மும்பையில் பரபரப்பு: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிச் சூடு.. ஓட்டுநர் காயம்!

Published On:

| By Mathi

Mumbai-Tiger Shroff-Shoot

மும்பையில் பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபின் கார் மீது நேற்று (அக்டோபர் 18-ந் தேதி) மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் டைகர் ஷெராஃப் காயமின்றி தப்பினார். அவரது கார் ஓட்டுநர் குண்டு பாய்ந்து காயமடைந்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் ஜூஹு பகுதியில் உள்ள புஷ்பா பூங்கா மைதானத்தில் டைகர் ஷெராஃப் நேற்று மாலை கால்பந்து விளையாடினார். பின்னர் வீட்டுக்குச் செல்வதற்காகத் தனது காரில் ஏறியபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் அவரது காரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர்.

ADVERTISEMENT

இந்தத் தாக்குதலில் டைகர் ஷெராஃப் மீது குண்டுகள் பாயவில்லை. ஆனால் அவரது கார் ஓட்டுநரின் கையில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்தபோது டைகர் ஷெராஃபைப் பார்ப்பதற்காக அந்தப் பகுதியில் ரசிகர்களும் திரண்டிருந்தனர். திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

தகவல் கிடைத்ததும் ஜூஹு போலீசார் மற்றும் மும்பை குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து தாக்குதல் நடத்தியவர்களைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, டைகர் ஷெராஃபின் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் அனில் பண்டிட், ஹர்மன் சந்து ஆகியோர் பொறுப்பேற்றுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பதிவு வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

அந்தப் பதிவில், டைகர் ஷெராஃபை ஏற்கெனவே எச்சரித்ததாகவும், அவர் தங்களது பேச்சைக் கேட்காததால் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், நடிகர் சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றுபவர்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மகாராஷ்டிரா அமைச்சர் ஆஷிஷ் ஷெலார், மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பாரதியிடம் பேசியதாகத் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கெனவே நடிகர் சல்மான் கானின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், தற்போது டைகர் ஷெராஃபின் கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share