தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘நாரப்பா’ பட டீஸர் வீடியோ வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் அசுரன். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவான இந்தப் படம் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனையும் பெற்றது. எழுத்தாளர் பூமணியின் நாவலான ‘வெக்கை’யை மையமாகக் கொண்டு உருவானது அசுரன். தனுஷ், மஞ்சுவாரியர், பசுபதி, கென் கருணாஸ் நடிப்பில் இந்தப் படம் உருவானது.
பொதுவாக ஒரு மொழியில் பெரிய வெற்றியைப் பெற்றப் படங்கள், மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படும். அதிகபட்சமாக, மலையாளத்தில் உருவான த்ரிஷ்யம் படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் ஆனது. அதுமாதிரி பல படங்கள் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. அப்படி, அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக் படம்தான் நாரப்பா.
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், பிரியாமணி நடிப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது. தமிழ், மலையாளத்தில் பெரிய வெற்றி பெறும் படங்களை அதிகமாக தெலுங்கில் ரீமேக் செய்வதும் வெங்கடேஷ்தான். அப்படி, இந்தப் படத்தையும் கையில் எடுத்து, படத்தை முடித்தும் விட்டார். படத்தை ஸ்ரீகாந்த் அட்டலா இயக்கியுள்ளார். தற்போது, நாரப்பா படத்தின் அறிமுக வீடியோவாக டீஸர் ஒன்று வெளியாகியுள்ளது.
டீசரைப் பார்த்த ரசிகர்கள் தனுஷ் நடிப்பை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு நடித்திருக்கிறார் என்று இணையத்தில் புகழ்ந்துவருகிறார்கள். அதோடு, தமிழில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசைமைத்திருந்தார். தெலுங்கில் மணிஷர்மா இசையில் பின்னணியும் எதிர்பார்ப்பைத் தூண்டுவதாக இருக்கிறது.
**-ஆதினி**�,”