முதல் டி20 போட்டி: இந்திய அணி வெற்றி!

entertainment

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தியா – அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் நேற்று (ஜூன் 26) இரவு நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இதனிடையே மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் மழை காரணமாக போட்டி 12 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு நடைபெற்றது.
இதன்படி முதலாவதாக களமிறங்கிய அயர்லாந்து அணியில் ஆண்ட்ரூ பால்பரீன் (0) ரன் ஏதும் எடுக்காமலும், பால் ஸ்ட்ர்லிங் 4 ரன்களிலும், கேரித் டிலேனி 8 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய ஹேரி டெக்டார், லோர்சன் டக்கருடன் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்த நிலையில் டக்கர் 18 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹேரி டெக்டார் 29 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.
இறுதியில் ஹேரி டெக்டார் 64 (33) ரன்களும், டாக்ரேல் 4 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதையடுத்து 12 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அவேஸ் கான், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் தீபக் ஹூடா – இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் அதிரடியாக ஆட தொடங்கிய இஷான் கிஷன் 26 ரன்களில் போல்டு ஆகி அதிர்ச்சி அளித்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலே (0) எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக தீபக் ஹூடாவுடன், கேப்டன் ஹர்த்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தியது.
இந்தச் சூழலில் இந்த ஜோடியில் ஹர்த்திக் பாண்டியா 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் ஹூடா 47 (29) ரன்களும், தினேஷ் கார்த்திக் 5 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதை அடுத்து 9.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக கீரீக் யங் 2 விக்கெட்டுகளும், ஜோஷ்வா லிட்டில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 ஆட்டம் நாளை (ஜூன் 28) இரவு நடக்கிறது.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *