ச.மோகன்
மக்களால் ‘கானா இசையின் பிதா மகன் ‘ என்று பெருமையுடன் போற்றப்படும் தேவா, வெறும் இசையமைப்பாளர் மட்டுமல்ல. வாழ்வியலின் எதார்த்தத்தை எடுத்திசைத்தவர். அவரது இசையில், விளிம்புநிலை மக்களின் துயரம் வெளிப்படும். உழைக்கும் மக்களின் உணர்வுகள் தாளமிடும். சாமானிய மக்களின் குரல் தன்னிலை பாடும். தனது 36 ஆண்டுகளுக்கும் மேலான இசைப் பயணத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஏறத்தாழ 473 திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.
திரை இசைப் பயணம்
‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படத்திற்காக, சிறந்த இசைக்கான தமிழக அரசு விருதை அவர் வென்றார். அப்போது, மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்களால் ‘தேனிசைத் தென்றல்’ என்ற அடைமொழியுடன் தேவா அழைக்கப்பட்டார்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘சின்னப் பொண்ணு தான் வெக்கப்படுது, ‘தண்ணிக் குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது, ‘மனசு தவிக்குது’ ஆகியன ‘சூப்பர் ஹிட்’ பாடல்களாகும்.
சமூகக் களத்தில் ‘ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ’ என்ற பாடல், ஊனம் குறித்து ஆழமாக வேரூன்றியிருந்த சமூகப் பார்வையை உடைத்தெறிந்தது.
‘கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு’ என்ற பாடல், நிறத்தின் அடிப்படையில் மக்களை மதிப்பிடும் அழகியல் மாயையைக் கேள்விக்குள்ளாக்கியது.
‘தஞ்சாவூரு மண்ணெடுத்து’ பாடல், மண்ணின் பெருமையையும் அதன் பண்பாட்டுச் செழுமையையும் பறைசாற்றியது.
தாய் மனசு படத்தில் இடம் பெற்று பிரபலமான ‘தூதுவளை இலை அரைச்சு’ என்ற பாடல் ‘ வாழை’ திரைப்படத்தில் மீண்டும் ஒலிபரப்பப்பட்டு, நாட்டுப்புற வாழ்வியல் மணத்துடன், மண்ணின் இயல்பான இசையுடன் உலா வந்தது.
கானா பாடலின் தனித்துவம்

கானா பாடல்கள் மூலம் அவரது தனித்துவமான அடையாளம் சுவடு பதித்துள்ளது. சென்னை பெருநகரின் பூர்வக்குடி மக்களின் தனித்துவமும் மகத்துவமும் கானா பாடல்களில் நிரம்பிக் கிடக்கிறது. சென்னை மண்ணின் மைந்தர்களை மட்டுமல்லாது, அனைவரையும் தலையசைத்துத் தாளமிட வைத்த பெருமை அவரையே சாரும்.
வயல்களிலும், காடுகளிலும், திருவிழாக்களிலும் கலந்திருந்த நாட்டுப்புற இசையின் மரபான தாளங்களிலிருந்து மாறுபட்ட ஒன்றை, கானா பாடல்கள் மூலம் தேவா கண்டறிந்தார்.
வடசென்னையின் குறுகிய தெருக்களிலும், உழைக்கும் மக்களின் இல்லங்களிலும் ஒலித்த கானா பாடலை உலகம் முழுவதும் அறியச் செய்தார் . அதில் உழைக்கும் மக்களின் வியர்வை, மணம் வீசியது. வறுமையின் வலி உணரப்பட்டது. குடிசைகளில் பசி குடியிருந்தது அறியப்பட்டது.
ஒரு துயரமான வாழ்வின் நடுவிலும் கானா இருந்தது. அது துயரத்தை மறக்கச் செய்து, சிறிதளவு புன்னகைக்க வைத்தது. சிதைந்த வாழ்வின் உயிர்ப்பு தெரிந்தது.
தாள வாத்தியங்களின் இசைச் சிதறலிலும், ஹார்மோனியத்தின் இசைக் கோர்வையிலும், சென்னை மொழியின் குரலிலும், அவர் சாமானிய மக்களின் வாழ்வியலை இசையாக மாற்றினார். அவர் கானா பாடல்களைத் திரை இசையின் அரியணையில் அமரச் செய்தார்.
எளிய மக்களின் வாழ்வியல் எதார்த்தங்களை சென்னை மொழியில் , இலக்கண வரம்புகளின்றி வீதிகளில் மட்டுமே ஒலிக்கச் செய்த கானா பாடலுக்குத் திரை இசையில் முகவரி கொடுத்தவர் ஆவார். கடந்த 17.10.2026 அன்று இயற்கை எய்திய அவரின் இயற்பெயர் தேவநேசன் சொக்கலிங்கம். அவர் பழைய வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.
இசையின் பரிணாமம்

தேவா இசையுடன் உறவாடினார். திரைப்படப் பாடல்கள் வெறும் இசை அல்ல. அவை காதலின் உயிரோசைகள்; கண்ணீரின் மௌன மொழிகள்; மகிழ்ச்சியைத் தேடும் மக்களின் விருப்பங்கள்; உழைக்கும் மக்களின் பிரச்சினைகள். அனைத்தும் மக்களின் மனதில் மலர்ந்தவை. இசைக்கு மொழி உண்டு; அந்த மொழிக்கு உயிர் உண்டு; அந்த உயிர்க்கு உணர்வு உண்டு; அந்த உணர்வின் பெயர் தான் தேவா .
தென்றலுக்கு உருவம் இல்லை. ஆனால் அதன் வருடலை உணர முடியும். இசைக்கு உருவம் இல்லை. ஆனால் அதன் துடிப்பை உணர முடியும். இப்படித்தான் தேவாவின் இசையை உணர முடியும்.
தமிழ்த் திரை இசையின் வரலாற்றில் பல இசையமைப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஆனால், மக்களின் அன்றாட வாழ்க்கையை இசையாக்கிய தனித்துவமான இசையமைப்பாளர் தேவா ஆவார். மண்ணின் மணம் சுமந்த அவரது இசை, அரண்மனைகளில் பிறக்கவில்லை. அது ஏழையின் குடிசையில் பிறந்தது. அது தொழிலாளியின் வியர்வையில் விளைந்தது. அது தெருவோர மனிதனின் சிரிப்பில் மலர்ந்தது. அந்த உண்மையைத் திரை இசையில் தேவா உணர்த்தினார்.
உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், ஆட்டோ ஓட்டுநர்களின் பரபரப்பு, சாலையோரக் கடை உணவின் சுவை, அன்றாட வாழ்வின் எளிய மகிழ்ச்சி, இவை அனைத்தையும் இசையின் மடியில் அமர்த்தி தேவா தாலாட்டினார்.
இசை பேசும்
கானா இசை என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அன்றாடங் காய்ச்சிகளின் பண்பாட்டு அடையாளம் என்று உணர்த்திய தேவாவின் சமூகப் பங்களிப்பு மகத்தானது. தெருக்களில் பிறந்த கானா பாடலை அவர் திரை அரங்கிற்கு அழைத்துச் சென்றார்; சாமானிய மக்களின் இசையை அனைவரின் உதடுகளும் முணு முணுக்கச் செய்தார்!
அதனால் தான் அவர் கானா இசையின் முடிசூடா மன்னராக மக்களால் கொண்டாடப்படுகிறார்.
காதலுக்கு இசையால் கவிதை எழுதினார்.
காதல் என்பது வெறும் வார்த்தைகளால் மட்டும் பேசப்படுவதில்லை. சில நேரங்களில் ஒரு புல்லாங்குழல் பேசுகிறது. சில நேரங்களில் ஒரு வயலின் பேசுகிறது. இதை தேவாவின் திரை இசை பேசியது.
பேச மறந்தது இசையானது

ஆசை, காதல் கோட்டை, அண்ணாமலை, பாட்ஷா போன்ற திரைப்படங்களின் பாடல்கள், தமிழ் ரசிகர்களின் நினைவுகளில் வெவ்வேறு உணர்வுகளுடன் நிலைத்து நிற்கின்றன. அவரது இசையில், காதல் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.
அது இதயத்தின் கதவை மென்மையாகத் தட்டியது. பிரிவின் துயரத்தைப் பாடும்போது, அவர் கண்ணீருக்கு இசையளித்தார். காதலின் ஆனந்தத்தைப் பாடும்போது, அவர் கனவுகளுக்குச் சிறகுகளை அளித்தார். காதலர்கள் பேச மறந்த வார்த்தைகளை அவர் இசையாக மாற்றினார்;
கண்ணீர் சொல்ல மறந்த கதைகளை அவர் பாடல்களாக மாற்றினார். அதனால்தான் தேவாவின் பாடல்கள் ஒரு தலைமுறையின் காதல் நினைவுகளாக இன்றும் வாழ்கின்றன.
அவரது இசைப் படைப்புகள் பல்வேறு வடிவங்களில் இருந்தன. அது பலதரப்பட்ட மக்களின் இதயங்களைத் தொட்டது. தேவாவின் இசை எளிமையின் அழகியல் என்றால் மிகையன்று.
அவரது பாடல்களைக் கேட்க இசை அறிவு தேவையில்லை. இசையை நேசிக்கும் இதயம் இருந்தாலே போதும். ஒரு கிராமத்து இளைஞனும் ரசிக்கலாம். ஒரு நகரத்து இளைஞனும் கொண்டாடலாம். ஒரு முதியவரும் பழைய நினைவுகளில் மூழ்கிவிட முடியும். அவரது இசை சமூகத்தின் பல்வேறு அடுக்குகளையும் ஒன்றிணைத்தது.
செல்வந்தர்களின் மாளிகையிலும், சாமானியனின் குடிசையிலும் ஒரே மாதிரியான துள்ளலுடன் ஒலித்தது. அதுவே ஓர் இசைக்கலைஞரின் உண்மையான வெற்றி.
காலம் கடந்த கானங்கள்
காலம் மாறுகிறது. தலைமுறைகள் மாறுகின்றன. இசைக்கருவிகள் மாறுகின்றன. இசையை இரசிக்கும் முறைகளும் மாறுகின்றன. ஆனால், சில பாடல்கள் மட்டும்தான் கால மாற்றத்தின் கைகளில் சிக்குவதில்லை.
அவை நினைவுகளின் நிழலில் என்றென்றும் இளைப்பாறும். தேவாவின் இசையும் அப்படித் தான். ஒரு பாடல் ஒலித்தவுடன், பழைய நண்பர்கள் நினைவுக்கு வருகிறார்கள். தோல்வியில் உதிர்ந்த காதல் மீண்டும் மனதில் மலர்கிறது. இளமையின் இனிய தருணங்கள் கண்முன்னே உலா வருகின்றன. அது தான் இசையின் அதிசயம்.
நேற்றைய நினைவுகளை மீண்டும் இதயத்தில் மலரச் செய்வதும்,இன்றைய மகிழ்ச்சியை நாளைய நினைவுகளாக மாற்றுவதும் தான் இசையின் அழியாத ஆற்றல். தேவா அந்த ஆற்றலைத் தன் படைப்புகள் மூலம் உணர்த்தினார்.
