அரசியலில் ஹீரோவா, வில்லனா? திரை பிம்ப அரசியலும், நடிகர்களின் தன்னுணர்வு கொண்ட அரசியல் பயணங்களும்!

Published On:

| By ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன் குறை

பல நடிகர்கள் கதாநாயக பிம்பமாக, பெரும் பொருளீட்டும் நட்சத்திரமாக நிலைபெறுவதற்கு நிறைய படங்கள் தேவைப்படும்; சிலருக்கு முதல் படமே அப்படி ஒரு நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்துவிடும்! சிலருக்கு பல படங்கள் மெல்ல, மெல்ல அவர்களின் நட்சத்திர அந்தஸ்த்தை உருவாக்கினாலும், ஒரு குறிப்பிட்ட படம் அவர்களின் முத்திரைப் படமாக அறியப்படும்.

உதாரணமாக தன்னிகரற்ற கதாநாயக பிம்பமாக தமிழ் சினிமா வரலாற்றில் தடம் பதித்த எம்.ஜி.ஆர் 1936 முதல் 1949 வரை துணை பாத்திரங்களில் இருபது படங்கள் வரை நடித்துள்ளார். பின்னர் கலைஞர் வசனங்களால் பெரும் வெற்றியடைந்த மந்திரி குமாரி (1950) பட த்தில் துவங்கி, அவரது வசனத்தில் உருவான மலைக்கள்ளனில் (1954) மக்கள் மனம் கவர்ந்து, பதினைந்து இருபது படங்களில் தனது உச்ச நட்சத்திர அந்தஸ்த்தை எட்டினார்.

ADVERTISEMENT

அவருடைய தனிப்பெரும் திருப்புமுனைப் படமாக, அவருடைய தனித்துவத்தை, முதன்மை நட்சத்திர அந்தஸ்த்தை நிலை நிறுத்திய படமாக அமைந்தது 1958-ஆம் ஆண்டு அவரே தயாரித்து இயக்கி, இரட்டை வேடத்தில் நடித்த நாடோடி மன்னன் திரைப்படம்தான். இந்த படம் வெற்றி பெற்றால் நான் மன்னன், இல்லாவிட்டால் நாடோடி என்று அவர் கூறியதாகச் சொல்வார்கள். ஆங்கிலத்தில் இத்தகைய முத்திரை படைப்புகளை “signature film/work” என்று சொல்வார்கள்.

சிவாஜி கணேசனுக்கு முதல் படமே அப்படி அமைந்துவிட்டது. கலைஞரின் இறவாப்புகழ் வசனங்களை அவர் பேசிய பாங்கு தமிழ் சினிமா வரலாற்றையே மாற்றியமைத்தது எனலாம். அதிலும் இறுதி நீதிமன்றக் காட்சியில் அவர் பேசிய நீண்ட வசனம் ஒரு பண்பாட்டுப் பிரகடனமாக, அரசியல் அறிக்கையாக பல்வேறு பரிமாணங்களை காலப்போக்கில் பெற்று தமிழர் வரலாற்றின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது எனலாம். எத்தனை தலைமுறைகள் பயிற்சியாக அதை மனப்பாடமாக பேசி நடித்து வருகின்றன என்பதற்கு இணையாக திரைப்பட வரலாற்றில் வேறெதையும் கூற முடியாது.

ADVERTISEMENT

ரஜினிகாந்த்தின் முத்திரை படம் பாட்ஷா என்பதை பலரும் ஏற்றுக்கொள்வார்கள். அதற்கு முன்னும் பின்னும் பல வெற்றிப்படங்கள் அமைந்தாலும், பாட்ஷா அவரது தனித்துவமிக்க படம். விஜய்காந்த்திற்கு கேப்டன் என்பதை அவரைக் குறிப்பிடும் அடைமொழியாக மாறக் காரணமான கேப்டன் பிரபாகரன் முத்திரை படம் எனலாம்.

கமலஹாசன் என்று வந்தால் சற்றே மாறுபடும். அவர் படங்கள் ஆழ்கடலில் புயற்காற்றில் எழும்பும் அலைகள். எது அதிக உயரம் என்று கணிப்பது கடினம். வணிக ரீதியான வெற்றிகள், கலாபூர்வமான வெற்றிகள் என்று பல பரிமாணங்களில் பல படங்கள் தனித்துவமிக்கவை. ஒருவர் ராஜபார்வை எனலாம். ஒருவர் நாயகன் எனலாம், மற்றொருவர் தேவர் மகன் எனலாம், ஹே ராம் எனலாம், ஒரு சிலர் அன்பே சிவம் என்றும் கூறலாம்.

ADVERTISEMENT

இவ்வளவெல்லாம் சொல்லக் காரணம், நடிகர் விஜய் என்று வந்தால் நிச்சயம் பலரும் ‘கில்லி’ என்று சொல்வார்கள் என்பதுதான். தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும், 2004-ஆம் ஆண்டு  வெளியான இந்த படத்தை, அதற்குப் பத்தாண்டுகளுக்கு முன் வெளியான பாட்ஷா படம் போல மீண்டும், மீண்டும் பார்த்து ரசித்த படம் கில்லி. தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஒக்கடு படத்தின் ரீ மேக் என்றாலும், தமிழில் சில, பல மாற்றங்களைச் செய்து கதையை பல மடங்கு மேலும் சுவாரசியப்படுத்தி இருந்தார்கள்.

விஜயின் நட்சத்திர அந்தஸ்த்தை நிலைநிறுத்தியது மட்டுமல்லாமல், இந்த படத்தின் இன்னொரு சிறப்பு வில்லன் நடிகராக பிரகாஷ் ராஜின் முத்திரை படமாகவும் இது அமைந்ததுதான். தெலுங்கு ஒக்கடுவிலும் அவர் அதே பாத்திரத்தில் நடித்திருந்தாலும், தமிழில் அந்த பாத்திரம் பன்மடங்கு மெருகேற்றப் பட்டிருந்தது. அவர் இந்த படத்தில் கதாநாயகியை ‘செல்லம்’ என்று அழைக்கும் விதம் பெறும் வரவேற்பைப் பெற்றதுடன் இன்றுவரை பல மேடைகளில் அவர் தோன்றும்போது குறிப்பிடப் படுவதாகவும் உள்ளது. கில்லி படத்தை முத்திரை படமாகக் கொண்ட கதாநாயக நடிகரும், வில்லன் நடிகரும் இன்று அரசியலில் பங்கேற்கும் விதம்தான் மிகவும் சுவாரசியமானதாக உள்ளது.

கில்லியில் வில்லனும், கதாநாயகனும்

கில்லியின் வில்லன் பிரகாஷ் ராஜ் நடித்த முத்துபாண்டி பாத்திரம் சக்திவாய்ந்த மாநில உள்துறை அமைச்சரின் மகன். மதுரையில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர் திரிஷா ஏற்று நடித்த தனலெட்சுமி என்ற பெண்ணை மணந்துகொள்ள விரும்புவார். தன் விருப்பத்திற்கு மாறாக எது நடந்தாலும் சகிக்க மாட்டார். தனலெட்சுமியின் இரண்டு அண்ணன்களும் திருமணத்திற்கு மறுப்பதால் அவர்களைக் கொன்று விடுவார்.  அவரிடமிருந்து தப்பித்து அமெரிக்காவில் உறவினர்களிடம் செல்லக் கிளம்புவார் தனலெட்சுமி. ஆனால் விதிவசமாக அவரிடமே மாட்டிக்கொள்வார்.

வடசென்னையில் போலீஸ் அதிகாரியான அப்பா சிவசுப்ரமணியத்தின் (ஆஷிஷ் வித்யார்த்தி) விருப்பத்திற்கு மாறாக கபடி விளையாட்டில் பெரிய வீரராக விளங்குவார் வேலு (விஜய்). மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள, தற்செயலாக அப்போது நடக்கும் உறவினர் திருமணத்திற்கு செல்வதாகப் பொய் சொல்லி அனுமதி வாங்கிக் கொண்டு மதுரை செல்வார். சென்ற இடத்தில் இரயில் நிலையத்திலேயே தனலெட்சுமியின் அண்ணனை முத்துபாண்டி கொல்வதைப் பார்ப்பார். பின்னர் காலையில் அவர் ஓட்டப்பயிற்சிக்கு செல்லும்போது தன்னிடமிருந்து தப்பிச்செல்லும் தனலெட்சுமியை நடு வீதியில் பிடித்து முத்துபாண்டி இழுத்துச் செல்வதைப் பார்ப்பார்.

ஒரு ரவுடியிடம் சிக்கிக் கொள்ளும் இளம்பெண்ணாக தனலெட்சுமியை பார்க்கும் அவர், தனக்கு முன் பின் தொடர்பேயில்லாவிட்டாலும் காப்பாற்ற முடிவு செய்வார். சட்டென்று சமயோசிதமாக முத்துபாண்டியின் காரிலேயே அவரை ஏற்றிக்கொண்டு கிளம்பிவிடுவார். முத்துபாண்டி பெரிய படையுடன் துரத்தி வந்தாலும், மீண்டும் அவர் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு சென்னைக்குக் கூட்டி வந்துவிடுவார். அவரை தன் வீட்டிலேயே ஒழித்து வைப்பார். தங்கைக்கும், அம்மாவுக்கும் தெரிந்துவிட்டாலும் அவர்களிடம் உண்மையைக் கூறி அப்பாவிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்வார்.

இதற்குள் அமைச்சரான தன் தந்தையுடன் சென்னைக்கு வரும் முத்துபாண்டி சிவசுப்ரமணியம் தலைமையிலான போலீஸ் படையை எப்படியாவது தனலெட்சுமியை கண்டுபிடித்துத் தரச்சொல்வார். அவரும் அவர் ஆட்களுடன் தேடுவார். வேலு இரண்டு தரப்பினர் கண்ணிலும் சிக்காமல் தனலெட்சுமி அமெரிக்க செல்ல தேவையானவற்றைத் தயார் செய்வார். ஆனால் கடைசி நாளுக்கு முன்னிரவு அப்பா சிவசுப்ரமணியத்திற்குத் தெரிந்துவிட அவரிடமிருந்தும் தப்பி லைட் ஹவுஸில் ஒளிந்து கொள்வார்கள்.

மறுநாள் கபடியிலும் ஃபைனல் மாட்ச். தனலெட்சுமியும் தப்பித்து அமெரிக்கா செல்லவேண்டும். பரபரக்கும் கிளைமாக்ஸில் தனலெட்சுமியை வேலு விமான நிலையத்தில் விட்டுவிட்டு கபடி விளையாட மைதானத்திற்கு வருவார். வேலுவின் தங்கை அப்பாவிடம் அவரது கபடி ஈடுபாட்டினை விளக்கி அவரை மாட்ச் முடியும்வரை கைது செய்யவேண்டாம் என்று மன்றாடுவார். அவரும் ஏற்றுக்கொண்டு மாட்ச் நடக்கும் இடத்திற்கு வருவார்.

ஆனால் தனலெட்சுமியின் நினைவால் வேலுவால் கபடியில் கவனம் செலுத்த முடியாது. கவனமில்லாமல் மாட்சில் தோற்கத் துவங்குவார். அப்போது எதிர்பாராத விதமாக தனலெட்சுமி அமெரிக்கா செல்லாமல் கிரவுண்டிற்கு வந்துவிடுவார். அவரைப் பார்த்த வேலு சிறப்பாக விளையாடி போட்டியில் வென்றுவிடுவார். ஆனால் அந்த நேரம் முத்துபாண்டி தந்தையுடன் அங்கே வந்துவிடுவார். தனலெட்சுமியை கையைப்பிடித்து இழுத்துச் செல்வார். அப்போது தனலெட்சுமி தைரியமிருந்தால் வேலுவுடன் ஒற்றைக்கு ஒற்றை மோதி வென்றுவிட்டுத் தன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்வார்.

வர்மக் கலை தெரிந்த முத்துபாண்டி சுலபத்தில் வேலுவை முடக்குவார். ஆனால் தன் மனோவலிமையால் வேலு மீண்டெழுந்து முத்துபாண்டியை தாக்க அவர் மின்சார டிரான்ஸ்ஃபார்மரில் மோதி மின்சாரம் பாய்ந்து இறந்துவிடுவார். வேலுவும், தனலெட்சுமியும் இணைந்துவிடுவார்கள்.

இன்றைய இந்திய அரசியல் சூழல்

இந்தியாவின் எழுபத்தாறு ஆண்டுகால குடியரசில் முன்னெப்போதும் நிகழாத ஒரு நெருக்கடியான காலகட்டம் உருவாகியுள்ளது. அது என்னவென்றால் தேர்தல்களை முறையாக நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், ஞானேஷ்குமார் என்ற தலைமைத் தேர்தல் ஆணையர், ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்கும்படி பல முறைகேடுகளை செய்துள்ளதாக பெரும்பாலான எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வாக்குத் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியலில் உள்ள பல்வேறு முறைகேடுகளை ராகுல் காந்தி பொதுவெளியில் அம்பலப்படுத்தினார். ஹரியானா போன்ற மாநில தேர்தல்களிலும், நாடாளுமன்றத்திற்கான 2024 ஆண்டு தேர்தலிலும் பல முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையம் இதற்கெல்லாம் திருப்திகரமான விளக்கங்களை அளிக்கவில்லை. அவரைப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யச் சொல்லி பிரச்சினையை மடைமாற்றியது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்வதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். அதில் வாக்குரிமை பெற வேண்டும் என்றால் இருபதாண்டுகளுக்கு முன் நடந்த SIR-இல் பங்கேற்ற விவரங்களைத் தர வேண்டும், இல்லாவிட்டால் பெற்றோர் பங்கேற்ற விவரங்களைத் தரவேண்டும் என்று ஒரு கேள்வியை இணைத்தார் ஞானேஷ்குமார்.  ஏராளமானவர்களால் வாக்காளராகும் தகுதி இருந்தும் இந்த தகவல்களைத் தர முடியவில்லை. பலர் அரசு ஊழியர்கள் சரிபார்க்கச் செல்லும்போது விலாசத்தில் இருக்கவில்லை. இந்தக் காரணங்களைக் காட்டி 13 கோடி பேர்களை நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் பலமுறை முறையிட்டன. இறந்ததாக நீக்கப்பட்டவர்களை நேரில் வரவழைத்துக் காட்டினார்கள். விலாசத்தில் இல்லை என்று நீக்கப்பட்டவர்கள் அங்கேதான் இருந்தார்கள். பாஸ்பார்ட் வைத்திருப்பவர்கள், வருமான வரி கட்டுபவர்கள் பலரும் நீக்கப்பட்டிருந்தார்கள். இதில் மேலும் ஒரு பிரச்சினை. களப்பணி சரிபார்ப்பில் தயாராகும் பட்டியலில் இருப்பவர்களை, டில்லியில் உள்ள தரவுகள் மையத்தில் நீக்கும் அதிகாரத்தையும் தேர்தல் ஆணையம் வைத்துக் கொண்டது. களத்தில் உள்ளவர்களால் இதில் தலையிட முடியாது.

இந்த வாக்காளர் உரிமை பறிப்பு தொடர்பான கோபம் மக்களிடையே கனன்று கொண்டிருந்தது. அப்போதுதான் தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு ஆணையர்கள், தங்கள் ஒப்புதல் இல்லாமல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செயல்படுவதாகக் கூறியது தெரியவந்தபோது அது பெரும் கொந்தளிப்பாக மாறியது. நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக பெரும் போராட்டத்தை சமீபத்தில் நடத்தி ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகச் செய்த இளையோர் அமைப்பான காக்ரோச் ஜனதா பார்ட்டியும். இடது சாரி மாணவர் அமைப்புகளும் மீண்டும் போராட்டத்தை அறிவித்தன.

காங்கிரஸ் கட்சி தலைமையில் இயங்கும் இந்தியா கூட்டணி கட்சிகளும் போராட்டங்களை அறிவித்தன. தினசரி டில்லியில் பேரணிகளும், ஊர்வலங்களும் நடப்பதும், அவற்றை ஒடுக்கும் போலீஸ் ஏராளமானவர்களை கைது செய்வதுமாக தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. எதிர்கட்சி தலைவர்கள் பலரும், மாணவர், இளைஞர்கள் தலைவர்கள் பலரும் குண்டுகட்டாகத் தூக்கப்பட்டு காவல்துறை வாகனங்களில் ஏற்றப்படுவது இயல்பான காட்சியாக மாறி வருகிறது.

மக்களாட்சியைக் காப்பதற்கான போர் என்றே இதனை இளைஞர்களும், மாணவர்களும், எதிர்கட்சிகளும். குடிமைச் சமூக செயல்பாட்டாளர்களும் அறிவித்துள்ளனர். மும்பை, கல்கத்தா, பெங்களூரு, சென்னை என பல நகரங்களிலும் போராட்டங்கள் நடக்கின்றன. எல்லா இடங்களிலும் காவல்துறை கைது நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஆனால் போராட்டங்கள் வலுக்கின்றன. இதுவரை இந்திய குடியரசு காணாத ஒரு சூழல் உருவாகியுள்ளது.

தி.மு.க இந்தியா கூட்டணியில் இல்லாவிட்டாலும் போராட்டங்களின் கோரிக்கைகளை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இளையோர் அமைப்பு காக்ரோச் ஜனதா கட்சிக்கு தன் முழுமையான ஆதரவை அளித்துள்ளது. பாஜக-வின் மக்களாட்சி விரோதப் போக்கை திட்டவட்டமாகக் கண்டித்து, தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்கிறது.

கதாநாயக பிம்ப அரசியல் என்ன செய்கிறது?

ஒரு கதாநாயக பிம்பமாக நடிகர் விஜய் மக்களைக் கவர்ந்ததற்குக் காரணம் அவர் அநீதிகளை எதிர்த்துப் போராடுவார் என்பதுதான். உதாரணமாக நாம் மேலே கண்ட கில்லி படத்தில் முன் பெண் தெரியாத ஒரு இளம் பெண், கொலைக்கஞ்சாத முரடர் ஒருவரால் துன்புறுத்தப் படுகிறார் என்று காணும்போது தன் உயிரைப் பணயம் வைத்து அவரைக் காப்பாற்ற முனைகிறார். சொந்த தந்தையையே எதிர்த்துச் செயல்படுகிறார்.

பொதுவாகவே கதாநாயக பிம்பங்களை ரசிகர்கள் ஆராதிப்பது இப்படியான தார்மீக சாகச குணத்திற்காகத்தான். அவர்கள் தர்மத்தின் பக்கம் நிற்பார்கள். தீயவர்களுடன் போராடி அவர்களை அழிப்பார்கள். நல்ல வர்களைக் காப்பாற்றுவார்கள். இது கடவுள்களுக்கு உள்ள குணமாக புராண கதைகளில் கூறுவார்கள். ஆனால் கடவுள்கள் கூட சற்றே முன்னே பின்னே இருப்பார்கள் (வாலி வதம்; மாபலி மோட்சம்). தமிழ் சினிமா நாயகர்கள் தர்மத்தின் பக்கம்தான் அசராமல் நிற்பார்கள்.

அப்படி ஒரு கதாநாயக பிம்பமாகத்தான் விஜய் மக்களிடம் வாக்குகளைப் பெற்றுள்ளார். அவர் அரசியலில் இதுவரை மக்களுக்காக எந்த போராட்டமும் செய்ததில்லை. மக்களை அணிதிரட்டியதில்லை. அவர்கள் சுக துக்கங்களில் பங்கெடுத்த தில்லை. ரசிகர் மன்றங்கள் வழக்கமாகச் செய்யும் நற்பணிகளான மாணவர்களுக்கு பரிசு கொடுப்பது என்பன போன்ற செயல்களைத்தான் செய்துள்ளார்.

அவர் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே கட்சி துவங்கிவிட்டாலும், அந்த தேர்தலில் போட்டியிடவில்லை. மாநில அரசியல்தான் தன்னுடைய களம் என்று சொல்லிவிட்டார். தி.மு.க-வை எதிர்ப்பதுதான் தன்னுடைய ஒரே அரசியல் என்று அறிவித்தார். ஒரு பேச்சுக்கு பாஜக கொள்கை எதிரி என்று சொன்னாலும், அதைப்பற்றி எதுவுமே பேச மாட்டார். எதற்கெடுத்தாலும் தி.மு.க-தான் காரணம், தீய சக்தி என்று பேசிவந்தார்.

அவர் பெரும்பான்மைக்கு சற்றே குறைவான இடங்களில் வென்றவுடன், காங்கிரஸ் கட்சி ஓடிப்போய் அவருக்கு ஆதரவு அளித்தது. அவரது அமைச்சரவையில் பங்கேற்றது. ராகுல் காந்தி அவர் பதவியேற்பு விழாவிற்கு வந்தார். அவருடன் மிகுந்த நெருக்கம் பாராட்டினார். எதிர்வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலிலும் தவெக-வுடன் கூட்டு என ஒப்பந்தம் போட்டுக் கொண்டது காங்கிரஸ் கட்சி.

இந்த அளவு நெருக்கமான காங்கிரஸ் கட்சி தன் சக்தியெல்லாம் திரட்டி பாஜக-விற்கு எதிராக போராடுகிறது. தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும், SIR முழுவதும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. அப்போது நம் கதாநாயக பிம்பம் என்ன செய்யவேண்டும்? மக்களாட்சியைக் காக்க முழங்க வேண்டும். டில்லிக்குச் சென்று போராட்ட த்தில் கலந்துகொள்ள வேண்டும். நண்பர் ராகுல் காந்தியுடன் சேர்ந்து கைதாக வேண்டும்.

அதுதான் இல்லை. நாட்டில் இப்படி ஒரு பிரச்சினையே நடப்பதாக நமது நாயக பிம்பம் காட்டிக் கொள்வதில்லை. யார் போராடினால் என்ன, கைதானால் என்ன என்று கம்மென்று இருக்கிறது. சென்னைக்கே ராகுல் காந்தி வந்தபோதும் அவருடன் ஒரு புறம் விருந்து சாப்பிட்டுக்கொண்டே, மற்றொருபுறம் SIR-க்கு எதிராக போராடும் மாணவர்களை, இளைஞர்களை கைது செய்கிறது. தி.மு.க தலைவர்கள் சென்று அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கிறார்கள்.

தேர்தல் ஆணையத்தை, பாஜக-வை எதிர்த்து ஒரு அறிக்கை விடக்கூட அஞ்சுகிறது கதாநாயக பிம்பம். திரைப்பட த்தில்தான் வீர தீரமெல்லாம்; அரசியலில் இடிச்சபுளி போல வாய் மூடி மெளனியாக வலம் வருகிறது நாயக பிம்பம். நினைக்க நினைக்க வியப்பாக உள்ளது இந்த முரண்பாடு.

அறம் காக்க போராடும் தன்னுணர்வு மிக்கவராக வில்லன் பாத்திர நடிகர்  

இதற்கு நேர் மாறாக அமைந்துள்ளது கில்லி பட வில்லன் நடிகரான பிரகாஷ் ராஜின் அரசியல் பங்கேற்பு. அவர் எந்த கட்சியும் துவங்கவில்லை. ஒரு முறை பெங்களூருவில் தேர்தலில் போட்டியிட்டாலும், கெளரி லங்கேஷ் படுகொலையை கண்டிக்கும் விதமாகத்தான் போட்டியிட்டார். பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்படாமல் மக்களாட்சி விழுமியங்களைக் காக்க பாஜக-வை கண்டித்து போராட்டங்களில் பங்கேற்கிறார் பிரகாஷ் ராஜ்.

ஆறாண்டுகளாக விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலித்திற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறார். வரலாற்று ஆசிரியர்களான ராமச்சந்திர குஹா, ஜானகி நாயர் ஆகியோருடன் பொது மேடையில் உமர் காலித் நூல் குறித்து விவாதிக்கிறார். காக்ரோச் ஜனதா கட்சி இளைஞர்களுடன் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்றார். ஷபனா ஹாஸ்மி, நஸ்ருதீன் ஷா போன்ற அறிவார்த்தமான திரைக்கலைஞர்கள் போல மக்களாட்சிக்காக நாடு முழுவதும் பயணம் செய்து குரல் கொடுத்து வருகிறார்.

கில்லி பட த்தில் அவருக்கு தன்னுணர்வே இருக்காது.  ஐ லவ் யூ என்பதைக் கூட ‘ஐ’ என்ற தற்சுட்டை பிரித்துச் சொல்லத் தெரியாமல் சொல்வார். தான் நினைப்பதே சரி, அதையே அனைவரும் செய்ய வேண்டும் என்று நினைப்பார். அப்படிபட்ட பாத்திரத்தில் திரையில் தோன்றியவர், அரசியல் தன்னுணர்வில் மிகச்சிறந்த பண்பட்ட மனிதராக, இந்திய குடிமைச் சமூகக் குரலாக மாறியுள்ளார்.

ஒரு நடிகர் ஏற்று நடிக்கும் பாத்திரத்திற்கும் அவரது நிஜ வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்காது என்பது இயல்புதான். ஆனால் தங்களது திரைபிம்பத்தின் மூலம்தான் அவர்கள் பொதுவாழ்க்கையில் கவனம் பெறுகிறார்கள். ஒருவர் வெறும் பிம்பத்தை வைத்து ஆட்சி அதிகாரத்தை பொம்மையாக அலங்கரிக்கிறார். மற்றொருவர் தன்னுடைய அரசியல் தன்னுணர்வின் மூலம் கலைஞர்கள் சமூகத்திற்கே பெருமை சேர்க்கிறார். அவர்கள் பங்கேற்ற திரைக் கதையாடலுக்கும், இன்றைய அரசியல் சூழலுக்குமான இந்த தீவிர முரண்பாடு மிகவும் சுவாரசியமானதாக அமைந்துள்ளது எனலாம்.

Photo of author
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share