விஜய்யின் ‘மெர்சல்’, ‘சர்கார்’ பஞ்சாயத்து.. நடிகை ஸ்ரீபிரியாவின் நிறுவனத்துக்கு எதிரான கலாநிதி மாறனின் சன் டிவி மனு டிஸ்மிஸ்!

Published On:

| By Mathi

Sun TV vs Sripriya

விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படத்தின் பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என்.ராமசாமியிடம் இருந்து வாங்கிய சொத்துகள் மீதான நீதிமன்றக் கட்டுப்பாட்டை நீக்கக் கோரி சன் டிவி நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

’சர்கார்’ பட விநியோக உரிமை

விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படத்தின் திரையரங்க விநியோக உரிமை தொடர்பாக சன் டிவி நிறுவனத்துக்கும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என்.ராமசாமிக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி சன் டிவி நிறுவனத்துக்கு ராமசாமி ரூ.80 கோடி செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் இந்தப் பணப் பரிவர்த்தனையில் இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து ராமசாமி, அவரது மனைவி மற்றும் சகோதரிகள் ஆகியோர் தங்களுக்குச் சொந்தமான 11 சொத்துகளை சன் டிவி நிறுவனத்துக்குப் பணம் செலுத்துவதற்கான உத்தரவாதமாக வழங்க ஒப்புக்கொண்டனர்.

இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்ற நிலையில், 2018-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி இரு தரப்பினரும் சமரச ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதன் அடிப்படையில் சொத்துகளை சன் டிவி நிறுவனத்துக்கு விற்பனை செய்வதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனம்

இதற்கிடையே, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என்.ராமசாமிக்கும் மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கும் இடையே தனியாகப் பணப் பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுத்தது. இந்த வழக்கில் ராமசாமி தரப்பில் உரிய பண உத்தரவாதம் வழங்கப்படாததால், அவரது சொத்துகள் மீது 2020-ம் ஆண்டு மார்ச் 12-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது. பின்னர் இந்த உத்தரவு 2020-ம் ஆண்டு செப்டம்பர் 10-ந் தேதி சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யப்பட்டது.

அதாவது, மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனம் தொடர்ந்த பண வசூல் நடவடிக்கையில், சம்பந்தப்பட்ட சொத்துகளை விற்பனை செய்வதற்கு நீதிமன்றத்தின் மூலம் சட்டக் கட்டுப்பாடு ஏற்பட்டது.

ADVERTISEMENT

ஆனால், 2018-ம் ஆண்டு சன் டிவி தரப்பில் செய்துகொள்ளப்பட்ட சொத்து உத்தரவாத ஒப்பந்தங்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. இதற்கிடையே 2020-ம் ஆண்டு மெரினா ஹோல்டிங்ஸ் தொடர்ந்த வழக்கில் அந்தச் சொத்துகள் மீது நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது. அதன் பிறகே, 2021-ம் ஆண்டு சன் டிவி அந்தச் சொத்துகளைப் பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரங்கள் மூலம் வாங்கியது. இதனால் சொத்துகள் மீது ஏற்கெனவே உரிமை இருந்ததாக சன் டிவி கூறியதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

இதனால் ஒரே சொத்துகள் தொடர்பாக சன் டிவி நிறுவனத்துக்கும் மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கும் இடையே சட்டப் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில், சன் டிவி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

அதில், 2018-ம் ஆண்டிலேயே ராமசாமி தரப்புடன் தங்களுக்கு ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டதாகவும், மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் வழக்கில் சொத்துகள் மீது கட்டுப்பாடு விதிக்கப்படுவதற்கு முன்பே தங்களுக்கு உரிமை உருவாகிவிட்டதாகவும் சன் டிவி தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், தாங்கள் சட்டப்படி சொத்துகளை வாங்கியுள்ளதால், அவற்றின் மீதான நீதிமன்றக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இதற்கு மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. சன் டிவி நிறுவனம் நம்பியிருக்கும் 2018-ம் ஆண்டு உத்தரவாத ஆவணங்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்றும், அவற்றைக் கொண்டு சொத்துகள் மீது ஏற்கெனவே உரிமை ஏற்பட்டதாகக் கூற முடியாது என்றும் மெரினா ஹோல்டிங்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், சொத்துகள் மீதான நீதிமன்றக் கட்டுப்பாடு 2020-ம் ஆண்டிலேயே சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டது. எனவே, 2021-ம் ஆண்டு சொத்துகளை வாங்கிய சன் டிவி நிறுவனம், அந்தக் கட்டுப்பாடு குறித்து தங்களுக்குத் தெரியாது என்று கூற முடியாது என்றும் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, சன் டிவி நிறுவனம் முன்வைத்த வாதங்களை ஏற்க மறுத்தார். ஒரு சொத்தின் மீது நீதிமன்றம் கட்டுப்பாடு விதிப்பதற்கு முன்பே மற்றொருவருக்கு அந்தச் சொத்தில் சட்டப்பூர்வமான உரிமை ஏற்பட்டிருந்தால், அந்த உரிமைக்குப் பாதுகாப்பு கிடைக்கலாம். ஆனால், அதற்கான சொத்து பரிமாற்ற ஒப்பந்தம் நீதிமன்றக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதற்கு முன்பே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கில் சன் டிவி நிறுவனம் நம்பியிருந்த 2018-ம் ஆண்டு உத்தரவாத ஆவணங்கள் பதிவு செய்யப்படவில்லை. எனவே, அந்த ஆவணங்களின் அடிப்படையில் சொத்துகள் மீது முன்பே உரிமை ஏற்பட்டுவிட்டதாகக் கூற முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.

மேலும், 2018-ம் ஆண்டு இரு தரப்பினரும் செய்துகொண்ட சமரச ஒப்பந்தத்தை எதிர்த்து, அதில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர் மோசடி மற்றும் ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.

அந்த வழக்கில் ஆவணங்களைத் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, இரு தரப்பினரும் 2021-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி புதிய சமரச ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

சன் டிவி மனு டிஸ்மிஸ்

இந்தப் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் சொத்துகள் சன் டிவி நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டன. ஆனால் புதிய சமரச ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பே, மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துகள் மீது நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துவிட்டது. எனவே, நடைமுறைப்படுத்தப்படாத 2018-ம் ஆண்டு சமரச ஒப்பந்தத்தைக் காட்டி, சொத்துகள் மீது முன்பே உரிமை ஏற்பட்டுவிட்டதாக சன் டிவி நிறுவனம் கூறுவதை ஏற்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து, சொத்துகள் மீதான நீதிமன்றக் கட்டுப்பாட்டை நீக்கக் கோரி சன் டிவி நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நீதிபதி கே.குமரேஷ் பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வழக்கின் பின்னணி என்ன?

இந்த வழக்கு தொடர்பாக திரைப்பட துறை பிஆர்ஓ நிகில் முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘மெர்சல்’ திரைப்படத்திற்காக வழங்கப்பட்ட கடன் தொடர்பான வழக்கில், நடிகை ஸ்ரீபிரியா மற்றும் அவரது கணவர் ராஜ்குமார் சேதுபதி ஆகியோரின் மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்குச் சாதகமாக முக்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி திரு. கே. குமரேஷ் பாபு அவர்கள், அக்டோபர் 16 அன்று, மெரினா ஹோல்டிங்ஸ் மற்றும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. என். ராமசாமி ஆகியோருக்கு எதிராக சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த உரிமைக் கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்ற இணைப்பாணையை (Attachment) நீக்கக் கோரிய சன் டிவி நிறுவனத்தின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. மேலும், அச்சொத்துகளின் மீது தனக்கு முழுமையான உரிமை இருப்பதாக என்றும் சன் டிவி நிறுவனம் முன்வைத்த வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது.

‘மெர்சல்’ திரைப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் உரிமையாளர் என். ராமசாமி தயாரித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனம் கடன் வழங்கியிருந்தது. செலுத்த வேண்டிய முழுத் தொகையையும் திரு. ராமசாமியால் செலுத்த இயலாத நிலையில், தனது வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இரண்டு சொத்துகளின் அசல் உரிமைப் பத்திரங்களைப் பிணையமாக வழங்கியதாக ராஜ்குமார் சேதுபதி தெரிவித்தார்.

திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்குத் தேவையான தடையில்லாச் சான்றிதழை (NOC) பெறுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

ஆனால், நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்காக அவர் வழங்கிய காசோலைகள், வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாத காரணத்தால் திரும்பின. இதையடுத்து, மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனம் தனக்குச் சேர வேண்டிய தொகையை வசூலிப்பதற்காகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில்,நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் அந்த இரண்டு சொத்துகளுக்கும் இணைப்பாணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு நீதிமன்ற இணைப்பாணை நடைமுறையில் இருந்தபோதிலும், அந்தச் சொத்துகள் சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டன.

சொத்துகளின் மீதான நீதிமன்ற இணைப்பாணையை நீக்கக் கோரி, சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமைக் கோரிக்கை மனுவைத் தாக்கல் செய்தது. அந்த மனுவில், தாங்கள் நல்லெண்ண அடிப்படையில் சொத்துகளைப் பெற்றவர்கள் என்றும், அச்சொத்துகளின் முழுமையான உரிமையாளர்கள் என்றும் அந்நிறுவனம் வாதிட்டது.

இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த நீதிபதி திரு. கே. குமரேஷ் பாபு அவர்கள், சன் டிவி நிறுவனத்தின் உரிமைக் கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், சம்பந்தப்பட்ட சொத்துகளின் மீதான நீதிமன்ற இணைப்பாணையை நீக்கவும் மறுத்தார். இதன் மூலம், மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட சொத்துகளின் மீது நடைமுறையில் இருந்த இணைப்பாணை தொடர்ந்து அமலில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பிஆர்ஓ நிகில் முருகன் கூறியுள்ளார்.

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிய ‘மெர்சல்’ திரைப்படம் 2017-ம் ஆண்டு அக்டோபர் 18-ந் தேதி வெளியானது. இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்தது. இதைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் 2018-ம் ஆண்டு நவம்பர் 6-ந் தேதி வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம்:

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share