“தஞ்சாவூர் மண்ணு எடுத்து” பாடலைப் பாடிய பாடகர் கிருஷ்ணராஜ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள வேம்படிதாளம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். சென்னை அரசு இசைக் கல்லூரியில் சேர்ந்து இசை கற்ற அவர், தொடர்ந்து சினிமாவில் பயணிக்க ஆரம்பித்தார்.
சினிமாவில் இவர் பாடிய பாடல்கள் பலவும் இசைப் பிரியர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தன.
காதல் கோட்டை படத்தில் “வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா…”, பொற்காலம் படத்தில் “தஞ்சாவூரு மண்ணு எடுத்து…”, காதலே நிம்மதி படத்தில் “விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி…”, மூவேந்தர் படத்தில் “சோக்கு சுந்தரி…”, நினைவிருக்கும் வரை படத்தில் “திருமதி ஏழுமலை வெங்கடேசா”, “காத்தடிக்குது காத்தடிக்குது”, ஏழையின் சிரிப்பு படத்தில் “எப்பா எப்பா ஐயப்பா” உள்ளிட்ட பல்வேறு பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார்.
குறிப்பாக, தேவா இசையில் உருவான “தஞ்சாவூரு மண்ணு எடுத்து” பாடல், சிங்கப்பூரின் மறைந்த அதிபர் செல்லப்பன் ராமநாதன் இறுதி ஊர்வலத்தில் இசைக்கப்பட்டது.
இந்த நிலையில், இசையமைப்பாளர் தேவாவின் ஆஸ்தான பாடகரான கிருஷ்ணராஜ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
அவரது உடல் சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் தேவா மறைந்த பிறகு, அவருக்கு மிகவும் பிடித்த பாடகரான கிருஷ்ணராஜும் மறைந்துள்ளது இசைப் பிரியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
