அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா ஆகியோரது நடிப்பில் இந்த ஆண்டு வெளியாக உள்ள பிரமாண்ட படைப்புகளில் ஒன்று பிரம்மாஸ்திரா படம். மூன்று பாகங்களாக உருவாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இப்படத்தின் முதல் பாகம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 இந்திய மொழிகளில் 09.09.2022 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தினை தென்னிந்திய மொழிகளில் இயக்குநர் ராஜமௌலி வெளியிடுகிறார்.
படத்தின் வெளியீட்டை ஒட்டி நடிகர் ரன்பீர் கபூர், நாகர்ஜூனா, ராஜமௌலி ஆகியோர் சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ் சினிமாவில் சாதாரணமான, குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கூட கௌரவமாக நடைபெறும். ஆனால் இப்படி எந்த ஒரு திட்டமிடல், ஒருங்கிணைப்பு இல்லாமல் நடந்து முடிந்தது”பிரம்மாஸ்திரா-1 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு.
சர்வதேச நிறுவனங்களான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், தர்மா புரொடக்ஷன்ஸ், பிரைம் ஃபோகஸ் மற்றும் ஸ்டார்லைட் பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் பிரம்மாஸ்திரா – 1 படத்திற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்புகள்
இந்தியிலும், தெலுங்கிலும் உரியக் கௌரவத்துடன் நடத்தப்படுகிறபோது, தமிழில் அலட்சியமாக நடத்தப்படுவது ஏன் என்கிற கேள்வி எழுகிறது.
இந்தியாவின் முன்னணி இயக்குநர் ராஜமெளலி, தெலுங்கு நாயகன் நாகர்ஜூனா, இந்தி நடிகர் ரன்பீர்சிங் மூவர் மட்டுமே கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று சுமார் 300 இருக்கைகள் வசதி கொண்ட அரங்கில் நடைபெற்றது.
நடிகர் ரன்பீர் கபூர் பேசுகையில், “பிரமாஸ்திரம் திரைப்படத்தை உங்கள் முன் எடுத்து வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கலாச்சாரத்தை பெரிதும் மதிக்கும் சமூகத்தில் நான் என் திரைப்படத்தை எடுத்து வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த திரைப்படத்தின் மூலக்கதையை இயக்குனர் என்னிடம் 10 வருடத்திற்கு முன் கூறிய போது, அந்த ஐடியா எனக்கு பிரம்மிப்பாக இருந்தது. அமிதாப், நாகார்ஜுனா போன்ற திரை ஜாம்பவான்களுடன் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்தது.
இந்தப்படத்தில் தான் நான் ஆலியாவுடன் பழக ஆரம்பித்தேன் இப்போது கல்யாணம் ஆகிவிட்டது. எனக்கு இந்தப்படம் மிக முக்கியமான படம் உங்கள் எல்லோருக்கும் ஒரு புதிய அனுபவத்தை இப்படம் தரும்” என்றார்
நாகார்ஜுனா கதாபாத்திரம்
நடிகர் நாகார்ஜுனா பேசுகிறபோது, “இயக்குநர் அயன் ஒரு காமிக் புத்தகத்துடன் என்னை அணுகினார், அதை படிக்க சொன்னார்.
அதில் எனது கதாபாத்திரத்தின் முழு தகவலும் இருந்தது. எனது கதாபாத்திரம் நந்தி அஸ்திரத்தை மையப்படுத்தி இருந்தது. எனக்கு இதிகாசங்கள் மேல் ஈர்ப்பு இருந்து கொண்டே இருந்தது.
அதனால் இதிகாசத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கபட்ட கதை என்பதாலே நான் இதில் நடிக்க ஒத்துகொண்டேன்.
படத்தின் விஷீவல்கள் சிறப்பாக வந்துள்ளது. அயன் உடைய 10 வருட உழைப்பு இந்த திரைப்படம். ரன்பீர் ஆலியா மிகச்சிறந்த உழைப்பாளிகள். சினிமா மீது காதலுடையவர்கள் இந்தப்படம் பெரிய வெற்றி பெறும்” என்றார்.
இயக்குநராக வரவில்லை
இயக்குநர் ராஜமௌலி கூறுகையில், “ நான் இங்கு இயக்குனராக வராமல், திரைப்படத்தை வழங்கும் ஒருவராக வந்திருக்கிறேன்.
பிரமாஸ்திரம் இந்த வருட இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கியமான திரைப்படமாக இருக்கும். நமது இதிகாசங்களிலும், புராணங்களிலும் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கலந்த கதை தான் இது.
இந்த திரைப்படம் ஒரு எட்டு வருட கடின உழைப்பு. இந்த படம் கரன் ஜோகர், அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா, ஆலியா பட் போன்றவர்களின் மிகச்சிறந்த பங்களிப்பினால் உருவாகியுள்ளது.
இந்த திரைப்படம் அஸ்திரங்களை கமர்சியலாக அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் கூறியுள்ளது. இந்த திரைப்படத்தில் நானும் இணைந்தது மகிழ்ச்சி” என்றார்.
இராமானுஜம்
