வெறுப்பரசியலை வேரறுக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக வெற்றி!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

எந்தவொரு தேர்தலிலும் ஆளும் கட்சி தோற்று, எதிர்க்கட்சி வெற்றி பெறுவது என்பது நடப்பதுதான். இதை அதிருப்தி வாக்குகளின் விளைவு, ஆங்கிலத்தில் ஆண்டி இன்கம்பென்ஸி ஓட் (ஆட்சிக்கு எதிரான வாக்கு) என்று கூறுவார்கள். ஒருவேளை தேர்தலில் வென்று ஆளும் கட்சியே தொடர்ந்து ஆட்சி செய்வது என்பது நிகழ்ந்தாலும், ஒரு சில தேர்தல்களுக்குப் பின் மாற்றத்தை மக்கள் நாடவே செய்வார்கள் என்பதையும் நாம் கண்டுள்ளோம்.

இதற்கான காரணம், மக்களுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தையும், அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவது என்பது எந்த ஆட்சிக்குமே கடினமானதுதான். இந்திய சமூகங்கள் பல்வேறு பொருளாதார, ஜாதீய அடுக்குகளைக் கொண்டவை, ஏற்றத்தாழ்வு நிறைந்தவை. இதில் சமத்துவத்தையும், சமூக நீதியையும் முழுமையாக சாத்தியமாக்குவது கடினமானது. வறுமை பெருமளவு குறைந்திருந்தாலும், மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் பெருவாரியான மக்கள் இன்னல்கள் நிறைந்த வாழ்க்கையினையே மேற்கொள்கிறார்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் வசதி படைத்த பிரிவினருக்கு மேலும் ஊட்டத்தை அளிக்கும் அளவு அடித்தட்டு மக்களுக்குச் சென்று சேர்வதில்லை. அதனால் பல்வேறு அரசியல் கட்சிகளும், குறிப்பாக மாநில அரசியலில், அடித்தட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை அறிவிப்பதுடன், அவற்றை செயல்படுத்துவதும் அவசியமான தேவையாக உள்ளது. அதே நேரம், அதற்கான நிதி ஆதாரங்களை வரி விதிக்கும் அதிகாரமில்லாத மாநில அரசுகளால் உருவாக்கிக் கொள்வது கடினமாகவே இருக்கிறது.

மதவாத அரசியல்

இந்த நிலையில்தான் பாரதீய ஜனதா கட்சி பெருவாரியான மக்கள் ஆதரவைப் பெற மத அடையாள அரசியல் செய்கிறது. சிறுபான்மை மதப் பிரிவினர், குறிப்பாக முஸ்லிம்கள் மீது வெறுப்பைத் தூண்டுவதன் மூலம், பெரும்பான்மையாக இந்துக்கள் என்று அடையாளப்படுத்தப்படும் சமூகப் பிரிவினரை ஒருங்கிணைக்க முயற்சி செய்கிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், வளர்ச்சியின் பலன்களை பகிர்ந்தளிப்பது ஆகியவற்றிலிருந்து மக்களைத் திசை திருப்ப அது மத அடையாள அரசியலை முன்வைக்கிறது.

இந்திய சுதந்திரத்துக்கு முன்பிருந்தே ஆர்.எஸ்.எஸ், ஹிந்து மகாசபா ஆகியவற்றின் அரசியல் இதுதான் என்றாலும், இருபத்தோராம் நூற்றாண்டில் புதியதொரு வேகத்துடன் தேர்தல்களை வெல்ல பாரதீய ஜனதா கட்சி வெறுப்பரசியலை நாடுகிறது எனலாம். இதற்கு சர்வதேச அளவில் செயல்படும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களை வசதியாக சுட்டிக்காட்டி அச்சுறுத்துகிறது . இந்தியா முழுவதும் இந்த அணுகுமுறை இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் தன்மைக்கேற்ப தனிப்பட்ட பிரச்சினைகளை எழுப்புகிறது.

உதாரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகாவில் 2015-2017 ஆண்டுகளில் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கெளரி லங்கேஷ் ஆகிய நான்கு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் இந்து மதவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்டனர். இந்துராஷ்டிரம் அமைப்பதற்கு எதிரானவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்றெல்லாம் அத்தகைய அமைப்புகளின் பிரசுரங்களில் எழுதப்படுவதை பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

வெகுஜன அளவில்  சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் (முக்காடு) அணிவதை தடை செய்து கலவரத்தை உருவாக்கியது. ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி வீர மரணமடைந்த திப்பு சுல்தானை மத மாற்றம் செய்தவர் என்று புரளி பரப்பி, இந்துக்களுக்கு எதிரானவராக சித்தரிக்க முயற்சி செய்தது.

அண்டை மாநிலமான கேரளாவில் முஸ்லிம்கள் அதிகம் இருப்பதையும், அங்கே முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் அதிகம் ஊடுறுவதாகவும் கூறி வெறுப்புப் பிரச்சாரம் மேற்கொண்டது. முஸ்லிம்கள் தங்களுக்கு வாக்களிக்காவிட்டால் பரவாயில்லை என்று வெளிப்படையாக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா கூறினார். ஒரு முஸ்லிம் வேட்பாளரைக்கூட பாஜக நிறுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலப் பெண்கள் வெகுகாலமாக செவிலியர் பணியில் திறமை மிக்கவர்களாக உலகெங்கும் சென்று பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள இஸ்லாமிய சமூகத்தினர் அரேபிய நாடுகளில் பணி செய்து அனுப்பும் பணம் கேரள, இந்திய பொருளாதாரத்துக்கு வலு சேர்த்துள்ளது. உண்மை இப்படியிருக்க ஒட்டுமொத்தமாக கேரளாவையே இஸ்லாமிய தீவிரவாதிகளின் வேட்டைக்காடாக தவறாகச் சித்தரிக்கும்படியாக “தி கேரளா ஸ்டோரி” என்ற படம் ஒன்று பாஜக ஆதரவுடன் வெளிவந்தது. பிரதமரே இந்தப் படத்தை ஆதரித்து கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.

ஏன் இந்த வெறுப்புப் பிரச்சாரம்?  

பாரதீய ஜனதா கட்சியை கர்நாடகாவில் 2008ஆம் ஆண்டு முதல் முறையாக ஆட்சியில் அமரச் செய்தவர் பி.எஸ்.எடியூரப்பா. ஆனால், இவருக்கு எதிராக  ஊழல் குற்றச்சாட்டுகளில் தீர்ப்பளிக்கப்பட்டதால் பதவி விலக நேர்ந்தது. பின்னர் அதன் காரணமாக பாரதீய ஜனதா கட்சியிலிருந்தே விலகி தனிக் கட்சி கண்டார். அடுத்த வந்த 2013 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. எடியூரப்பா இல்லாமல், அவருக்குள்ள லிங்காயத்து சமூகத்தினரின் ஆதரவு இல்லாமல், தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால் பாஜக இவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டது.

Karnataka election congress victory

ஆனாலும்கூட 2018ஆம் ஆண்டு தேர்தலில் அவரால் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. பதவிவேற்றவுடனேயே பெரும்பான்மை இல்லாததால் ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் கூட்டணி அமைச்சரவை அமைத்து மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி முதல்வரானார். ஆனால், கூட்டணியில் பல விரிசல்கள் இருந்தன. எடியூரப்பா ஓராண்டுக் காலத்திற்குள் வரலாறு காணாத குதிரை பேரத்தில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்த்தார். அவர் தலைமையில் ஆட்சி அமைத்தார்.

இரண்டாண்டுகள் கழித்து அவருக்கு வயதானதை காரணம் சொல்லி பாரதீய ஜனதா கட்சி தலைமை அவரை பதவி விலகச் சொன்னது. அவருக்கு பதில் எஸ்.ஆர்.பொம்மை முதல்வரானார். அவர் ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடியது. அரசாங்க ஒப்பந்தக்காரர்கள் தங்களிடம் நாற்பது சதவிகிதம் கமிஷன் கேட்கப்படுவதாக வெளிப்படையாக அறிவித்தார்கள். ஒரு ஒப்பந்தக்காரர் ஊழலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தற்கொலையே செய்து கொண்டார்.  

திறமையற்ற ஆட்சி, வரைமுறையற்ற ஊழல் என்று கடுமையான அவப்பெயர் ஈட்டிய ஆட்சியை, கட்டுமான வளர்ச்சியை மட்டும் காட்டி காப்பாற்ற முடியாது என்பதால்தான் வெறுப்பரசியலில் தீவிரமாக ஈடுபட்டார்கள். கர்நாடக மாநில ஊடகங்களும் பெருமளவு பாஜக-வுக்கு ஆதரவாகத்தான் இயங்குபவை எனப்படுகிறது.

புனித அரசியல் பிம்பம்

பாரதீய ஜனதா கட்சியிலும் உட்கட்சிப் பூசல்களும், ஊழல் பெருச்சாளிகளும் அதிகம். ஆனால் காங்கிரஸ் கட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்போது அவற்றை பூதாகரமான பிரச்சினையாக்கி தேர்தல் களத்தை வடிவமைக்கும் ஊடகங்கள், பாஜக மீதான குற்றச்சாட்டுகளைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுவதே வழக்கம்.

உதாரணமாக ராஜீவ் காந்தி ஆட்சியில் போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்கியதில் ஊழல் நடந்துவிட்ட து என்று பெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டன ஊடகங்கள். ராஜீவ் காந்தி 1989 தேர்தலில் தோல்வி அடையும் அளவு இந்த பிரச்சாரம் நடந்தது. ஆனால், அதன் பின்னர் அந்த குற்றச்சாட்டுகள் எதுவுமே நிரூபிக்கப்படவில்லை. ஒரு சில தரகர்கள் கமிஷன் பெற்றார்கள் என்று கூறப்பட்டதே தவிர அதனால் இந்திய அரசுக்கு என்ன இழப்பு என்பது நிறுவப்படவில்லை.

அதே போல தொலைபேசி அலைக்கற்றை விற்பனை தொடர்பாக 2G ஊழல் என்று மிகப்பெரிய பிரச்சாரம் மன்மோகன் அரசுக்கு எதிராகவும், அதில் அங்கம் வகித்த தி.மு.க-வுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்டது. வினோத் ராய் என்ற கணக்காயர் உருவாக்கிய கற்பனை இழப்பான 1,72,000 கோடி ரூபாய் என்பது கடுமையாக பிரச்சாரம் செய்யப்பட்டது. இறுதியில் ஊழலுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது.  

Karnataka election congress victory

இவற்றுடன் ஒப்பிட்டால் ரஃபேல் விமான பேரத்தில் காங்கிரஸ் ஆட்சி போட்ட ஒப்பந்தத்தை ஏன் பாஜக அரசு மாற்றியது, பன்மடங்கு அதிக விலைக்கு வாங்க முன்வந்தது, அதில் அனில் அம்பானி எதற்காக இணைக்கப்பட்டார் என்ற பல கேள்விகளை காங்கிரஸ் கட்சியும், பத்திரிகையாளர்களும் எழுப்பினாலும், ரஃபேல் ஊழல் என்பதை ஊடகங்கள் பெரிது படுத்தவில்லை.

அதே போல மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் வியாபம் என்ற பெயரில் அரசுத் தேர்வுகளில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பது வெளியானாலும் அதனால் பாஜக கட்சிக்கோ, அந்த மாநில முதல்வர் சிவராஜ் செளஹானுக்கோ பெரிய அவப்பெயர் எதுவும் ஏற்படுவதில்லை. அவர்தான் இப்போதும் ஆட்சி செய்கிறார்.

குஜராத்தில் மோர்பி என்ற இடத்தில் தகுதியற்ற ஒரு நிறுவனத்தால் கட்டப்பட்ட தொங்கு பாலம் உடைந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். வேறு கட்சி ஆட்சியில் இது நடந்திருந்தால் பெரிய பிரச்சினையாகியிருக்கும். பாஜக ஆட்சி என்பதால் சுலபத்தில் மறக்கப்பட்டு விட்டது. இது ஓர் உதாரணம்தான். இன்னும் பல பிரச்சினைகளைக் கூற முடியும்.

இப்போது கெளதம் அதானியின் பிரம்மாண்ட பங்குச்சந்தை முறைகேடுகள், வங்கிகள், ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஆகியவை அவருக்கு வழங்கியுள்ள ஆதரவு ஆகியவை குறித்து கடுமையான கேள்விகள் எழுந்தாலும் ஊடகங்கள் இதையெல்லாம் பிரச்சினையாகாமல் பார்த்துக் கொள்கின்றன.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்று சிந்தித்தால் பாஜக சனாதன தர்மம். சமஸ்கிருதம், ராமர் கோயில், இந்து மதம், புண்ணிய பூமி என்று பழைய பார்ப்பனீய புனித சொல்லாடல்களைப் பேசுவதும், இந்தியாவின் கருத்தியல் மேலாதிக்க சக்திகளுக்கு, உயர்ஜாதி உயர்மத்தியதர வர்க்கத்துக்கு இது உவப்பாக இருப்பதும்தான்.

காங்கிரஸ் கட்சியும் சரி, பிற பார்ப்பனரல்லாதோரின் மாநிலக் கட்சிகளும் சரி மதச்சார்பின்மை, மக்கள் நலன் என்று பேசுகின்றன. பாஜக பேசும் பழமைவாத புனிதவாத சொல்லாடலைப் பேசுவதில்லை. பாஜக-வின் புனிதவாதம் ஊழல் குற்றச்சாட்டுகள் அதன் மேலே ஒட்டாமல் பார்த்துக் கொள்கிறது.

இதற்கு மாறாக அடித்தட்டு மக்கள் நலனை முன்னிறுத்தி அரசியல் செய்வதை மேல்தட்டு வர்க்கத்தினர் ரசிப்பதில்லை. நலத்திட்ட உதவிகளை “இலவசங்கள்” என்று சர்க்கார் பட இயக்குநர் முருகதாஸ் போல வெறுக்கின்றனர். பிரதமர் மோடி “ரேவ்டி கல்ச்சர்” என்று இலவசங்களைக் கண்டிக்கிறார். ஆனாலும் அவர் கட்சியும் உத்தரப் பிரதேசத்தில் தேர்தலைச் சந்திக்க இலவசங்களை அறிவித்தது.

மக்கள் நலன் அரசியல்

ஊடகங்கள் என்னதான் திரைபோட்டு மறைத்தாலும், மக்களுக்கு ஆட்சியின் குளறுபடிகள் நேரடியாகத் தெரிந்து விடுகிறது. அடித்தட்டு மக்கள் வெறுப்பரசியலை விரும்புவதில்லை. அமைதியான வாழ்க்கையை அது சீர்குலைப்பதை புரிந்துகொள்கிறார்கள். அவர்களுக்குப் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்குத்தான் வழிகள் தேவைப்படுகின்றன.

காங்கிரஸ் கட்சியும் சரி, அதனுடன் கூட்டுச் சேரும் மாநில கட்சிகளும் சரி, மக்கள் நல திட்டங்களைத்தான் அரசியலின் இலக்கு என நம்புகின்றன. மன்மோகன் சிங் காங்கிரஸ் ஆட்சிதான் நூறு நாள் வேலைத்திட்டம் எனப்படும் மன்ரேகா (MGNREGA) என்ற புரட்சிகர திட்டத்தை கிராமப்புறங்களில் நடைமுறைப்படுத்தியது. இது வறுமையிலிருந்து மக்களை காப்பதில் முக்கிய பங்கு வகித்தது. பாரதீய ஜனதா அரசு இந்தத் திட்டத்தை பலவீனப்படுத்தி வருகிறது.

தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகள் தொடக்கத்திலிருந்து சாமானியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையே அரசியலாகக் கொண்டுள்ளன. தி.மு.க பொது விநியோகத் திட்டத்தை விரிவாக்கி மேம்படுத்துவதில் முன்னோடியாக இருந்தது. நியாய விலைக்கடைகள் என்று அறியப்பட்ட இவற்றில் வறுமையிலுள்ள மக்களுக்குக் குறைந்த விலையில் அரிசி கிடைத்தது. காலப்போக்கில் இது இலவச அரிசியானது.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் சத்துணவு திட்டமாக மாறியது. அது தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆட்சிகளில் தொடர்ந்து படிப்படியாக மேம்படுத்தப்பட்டது.  சென்ற ஆண்டு முதல்வர் ஸ்டாலின் அரசு காலைச் சிற்றுண்டியையும் பள்ளிகளில் வழங்க முன்வந்துள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், தகுதி பெறும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் மாத உரிமைத் தொகை என பல புரட்சிகர திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இவற்றை அடியொற்றி கர்நாடகாவில் வெறுப்பரசியலுக்கு மாற்றாக மக்கள் நல அரசியலை முன்வைத்தது காங்கிரஸ் கட்சி. ஐந்து உத்தரவாதங்களை அது மக்களுக்கு வழங்கியுள்ளது.

Karnataka election congress victory

ஒன்று, கிரஹ லட்சுமி: குடும்பத்தலைவிகளுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உதவித் தொகை.

இரண்டு, யுவ நிதி: வேலையற்ற பட்டதாரிகள், டிப்ளமோ பெற்றவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ரூபாய் மூவாயிரம் மற்றும் ஆயிரத்து நூறு உதவித்தொகை.

மூன்று, அன்ன பாக்யா: வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களில் ஒரு நபருக்கு மாதம் பத்து கிலோ அரிசி இலவசம்;

நான்கு, கிருஹ ஜோதி: அனைத்து இல்லங்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்;

ஐந்து, சகி திட்டம்: பெண்கள் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள வகை செய்யும் திட்டம்.

இது போன்ற மக்கள் நல திட்டங்களை ஐம்பத்தாறு ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியின் அங்கமாக திராவிட அரசியல் மாற்றிக்காட்டியதால் இதனை திராவிட மாடல் என்று கூறுகிறோம். அது இப்போது அனைத்து மாநிலங்களிலும் அரசியலின் திசைவழியாக மாறுவதையே கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸின் வெற்றி உணர்த்துகிறது.

இதனுடன் இணைந்தே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜாடோ என்ற தேச ஒற்றுமை நடைப்பயணத்தையும் காண வேண்டும். கர்நாடக மாநிலத்தில் பெருந்திரள் பங்கேற்புடன் நடந்தேறிய இந்தப் பயணம் வெறுப்பின் சந்தைக்குப் பதிலாக அன்பின் அங்காடிகளை திறந்ததாக ராகுல் காந்தியின் வார்த்தைகளில் கூறுவது பொருத்தமே.

வெறுப்பரசியலின் நோக்கம் தேர்தல் வெற்றியும், ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதும்தான் என்றால் அந்த நோக்கம் வேரறுக்கப்பட்டுள்ளது. அது நாடெங்கும் சமூக நல்லிணக்கத்தை விரும்புவோர் மனதில் நம்பிக்கையை விதைத்துள்ளது.

கட்டுரையாளர் குறிப்பு:

Karnataka election congress victory RajanKurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் எனது நண்பர்கள்: அண்ணாமலை

கிச்சன் கீர்த்தனா: கேப்பேஜ் ரோல் ஸ்நாக்ஸ்

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *