டோரதி திரைப்படத்தை பார்த்துவிட்டு கண்ணீருடன் வெளியெ வந்ததாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
திருநங்கைகளின் வாழ்க்கை மற்றும் அவர்களின் உணர்வுகளை மையமாகக் கொண்டு கார்த்திக் சுப்புராஜு இயக்கிய படம் டோரதி. இப்படத்தில் சனந்த், ரிஷிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 25, 2026 அன்று திரையரங்குகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் அக்டோபர் 23, 2026 அன்று வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்தப்படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு தனது கருத்தை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவு செய்துள்ளார்.
அதில், ”எனது குடும்பத்தினருடன் கார்த்திக் சுப்புராஜின் டோரதி திரைப்படத்தை பார்ப்பதற்காக திரையரங்கிற்கு சென்றிருந்தேன்.. என் குடும்பத்தினருடன் இதுபோன்று திரையரங்குக்கு செல்வது அரிதான விஷயம். எனவே ஒரு நல்ல திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பில் இருந்தேன்.
ஆனால் படம் முடிந்து வெளியே வரும்போது என் இதயம் நம்பிக்கையால் நிறைந்திருந்தது. கண்களில் கண்ணீர் ததும்பியது. இந்திய சினிமா ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை சந்தித்திருக்கிறது என்ற ஆழமான நம்பிக்கையும் ஏற்பட்டது.

திரைப்படத்தின் தலைப்பு என் கவனத்தை ஈர்த்தது. கிரேக்க மொழியில் டோரதி என்பதற்கு ‘கடவுளின் கொடை’ என்று பொருள்.
வரலாற்றில் இதற்கு மற்றொரு அழகான அர்த்தமும் உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் எல்ஜிபிடிக்யூ ப்ளஸ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பாதுகாப்பாக அடையாளம் கண்டு கொள்வதற்காக, ‘நீங்கள் டோரதியின் நண்பரா?” என்ற சொற்றொடரை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த இரண்டு அர்த்தங்களுமே இந்த திரைப்படத்திற்கு பொருத்தமாக இருந்தன.
இந்த படத்தின் சூழலையும் உணர்வுகளையும் மற்றொரு உயரத்திற்கு இசைஞானி இளையராஜா கொண்டு சென்று இருக்கிறார். 85 வயதை நெருங்கிய நிலையிலும் புதிய இசைகளில் அவர் காட்டும் ஆர்வமும் முயற்சிகளும் வியக்க வைக்கின்றன.
டோராதி திரைப்படத்தில் அவரது இசை அற்புதமாக இருந்தது. குறிப்பாக முத்துமணி பாடல் ஒரு தலைசிறந்த படைப்பாக அமைந்திருந்தது.
திரைப்படத்தின் முதல் பாதி, நெருங்கிய நண்பர்களாக இருந்து எவ்வித பொறுப்புமின்றி திரியும் இருவரின் வாழ்க்கையை காட்டுகிறது. ஆரம்பத்தில் திரையில் பெண்கள் சித்தரிக்கப்பட்ட விதமும் அவர்கள் நடத்தப்பட்ட முறையும் எனக்கு மிகுந்த மன உளைச்சலை தந்தன. ஆனால் இரண்டாம் பாதியில் ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருக்கும் என்று எனக்குள் எண்ணம் ஏற்பட்டது.
அதேபோல, படத்தின் இரண்டாம் பாதி எவ்வளவு அற்புதமானதாக இருந்தது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது திரைப்பட உருவாக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இந்தத் திரைப்படம் என்னை ஆழமாக தொட்டுவிட்டது. சுஷ்மா வழக்கில் தீர்ப்பை எழுதியுள்ள நிலையில், lgbtqia +, சமூகத்தினரின் உரிமைகள் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானவை.
படத்தின் இறுதிக் காட்சி இந்திய திரை உலகம் இதுவரை கண்டிராத ஒன்றை கொடுக்கிறது.
உணர்வுகளை மறைக்காமல் மிகவும் நேர்மையாக வெளிப்படுத்தும் அந்த உச்சகட்ட காட்சி என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
திரைப்படம் முடிந்து ஸ்கிரீன் மூடப்பட்ட போது திரையரங்கத்தை சுற்றிப் பார்த்தேன். அங்கிருந்த பெரும்பாலான இளைஞர்கள் எழுந்து நின்று உற்சாகமாக கைதட்டினர்.
வருங்கால தலைமுறையினர் இன்னும் சிறப்பாக புரிந்து கொள்கிறார்கள். ஒவ்வொருவரையும் அவர்களின் உண்மையான அடையாளத்துடன் இயல்பாக ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டது.
டோரதி ஒரு திரைப்படம் மட்டுமல்ல அது மனித நேயம்… துணிச்சல் மற்றும் கலையின் வெளிப்பாடாக உருவெடுத்துள்ள ஒரு இயக்கம். கார்த்திக் சுப்புராஜ் ஒரு வரலாற்று சிறப்புமிக்க படைப்பை உருவாக்கியுள்ளார்” என்று வாழ்த்தியுள்ளார்.