இசை என்பது மக்களின் விருப்பம். அது சிலருக்கான ஒப்பனை அல்ல. அது அனைவர்க்குமான ஓர் உணர்வு. தேவாவின் இசைப் பயணம் இந்த உண்மையை எடுத்துரைக்கிறது. தமிழ்த் திரை இசையில் அவர் கானா பாடல்களுக்கு அளித்த முக்கியத்துவம் வெறும் இசை சார்ந்த மாற்றம் மட்டுமல்ல; அது ஒரு பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வும் கூட.
உழைக்கும் மக்களின் மொழி, அவர்களின் வாழ்க்கை, அவர்களின் கொண்டாட்டங்கள் யாவற்றுக்கும் கலை உலகில் உரிய இடம் உண்டு என்பதை அவரது இசை உணர்த்தியது. அதனால் தான் தேவாவை வெறுமனே ஒரு திரைப்பட இசையமைப்பாளராகச் சுருக்கிவிட முடியாது. அவர் மக்களின் இசைக் கலைஞர். அவரது பாடல்கள் மண்ணின் குரல். அவர் சாமானிய மக்களின் மகிழ்ச்சியை இசையாக மொழிபெயர்த்த கலைஞர்.
தென்றலுக்கு மரணமில்லை

ஒரு கலைஞனின் வாழ்நாளை ஆண்டுகளில் அளவிடலாம். ஆனால் அவனது படைப்பின் வாழ்நாளை ஆண்டுகளில் அளவிட முடியாது. இசை ஒலிக்கும் வரை இசைக்கலைஞன் வாழ்கிறான். ஒரு குழந்தையின் தாலாட்டில், தேவாவின் பாடல் மீண்டும் பிறக்கிறது. ஓர் இளைஞன் கானா பாடலுக்கு நடனமாடும்போது, அந்த இசை மீண்டும் இளமையாகிறது. ஒரு முதியவர் மெல்லிசையால் நெகிழும் போது அந்த இசை நினைவுகளின் ஆறாாகப் பாய்கிறது. தென்றலைக் கைகளால் தடுத்து நிறுத்த முடியாது; தேனிசையைக் காலத்தின் எல்லைகளுக்குள் அடக்க முடியாது.
தேவா என்பது வெறும் பெயர் அல்ல. அது ஒரு தலைமுறையின் நினைவு. ஒரு நகரத்தின் இசை. ஒரு சமூகத்தின் பண்பாட்டுக் குரல்.
கோடிக்கணக்கான இரசிகர்களின் இதயங்களில் என்றென்றும் ஒலித்துக்கொண்டிருக்கும் ஓர் இனிய மெல்லிய இராகம். பாடல்கள் இருக்கும் வரை நினைவுகள் இருக்கும்;
நினைவுகள் இருக்கும் வரை, தேவாவின் தேனிசை, தென்றலாக வீசிக் கொண்டே இருக்கும்.
இசை ஓயாது. எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும். காலம் கடந்து செல்லலாம்; இசைக் கலைஞனின் புகழ் காலத்தோடு பயணிக்கும்.
இசைக் கடலில் ஓயாத பேரலை தேவா.
இசையால் வாழ்ந்த அவர், மக்களின் இதயத் துடிப்பில் இசையாய் ஒலித்துக்கொண்டிருக்கிறார்.
கட்டுரையாளர் குறிப்பு
எழுத்தாளர் ச.மோகன், சமூகக் களத்தில் மனித உரிமைக் காப்பாளராகச் செயற்படுகிறார். மும்பையில் Bold India நாளிதழில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். மும்பையில் MUDRA Communications (Reliance) நிறுவனத்திலும், Coromandel Info Tech-Chennai நிறுவனத்திலும் உயர் பதவி வகித்தவர்.
மக்கள் கண்காணிப்பகம் – மதுரை அமைப்பில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
மின்னணு ஊடகங்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
தற்சமயம் தூத்துக்குடி மாவட்டத்தில் அவரது சொந்த கிராமமான தெய்வசெயல்புரத்தில் வசித்து வருகிறார்
தொடர்புக்கு: 9994368502
