறது என்றும் அவர் வாதிடுகிறார்.
இத்தகைய சூழ்நிலைகளில், புதிய இயந்திர கண்டுபிடிப்புகள் உருவாகின்றன. அவை தொழிலாளர்களுக்கு மாற்றாக உதவுவதுடன் முதலாளிகள் ஆட்டோமேஷன் மூலம் வேலை நிறுத்தத்தை முறியடிக்கவும் அனுமதிக்கிறது. பாபேஜைப் பொறுத்தவரை, அது புத்தாக்கங்களை ஊக்குவிப்பதாக இருந்தாலும் தொழிலாளர்களை ஒழுங்கமைப்பதும் திரும்பப் பெறுவதும் தொழிலாளர்களுக்குப் பயனளிக்காது என்பதை இது நிரூபிக்கிறது.
ஆட்டோமேஷனின் ஒழுங்குமுறை செயல்பாடு, தொழிலாளர் பிரிவின் ஒழுங்குமுறை அம்சங்களைக் கட்டமைத்து விரிவுபடுத்தும் கட்டுப்பாட்டுக் கருவியே ஆகும் என்பது பற்றிய பாபேஜின் விழிப்புணர்வு இங்கே வெளிப்படுத்தப்படுகிறது.
பாபேஜின் இயந்திரங்களின் கட்டமைப்புகள் அவரது தொழிலாளர் கட்டுப்பாட்டுக் கோட்பாடுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன, மேலும் அவரது இயந்திரங்கள் தொழிலாளர்களை அவர் ஒழுங்குபடுத்த முயன்ற பல வழிமுறைகளில் ஒன்றாகச் செயல்பட்டன. மேலும் தொழில்துறை தொழிலாளர் ஒழுக்கம் என்ற அவரது பெரிய திட்டத்தின் அடித்தளமாக தோட்ட தர்க்கங்களும் தொழில்நுட்பங்களும் உள்ளன.
சுதந்திரத்தை மறுவரையறை செய்தல் origin stories plantations computers 3
பாபேஜின் தொழிலாளர் கட்டுப்பாட்டுக் கோட்பாடுகளையும் கணக்கீட்டிற்கான அவரது கட்டமைப்புகளையும் இணைப்பது ஒரு ஒருங்கிணைந்த நோக்கமாகும்: பிரிட்டிஷ் பேரரசுக்கு தொடர்ந்து உற்பத்தி செய்யக்கூடிய “சுதந்திரமான” உழைப்பின் ஒழுக்கம்.
தொழிலாளர் கட்டுப்பாட்டிற்கான வார்ப்புருக்கள், கம்ப்யூட்டிங்கில் பாபேஜின் பங்களிப்பை வடிவமைத்தது, அதற்கு தோட்டத்தில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் உந்துதலாக இருந்தது, அவை ஏற்கனவே தொழில்துறை தொழிற்சாலைகளில் கிளர்ச்சி செய்யும் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவதற்காக தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டன.
கணக்கீடு, தோட்டத் தொழில்நுட்பம், தொழில்துறை தொழிலாளர் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகள், நல்ல நோக்கங்களைக் கொண்டவர்களால் கட்டுப்படுத்தப்படும் இயந்திரங்கள் நேர்மறையான விளைவுகளை உருவாக்கும் என்று அனுமானித்துக் கொண்டு தற்போது ஆட்டோமேஷன் மற்றும் கணக்கீட்டு இயந்திரங்களை யார் கட்டுப்படுத்துவது என்பதற்கு அப்பாற்பட்ட கேள்விகளை எழுப்புகிறது.
கணக்கீட்டின் முக்கிய தர்க்கங்களைக் கட்டமைக்கும் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பங்களை ஆராய்ந்து, உகந்த சூழலில் கணக்கீட்டுத் தொழில்நுட்பங்கள் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதை கவனத்தில்கொண்டு நாம் மிகவும் அடிப்படையான விசாரணைகளில் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
நமது தொடர்புகளுக்கும் நடைமுறைகளுக்கும் இடமளிக்கும் வகையில் கட்டமைக்கும் ஒரு கற்பனையான வெளி. பாபேஜின் இயந்திரங்களில் நாம் பார்ப்பது போல, இந்த வெளி, தொழிலாளர் பிரிவு, கண்காணிப்பு, “அதிகார மட்டத்திலிருந்து” கட்டுப்பாடு போன்ற தோட்டத் தொழில்நுட்பங்கள் இருப்பதை யூகிக்கிறது: பாபேஜின் இயந்திரங்கள் இந்த சூழல்களுக்குள் மட்டுமே “வேலை செய்கின்றன”.
கணக்கீடு மற்றும் தொழில்துறை தொழிலாளர் பிரிவுகளில் எச்சமாக இருக்கும் தோட்டத்தின் மாயத் தோற்றம், தொழில்துறையில் “சுதந்திரமான” தொழிலாளர் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யவும் அந்தக் குறிப்பிட்ட வகையான “சுதந்திரமான” பணிச் சூழலை உருவாக்கி போட்டிச் செயல்முறையை அங்கீகரிக்கவும் வேண்டியதன் அவசியத்தையும் பேசுகிறது.
அவ்வாறு செய்வதற்கு, “சுதந்திரமான” உழைப்பை அச்சுறுத்தும் கருப்பின அடிமை முறையை நாம் நேரடியாக எதிர்கொண்டு இனம், உழைப்பு மற்றும் கணக்கீட்டு தொழில்நுட்பங்களுக்கு இடையில் மூலோபாய ரீதியாக துண்டிக்கப்பட்ட தொடர்புகளை மீண்டும் உருவாக்க வேண்டும்.
இத்தகைய பகுப்பாய்வு, மாற்றத்திற்கான உந்துதல்களை அடையாளம் காணவும் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பங்களின் முனைகளில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதிலிருந்து சுதந்திரத்தின் வகைகளை மறுவரையறை செய்வதற்கான உரிமையைக் கோரும் எதிர்காலத்தை வெளிப்படுத்துவதில் கவனத்தை மாற்றவும் உதவும் என்பது எனது நம்பிக்கையாகும்.
மொழிபெயர்ப்பாளர்: ஜெயசந்திரன் மாசிலாமணி
ஆசிரியர்: மெரிடித் விட்டேக்கர்
ஆசிரியர் குறிப்பு:
மெரிடித் விட்டேக்கர் நீண்ட காலம் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஒரு அறிஞர் ஆவார். அவருடைய பணி பொருளாதார அரசியலும், கணினித் தொழில்நுட்பமும் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் அதைக் கட்டுப்படுத்தும் தொழில்துறையையும் ஆய்வு செய்வதாகும்.
விட்டேக்கர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சொல்லாட்சிக் கலையில் இளங்கலைப் பட்டத்தை முடித்தார். அவர் சிக்னல் அறக்கட்டளையின் தலைவராகவும் அவர்களின் இயக்குநர்கள் குழுவிலும் பணியாற்றுகிறார். நவம்பர் 2021 இல், விட்டேக்கர் அமெரிக்க ஃபெடரல் டிரேட் கமிஷனில் செயற்கை நுண்ணறிவுக்கான மூத்த ஆலோசகராக சேர்ந்தார்.
அவர் முன்பு நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மின்றோ ஆராய்ச்சி பேராசிரியராகவும், அதன் ஏஐ நௌ இன்ஸ்டிட்யூட்டின் துறை இயக்குநராகவும் இருந்தார். அவர் 2006-ல் கூகுளில் சேர்ந்தார். இணைய நடுநிலை அளவீடு, தனியுரிமை, பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவின் சமூக விளைவுகள் ஆகியவை தொடர்பான சிக்கல்களில் ஓப்பன் சோர்ஸ் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து கூகிள் ஓபன் ரீசர்ச்சை நிறுவினார்.
2018 இல் நடந்த உலக உச்சி மாநாட்டில் ஏஐ பற்றி அவர் உரை நிகழ்த்தினார். அவர் அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியனுக்காக எழுதியுள்ளார். எம்-லேப்பை நிறுவியவர்களுள் விட்டேக்கரும் ஒருவராவார்.
அவர் வெள்ளை மாளிகை, ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன்ஸ், ஃபெடரல் டிரேட் கமிஷன், ஐரோப்பிய பாராளுமன்றம் உள்ளிட்ட பல அரசாங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கு செயற்கை நுண்ணறிவு, இணையக் கொள்கை, தனியுரிமை, பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜூன் 2019 இல் “செயற்கை நுண்ணறிவு: சமூகம் மற்றும் நன்னெறி தாக்கங்கள்” குறித்து யு.எஸ் ஹவுஸ் கமிட்டியின் முன்பும் காங்கிரஸின் முன்பும் விட்டேக்கர் சாட்சியம் அளித்துள்ளார். அவரது சாட்சியத்தில், ஏஐ அமைப்புகள் ஆராய்ச்சியில் சார்பு நிலையும் தீங்கு விளைவிக்கும் வடிவங்களும் பிரதிபலிப்பதை விட்டேக்கர் காட்டினார்.
பாலியல் அத்துமீறல்கள், குடிமக்கள் கண்காணிப்பு தொடர்பாக கூகிளின் கொள்கைகளை எதிர்த்து 2018 ஆம் ஆண்டில் உலகளவில் நடத்தப்பட்ட கூகிள் வெளிநடப்பின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக விட்டேக்கர் இருந்தார். கூகிளில் இருந்து அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சக ஊழியர்களிடம் விட்டேக்கர் ஒரு குறிப்பைப் பகிர்ந்து சென்றார்.
அதில் அவர் தொழிநுட்பத் தொழிலாளர்கள் ஒரு அமைப்பாகத் திரள்வதன் அவசியத்தை குறிப்பிட்டிருந்தார். தொழில்நுட்பத்துறையில் பாலியல் துன்புறுத்தல், பாலின சமத்துவமின்மை, இனவெறி ஆகியவற்றை எதிர்த்து சிலிக்கான் பள்ளத்தாக்கில் தொழிலாளர்கள் ஒன்றிணைவதை ஊக்குவித்தவர் விட்டேக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தோட்டத் தொழிலாளர்கள் தொழில்துறை அடிமைகளாக மாறியது எப்படி? – பாகம் 1!
தோட்டத் தொழிலாளர்கள் தொழில்துறை அடிமைகளாக மாறியது எப்படி? – பாகம் 2!
origin stories plantations computers 3