பிரபல இசையமைப்பாளர் தேவா இன்று (அக்டோபர் 17) காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த இசை உலகையும், இசை பிரியர்களையும் சோகத்தில் அழுத்தியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. கடைசியாக சாருகேசி படத்துக்கு இசையமைத்தார்.
ஆனால் சமீபகாலமாக அவர் இசையமைக்கவில்லை என்றாலும் சில பாடல்களுக்காக பணியாற்றி இருக்கிறார்.
இந்த சூழலில் இன்று காலை அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவரது குடும்பத்தினர் வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து அந்த மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், தேவா மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது மூச்சு பேச்சு இன்றி தான் வந்தார். ஹார்ட் பீட், பல்ஸ் எதுவுமே இல்லை. எனினும் எங்கள் நிபுணர்கள் குழு 45 நிமிடம் போராடியது. எந்த பலனும் இல்லை’ என்று தெரிவித்தனர்.
தேவா மறைவு குறித்து அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா கூறுகையில், “திடீரென எங்கள் அப்பா எங்களை விட்டுவிட்டு சென்றுவிட்டார். கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டுவிட்டது. நெஞ்சு படபடப்பாக இருக்கிறது என்று சொன்னார்.
ஆம்புலன்ஸ் கூப்பிட்டால் கூட நேரம் ஆகும் என்பதால் நாங்களே மூன்று பேர் கை தாங்கலாக அழைத்துக் கொண்டு காரில் ஏற்றி, வீட்டுக்கு அருகில் உள்ள சூர்யா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.
சிபிஆர் செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அப்பாவுக்கு அரசு மரியாதை கொடுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாளை எங்கள் சொந்த ஊரான ஆற்காடு அருகே சக்கரமல்லூர் என்ற கிராமத்தில் அப்பாவின் உடலை அடக்கம் செய்ய உள்ளோம்” என்று கண்ணீருடன் கூறினார்.
தேவாவின் மறைவை தொடர்ந்து அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசியதும், நேர்காணல் கொடுத்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அதிலிருந்து சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம்.
இந்தப் பாடலை பாடியது உங்கள் விஜய்…

முதல்வர் விஜய்யை பொறுத்தவரை தன்னுடைய படங்களில் பல பாடல்களை தானே பாடியுள்ளார். ஆனால் அவர் முதன் முதலில் ரசிகன் படத்தில் இடம்பெற்றுள்ள “பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி” பாடலைத்தான் பாடினார். அந்த பாடல் இன்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போது ‘இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்’ என கார்டு இடம் பெற்றிருக்கும். அப்படி முதன் முதலில் விஜயை திரையில் பாட வைத்தவர் இசையமைப்பாளர் தேவா.
இது பற்றி பேட்டி ஒன்றில் தேவா கூறுகையில், ரசிகன் படத்தில் ஒரு பாடலை விஜய்யை பாட வைக்கலாமா என்று எஸ் ஏ சந்திரசேகர் என்னிடம் கேட்டார். தாராளமாக பாட வைக்கலாம் என்றேன். அவரது குடும்பம் பெரிய இசை குடும்பம்.
அப்போது முதல் இன்று வரை விஜய் பாடிக் கொண்டிருக்கிறார். கஷ்டமான பாடல்களை எல்லாம் பாடுகிறார்” என்ற பாராட்டி பேசினார்.
விஜய் மற்றும் தேவா கூட்டணியில் மொத்தம் 13 படங்கள் வெளிவந்துள்ளன.
காப்பி ரைட்ஸ் பற்றி தேவா
இன்று பிரபல இசை அமைப்பாளர்கள் தாங்கள் இசையமைத்த பாடல்களை, பிற படங்களில் பயன்படுத்தக் கூடாது என்று உரிமை கோரி வருகின்றனர்.
இந்த நிலையில் காப்பி ரைட்ஸ் பற்றி பேட்டி ஒன்றில் கூறிய இசையமைப்பாளர் தேவா, ‘என்னுடைய பாடல்களை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளட்டும். காப்பி ரைட்ஸில் பணம் வரும் அவ்வளவுதான்.
கரு கரு கருப்பாயி பாடலை பயன்படுத்தி (லியோ படத்தில்) இருக்கிறார்கள். அது இப்போது 2கே கிட்ஸ் வரை சென்று சேர்ந்திருக்கிறது. இது எனக்கு முக்கியம். பணத்தைவிட என்னுடைய பாடல்களை ரசிக்க வேண்டும் அவ்வளவுதான்” என்று கூறியிருக்கிறார்.
பாட்ஷா மியூசிக்…

பாட்ஷா படத்தில் இசையமைப்பாளர் தேவா இசையமைத்தது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘பாட்ஷா படத்தின் மீது முதலில் எனக்கு நம்பிக்கை வரவில்லை. அண்ணாமலை மாதிரி இருக்குமா என்று யோசித்தேன்.
பிரசாத் ஸ்டுடியோவில் தேவா சார், சுரேஷ் கிருஷ்ணா எல்லோரும் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது.
தேவா சாருக்கு போன் செய்தேன். படம் எப்படி இருக்கிறது… அண்ணாமலை மாதிரி இருக்கிறதா என்று கேட்டேன்.
அண்ணாமலை மாதிரியா… 10 அண்ணாமலைக்கு சமம் பாட்ஷா என்று கூறினார் தேவா. பத்து அண்ணாமலையா என்று எனக்கு ஒரே ஆச்சரியம்.
பிறகு மேனா தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்த்தோம். அப்போது தான் தெரிந்தது… பாட்ஷா படத்தை மியூசிக்கில் எப்படி தேவா உயர்த்தி விட்டார் என்று.
என்ன ஒரு பேக்ரவுண்ட் மியூசிக்… மாஸ் பிஜிஎம். அந்தப் படத்தை தூக்கி நிறுத்தியது தேவா சார்” என்று புகழாரம் சூட்டினார்.
வருத்தத்தை பதிவு செய்த தேவா

லப்பர் பந்து திரைப்படத்தில் ஒரு காட்சியில், பேருந்தில் தேவா இசையமைத்த பாடல் ஒலிக்கும் போது, முதியவர் ஒருவர் ’ராஜா ராஜா’ தான் என்று கூறுவார்.. இதற்கு இளைஞர் ஒருவர் அது தேவாவின் பாடல் என்று பதிலளிக்கும் காட்சி அது.
இது தொடர்பாக பேட்டி ஒன்றில் தேவாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், ”’எவ்வளவோ மெலோடி பாட்டுகளை தேவா அல்லாமல் வேறொரு மியூசிக் டைரக்டர் இசையமைத்ததாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தேவாவின் வலி எப்படி இருந்திருக்கும்’ என்று அந்த இயக்குனர் (லப்பர் பந்து) பேட்டி அளித்திருந்தார். அதையும் பார்த்தேன். சந்தோஷமாக இருந்தது.
அந்த வகையில் இப்போதுதான், இந்த பாட்டுகள் எல்லாம் என்னுடையது என்று தெரிய ஆரம்பித்திருக்கிறது.
இதை நான் எதற்கு சொல்கிறேன் என்றால், ஒரு லைவ் நிகழ்ச்சிக்காக, என்னுடைய சாங்ஸ் லிஸ்ட்டை கேட்டிருந்தனர். அதன்படி நானும் அனுப்பி வைத்தேன்.
பின்னர் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் என்னிடம், ’தேவா சார் உங்கள் பாட்டு மட்டும் இருந்தால் போதும். மற்ற மியூசிக் டைரக்டர் பாடல்களை எல்லாம் ஏன் அனுப்புகிறீர்கள்’ என்று கேட்டார்கள்.
“கொஞ்ச நாள் பொறு தலைவா” பாடல் எல்லாம் நான் இல்லை என்று சொல்கிறார்கள். அப்போது எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும். பாடலை உருவாக்கிய எனக்கு எப்படி இருந்திருக்கும்.
டவுன் பஸ் சாங்ஸ் என்று சொல்வார்கள். தூதுவளை இலை அரைச்சு… இது போன்ற பாடல்களுக்கு எல்லாம் நான் இசையமைத்திருக்கிறேன். அப்போது தெரியவில்லை. இப்போது தெரிய வருகிறது” என்று வேதனையோடு கூறியிருக்கிறார்.
விஜய்க்கு மட்டுமல்ல அஜித்துக்கும்….
விஜய்க்கு 13 படங்களுக்கு இசையமைத்துள்ள தேவா, அஜித் குமார் நடித்த ஆசை, கல்லூரி வாசல், மைனர் மாப்பிள்ளை, காதல் கோட்டை, நேசம், அவள் வருவாளா, உயிரோடு உயிராக, தொடரும், உன்னைத்தேடி, வாலி, ஆனந்த பூங்காற்றே, சிட்டிசன், முகவரி என 14 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தேவாவின் நளின காந்தி

நடிகை சிம்ரன் நடனமாடிய ’மனம் விரும்புதே’ பாடலுக்கு இசையமைத்தவர் தேவா. இன்றும் அந்த பாடலை கேட்டால், நம்மை அறியாமலேயே துள்ளல் நடனம் போட தோன்றும்.
பொதுவாக கானா பாடல்களுக்கு புகழ்பெற்றவர் தேவா என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், மனம் விரும்புதே பாடலில் கர்நாடக இசையின் நளின காந்தி ராகத்தின் மெல்லிய இனிமையான உணர்வை மிக நேர்த்தியாக கையாண்டிருப்பார்.
கானா பற்றி தேவா…
கானா பாடல்களை சினிமாவில் கொண்டு வந்ததால் ஆரம்ப காலங்களில் பல்வேறு அவமானங்களை தான் சந்தித்ததாகவும் தேவா பேட்டிகளில் வருத்தப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
