ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்! மினி தொடர் – 6

Published On:

| By Balaji

18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்த வழக்கின் இணை வழக்கு என்று கருதப்படுகிற, ஓ.பன்னீர் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற வழக்கு இன்று (பிப்ரவரி 13) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கைத் தாக்கல் செய்த திமுக கொறடா சக்கரபாணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் பலமான வாதங்களையும் கேள்விகளையும் முன் வைத்தபோது இதுபற்றி தமிழகச் சட்டமன்ற சபாநாயகருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. வழக்குத் தொடுத்த சக்கரபாணி தரப்பும் சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியது, நீதிமன்றமும் நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால், சபாநாயகர் இந்த நோட்டீஸ்களை வாங்க மறுத்துவிட்டார். இதை நீதிமன்றத்தைத் தவிர்த்தல் என்கிறார்கள். சட்ட பாஷையில் இதை abandoned jurisdiction என்கிறார்கள்.

இந்த வழக்கு கடந்த அக்டோபர் 12ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது கபில் சிபல் கேட்ட கேள்விகள் இன்னும் நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்படாமலேயே நிற்கின்றன.

அன்று கபில் சிபல் நீதிமன்றத்தில் பேசிய வார்த்தைகளை இன்று மீண்டும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

“இந்த வழக்கில் ஏற்கெனவே நீதிமன்றம் சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. எங்களையும் சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பச் சொன்னீர்கள். ஆனால், நாங்கள் அனுப்பிய நோட்டீஸை சபாநாயகர் வாங்க மறுத்துவிட்டார். நாங்கள் கொடுக்கும் நோட்டீஸை வாங்க மறுக்கும் சபாநாயகர், ஓ.பன்னீர் தரப்புக்கு மட்டும் நோட்டீஸ் வழங்க மறுத்துவருகிறார். சபாநாயகர் இந்த வழக்கைத் தள்ளிப்போடுவதற்கே முயற்சி செய்கிறார்.

நான் சபாநாயகருக்குச் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.

1. பிப்ரவரி 18, 2017 அன்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அரசு கொறடா உத்தரவிட்டாரா இல்லையா?

2. அரசு கொறடாவின் உத்தரவை மீறி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தார்களா இல்லையா?

3. அரசுக்கு எதிராக வாக்களித்த அந்த 11 உறுப்பினர்களையும் கட்சித் தலைமை 15 நாள்களுக்குள் மன்னித்ததா?

4. மார்ச் 2017இல் அரசுக்கு எதிராக வாக்களித்த 11 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் புகார் அளித்தார்களே… ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

இந்த நான்கு கேள்விகளுக்கும் சபாநாயகர் தரப்பு பதில் சொல்ல வேண்டும்” என்று தனது வாதங்களை முன்வைத்த கபில் சிபல் தொடர்ந்தார்.

“இந்த நீதிமன்றத்துக்கு ராஜேந்திர சிங் ரானா வழக்கை நினைவுபடுத்த விரும்புகிறேன். இதேபோன்ற சூழல் அந்த வழக்கில் இருந்த நிலையில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு என்ன சொன்னது தெரியுமா? ‘குறிப்பிட்ட அந்த உறுப்பினர்கள் ஒரே ஒருநாள்கூடப் பதவியில் இருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது’ என்று கூறியது நீதிமன்றம். அந்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புக்கு இணங்க இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும்” என்று தனது வாதத்தை நிறைவு செய்தார் கபில் சிபல். அப்போது சபாநாயகர் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், பதிலளிக்க அவகாசம் கேட்டார்.

ராஜேந்திர சிங் ரானா வழக்கில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அனைத்து நீதிபதிகளும் ஒருமனதாக சொன்ன தீர்ப்பு என்னவென்றால், “சட்டப்படி சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் ஒருவர் தொடர முடியாது என்றால் அந்த உறுப்பினரை சபாநாயகர்தான் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று இல்லை. சபாநாயகர் abandoned jurisdiction என்ற நிலைப்பாட்டில் இருக்கும்பட்சத்தில் நீதிமன்றமே அவர்களைத் தகுதிநீக்கம் செய்யலாம்” என்பதே அந்தத் தீர்ப்பின் சாரம்.

இன்று பிப்ரவரி 13ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் கடந்த வாரம் வரையிலும் நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பு பதில் அளிக்கவில்லை என்பதே நீதிமன்ற வட்டாரங்களில் கிடைக்கும் தகவல். அதாவது சபாநாயகர் தரப்போ, சபாநாயகரின் செயலாளர் தரப்போ, யாரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற வழக்குத் தொடுக்கப்பட்டதோ அது தொடர்புடைய ஓ.பன்னீர் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களோ இன்னமும் இதற்கான பதில் அளிக்கவே இல்லை.

சட்டங்களுக்கெல்லாம் தாய் போன்றது அரசியல் அமைப்புச் சட்டம். நீதிமன்றத்தின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காதது என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தை அவமதிப்பது போன்றது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் என்ன சொல்கிறது என்பதில்… இதோடு தொடர்புடைய 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கின் போக்கும் இருக்கிறது.

தொகுப்பு: ஆரா

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட் தொடரும்…

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 1

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 2

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 3

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 4

ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்… – மினி தொடர் 5

Countdown to AIADMK rule starts - Mini Series 3

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel