ஒரே நேரத்தில் இரு படங்கள்: ஷங்கரின் முயற்சி!

சினிமா


நடிகர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ மற்றும் ராம் சரணின் ‘RC15’ படப்பிடிப்பு பணிகள் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

RC15 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பைச் செப்டம்பர் முதல் வாரத்திலிருந்து ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் நடத்தத் தயார் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.

தெலுங்கு திரையுலகில் பல்வேறு கோரிக்கைகள் பற்றிப் பேசிமுடிக்கும் வரை ஆகஸ்ட் 1 முதல் படப்பிடிப்புகளை நிறுத்தி வைப்பது என ஏற்கனவே தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தபடி நேரடி தெலுங்கு படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறவில்லை.

இந்த சூழலில் ஷங்கரின் பதிவு தெலுங்கு திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை லைகா நிறுவன தயாரிப்பில் இயக்கி வந்தார் ஷங்கர். இந்தியன் -2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் 3 உதவி இயக்குநர்கள் உயிரிழக்கப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதோடு பட்ஜெட்டையும் குறைக்க வேண்டும் என, லைக்கா நிறுவனம் ஷங்கரிடம் வலியுறுத்த, சிக்கல்கள் இன்னும் அதிகமாகின. இதனால் இந்தியன்- 2 சூட்டிங் கிடப்பில் போடப்பட்டது.

இந்தியன் 2 ஷூட்டிங் நிறுத்தப்பட்டதால், இந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் படத்தின் ரீமேக்கை எடுக்க திட்டமிட்டார் ஷங்கர்.

ஆனால், கதை உரிமை விவகாரத்தில் ‘அந்நியன்’ படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் ஷங்கருக்கும் இடையில் பிரச்சினை எழுந்தது. அதனால், அந்நியன் இந்தி ரீமேக் திட்டம் அப்படியே கைவிடப்பட்டது.

இதனால், தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார் ஷங்கர். தற்காலிகமாக RC15 என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, தில் ராஜூ தயாரித்து வருகிறார்.

மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. முக்கியமாகப் படத்தில் இரண்டு கலை இயக்குநர்கள் மாறிவிட்டதாகவும், தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த சுரேந்தர் ரெட்டி என்பவரும் விலகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு ரஷ்யாவிலிருந்து 100 ரஷ்ய நடனக்கலைஞர்களை வரவழைத்துள்ளார் ஷங்கர்.

ஒப்புதல் தராத தில் ராஜூ

அதற்காக மட்டுமே 7 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாகவும், இதனால், தில் ராஜூ அதிருப்தியடைந்ததாகவும் கூறப்படுகிறது.

அதேபோல், கல்லூரி செட் அமைத்து படமாக்க வேண்டும் என்று ஷங்கர் கேட்டதாகவும், அதற்கு உண்மையான கல்லூரியிலேயே படமாக்கலாம் என தில் ராஜூ கூறியதாகவும் ஆனால் ஷங்கர் கல்லூரிசெட் அமைத்து படமாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திட்டமிட்ட பட்ஜெட்டைவிட ஏற்கனவே அதிகம் செலவாகி விட்டதால் தில் ராஜு இன்னும் கல்லூரி செட் போட ஒப்புதல் தரவில்லை எனத் தெரிகிறது.

இதனிடையே தெலுங்கு திரையுலகில் வேலை நிறுத்தமும் தொடங்கியது. கமல்ஹாசன் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான விக்ரம் திரைப்படம் அதிரிபுதிரியான வெற்றிபெற்று வசூலைக் குவித்தது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் உதயநிதியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் நடிகர் கமல்ஹாசன் இருந்தபோதிலும், விக்ரம் படத்தை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

படத்தின் வெற்றி கமல்ஹாசன் – உதயநிதி இருவருக்கும் இடையில் தொழில் ரீதியான நட்பை நெருக்கமாக்கியது. அதனால் உதயநிதி நடிக்கும் படமொன்றை கமல்ஹாசன் தயாரிக்கப்போவதாக அறிவித்தார்.

அதேவேளை லைகா நிறுவன தயாரிப்பில் தடைப்பட்டு இருந்த இந்தியன்-2 படத்தை அந்நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வெளியிடப் போவதாக உதயநிதி அறிவித்து அதன்படி நேற்று முதல் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இவை அனைத்துக்கும் அடிப்படை விக்ரம் படத்தின் வெற்றி என்கிறது கோடம்பாக்க சினிமா வட்டாரம் இத்தகைய சூழலில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும் என இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளது தன்னை தற்காத்துக்கொள்ளும் முயற்சி என்கின்றனர்.

இராமானுஜம்

எட்டு வருட கடின உழைப்பு பிரம்மாஸ்திரா : ராஜமௌலி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *