மாஞ்சா வேலு, பேராண்மை, பரதேசி, கபாலி போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சாய் தன்ஷிகா. தமிழ் மொழியில் மட்டும் இன்றி மலையாளம், கன்னடா என பிற மொழியிலும் பல படங்களில் சாய் தன்ஷிகா நடித்திருக்கிறார்.
கடைசியாக சாய் தன்ஷிகா நடிப்பில் தமிழில் வெளியான லாபம் படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை.
அதனைத் தொடர்ந்து தற்போது கோல்டன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஐ.ராதிகா இயக்கத்தில் சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் “தி புரூப்”.
இந்த படத்தில் சாய் தன்ஷிகாவுடன் நடிகர்கள் அசோக், ருத்வீர் வரதன், ரித்விகா, இந்திரஜா, மைம் கோபி, மாரிமுத்து, ராஜசிம்மன், அஸ்மிதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. ஒரு முக்கிய சமூகப் பிரச்சனைக்காக நீதிமன்றத்தில் போராடும் சாய் தன்ஷிகா, எதிரிகளால் பல ஆபத்துக்களை சந்திக்கிறார். இறுதியாக எப்படி இந்த பிரச்சனைகளை சமாளித்து உயிர் பிழைக்கிறார் என்பதே இந்த படத்தின் ஒன்லைன். ஆக்ஷன் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சாய் தன்ஷிகா பல ஆபத்தான சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…