ஒரு கள்ளம் கபடம் இல்லாத, வஞ்சகம் இல்லாத ரொம்ப அருமையான சொக்கத் தங்கம் தேவா என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் தேவா இன்று திடீர் மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு திரை உலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அவரது உடல் வைக்கப்பட்டுள்ள திநகரில் சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து அவர் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் , “என் அருமை நண்பர், இசையமைப்பாளர் தேவா அவருடைய திடீர் மறைவு ரொம்ப அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
அவர் என்னுடைய படங்களில் மூன்று படங்களுக்கு மியூசிக் செய்தார். அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம். மூன்றும் மிகப்பெரிய சக்சஸ்.
அதுக்கப்புறம் வந்து ‘படையப்பா’ எடுக்கும்போது, என் நண்பர்கள் எல்லாம் ஏ.ஆர். ரஹ்மான் போடலாம் என்று சொன்னாங்க. அப்போ எனக்குள்ள ஒரு தயக்கத்தோடு நான் தேவாகிட்ட போய், ‘இந்த மாதிரி படத்துக்கு நான் ஏ.ஆர். ரஹ்மானை வச்சுப் பண்ணனும்னு நினைக்கிறேன்’னு தயங்கிக்கிட்டே சொன்னேன். அதுக்கு அவர் உடனே எந்திரிச்சு நின்னு, என் கையைப் பிடிச்சு, ‘தாராளமாகப் பண்ணுங்க சார்’னு சொன்னாரு.
‘இல்ல, நீங்க தப்பா நினைச்சுக்க கூடாது’னு நான் சொன்னதுக்கு, ரொம்ப சந்தோஷமா சொன்னாரு: ‘ரஜினி சார், நல்லா பையன் புதுசா வந்துட்டு இருக்கான், நல்லா வந்திருக்கு, நல்லா பண்ணுங்க. ரொம்ப சந்தோஷம். இந்த மூணு படமும் நீங்க என்கிட்ட பண்ணதே எனக்குப் பெரிய பாக்கியம்’னு சொன்னார்.
இந்த மாதிரி ஒரு கள்ளம் கபடம் இல்லாத, வஞ்சகம் இல்லாத ரொம்ப அருமையான சொக்கத் தங்கம் தேவா அவர்கள்.
அவர் வாழ்க்கையில ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டிருக்கார். அஞ்சு தம்பிங்க… மொத்தத்துல அண்ணன் தம்பிகள் அஞ்சு பேரு, இவர்தான் மூத்தவர். தெருத்தெருவா கச்சேரி பண்ணி, கல்யாண மண்டபங்கள்ல கச்சேரி வாசிச்சு, அந்தத் தம்பிகளையும் தம்பிகளோட குடும்பத்தையும் காப்பாத்தினவர். அதுக்கப்புறம் பெரிய திரையுலகத்துல பெரிய இசையமைப்பாளர் ஆன பிறகு கூட தம்பிகளை விட்டுக்கொடுக்கவே இல்லை, கூடவே வச்சிருந்தார்.
அந்த மாதிரி ஒரு அருமையான குடும்பஸ்தர், ஒரு நல்ல மனிதர்.
இளையராஜா அவர்கள் கொடிகட்டிப் பறக்கிற காலத்தில் கூட, தேவா அவர்கள் தனக்கென்று சொல்லி ஒரு பாணியை உருவாக்கி மிகப்பெரிய வெற்றி அடைஞ்சார்.
ஒரு இரண்டரை வருஷத்துக்கு முன்னால, ‘எல்லாரும் கான்செட் பண்றாங்க.. நானும் லைவ் கான்செப்ட் பண்ணலாம் என்று இருக்கிறேன். நீங்கதான் துவக்கி வைக்கணும்’னு சொன்னாங்க. நான் சந்தோஷமா போய் அதுல கலந்துக்கிட்டேன்.
அதுக்கப்புறம் பல்வேறு வெளிநாடுகள்ல எல்லாம் அவர் கான்செப்ட் பண்ணிட்டு இருந்தாரு. மிகப்பெரிய வெற்றி, ரொம்ப ரொம்ப சந்தோஷமான வெற்றி! அப்போ ஒரு வாட்டி வெளிநாட்டு டூர் முடிச்சிட்டு என்கிட்ட வந்து பார்க்கிறாங்க. ‘ஜஸ்ட் ஒரு மூணு மாசம் முன்னால் வந்துட்டு போனார்.
அப்பப் பேசும்போது ரொம்ப சந்தோஷமாக சொன்னார் ‘இன்னைக்கு ஆச்சரியமா இருக்கு சார், யங்ஸ்டர்ஸ்லாம் அந்த மாதிரி வந்து வரவேற்கிறாங்க, அவ்வளவு சந்தோஷமா இருக்கு ரஜினி சார்! நான் இந்தச் சந்தோஷத்துல இன்னும் பத்து பதினைஞ்சு வருஷம் வாழ்ந்துட்டு போயிடுவேன்’ அப்படின்னு என்கிட்ட சொன்னாங்க.
ஆண்டவன், ‘நீ ரொம்ப நல்லவன்ப்பா, நீ சந்தோஷமா இருக்கும்போதே என்னிடம் வந்துடுன்னு கூப்பிட்டார்போல’
அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும். அவங்க குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்!” என தெரிவித்துள்ளார்
