Nalla Perai Vaanga Vendum Pillaigale

Movie Review : ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ – திரை விமர்சனம்!

சினிமா

Nalla Perai Vaanga Vendum Pillaigale

தொடர்ந்து பல மலையாளப் படங்களின் படையெடுப்புகளுக்குப் பின்,இந்த வாரம் வெளியாகியுள்ள சொற்ப தமிழ் படங்களில் ஓர் ஆள் பேர் தெரியாத படம் தான் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’.

படத்தின் தயாரிப்பாளரான பாடகர் பிரதீப் குமார் மற்றும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பிக் பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவி இவர்களைத் தவிர நமக்கு திரையில் பரிட்சயம் இல்லாத முகங்கள் தான். ஆனால், அந்த முகங்கள் அனைத்தும் நாம் நிஜ வாழ்க்கையில் தினந்தோறும் பார்க்கும் முகங்கள்.

ஆன்லைனில் பெண் ஐடிகளைத் தேடித்தேடி போய் ‘ஹாய்’ சொல்லும் பல அக்கறை உள்ளங்களை நாம் ஆன்லைனிலும், நேரிலும் பார்ப்பதுண்டு. அப்படியான ’பார்ப்பதற்கே ஓர் அப்பாவி போல் தெரிபவர் தான் நமது ஹீரோ’!

ஒரு நாள் வழக்கம் போல் தனது சாட்டிங் திறமையால் ஒரு பெண்ணை மயக்க முயற்சித்து மதுரையிலிருந்து மயிலாடுதுறை வரை செல்கிறார்.

போன இடத்தில் அவர் சந்திக்கும் பிரச்சனை, அதை அவர் எப்படி கையாண்டார் என்பதே ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படத்தின் கதை. கதையாக கேட்கும் போது எந்தவித புதுமையான உணர்வையும் அளிக்காமல் இருக்கலாம்.

Nalla Perai Vaanga Vendum Pillaigale

ஆனால், இந்தப் படத்தின் இயக்குநர் இதைத் திரையில் காட்டியிருக்கும் திரைமொழி, இதுவரை காட்டப்படாத சில கதாபாத்திர வடிவமைப்புகள், கதாபாத்திரங்களின் எளிமையான உரையாடல்கள், முக்கியமாக சொல்ல வேண்டிய கருத்தை பிரச்சாரமாக்காமல் போகிற போக்கில் பார்வையாளர்களுக்கு கடத்தப்பட்ட விதம் நிச்சயம் பாராட்டுக்குரியதே.

முக்கியமாக படத்தின் ஆரம்ப காட்சியே ஆள் இல்லாத ஒரு தியேட்டரில் தான் ஆரம்பமாகிறது. நமது சுவாரஸ்யத்தையும், ரசனையையும் இயக்குநர் பெரிதாக மதிப்பது அங்கேயே தெரிய வருகிறது.

அடுத்தடுத்து படத்தில் இடம்பெற்றுள்ள நீளமான பல டிராக்கிங் ஷாட்களில் ஒளிப்பதிவு, புதுமையாக கையாளப்பட்ட சில காட்சிகள், நடிகர்களின் நடிப்பு, படத்தொகுப்பு என அனைத்தும் மிகச்சீராக அமைந்துள்ளது. திரைப்பட தொழில்நுட்பத்தின் மீதான தன்னுடைய ஆளுமையை முதல் படத்திலேயே காட்டியிருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் ராமர்.

நடிகர்களைப் பொறுத்தவரை கதையின் நாயகனான செந்தூர் பாண்டியன், பிரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ் செல்வி என அனைவரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக ஒரு அடிப்படைவாதமிக்க சுயநலவாதி கதாபாத்திரத்தை எந்த வித மிகையுமில்லாமல் உண்மைக்கு மிக நெருக்கமாக நடித்துள்ளார் செந்தூர் பாண்டியன்.

Singappenne Movie : சிங்கப்பெண்ணே – திரை விமர்சனம்!

அவரின் பல செயல்கள் பார்க்கும் பலரை எரிச்சலடைய வைக்கும். அவரது நண்பராக நடித்துள்ள சுரேஷ் மதியழகனின் ஹியூமர் டைமிங், மதுரை பாஷை ஆகியவை ரசிக்க வைக்கிறது.

சாலையில் நிகழும் ’ரோட் மூவி’ என்கிற ஜானருக்குள் அடங்கும் இந்தப் படத்தில் இயக்குநர் பிரசாந்த் ராமர், பெண்களைப் பற்றின புரிதல், ஆன்லைன் ஸ்டாக்கிங்(online stalking), தற்கால காதல், என போகிற போக்கில் பல்வேறு விஷயங்களைப் பேசுகிறார்.

இந்தப் படத்தின் ஜானர், மற்றும் இந்தப் படம் மக்களிடையே வைக்கும் ஒரு விவாதம் ஆகியவை இயக்குநர் அல்ஃபொன்ஸோ கோரன் இயக்கத்தில் வெளியான ’ஒய் து மாம தம்பியன்( y tu mama tambien)’ என்னும் திரைப்படத்தை ஞாபகப்படுத்தியது.

Nalla Perai Vaanga Vendum Pillaigale

பொதுவாக மதுரையை மையமாக வைத்த கதைக்களம் என்றாலே கத்தி, அரிவாள், அழுக்கு கைலி ஆகியவற்றையே தமிழ் சினிமா பல ஆண்டுகளாக காட்டி வருகிறது.

ஆனால், மதுரைக்குள் காட்டப்படாத பல விஷயங்கள் உள்ளன. மதுரைக்குள் இருக்கும் நகர வாழ்வியல், அங்கு வளர்ந்த பட்டதாரிகளின் வாழ்க்கை, அவர்களின் புரிதல் போன்ற விஷயங்களை இந்தப் படத்தின் இயக்குநர் கையாண்டுள்ள விதம் மிகப் புதுமையாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளது.

J Baby : ஜெ பேபி – திரை விமர்சனம்!

பிரதீப் குமாரின் இசை படத்தின் ஓட்டத்திற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதை விடவும் பாராட்ட வேண்டிய ஒரு விஷயம், இது போன்ற ஒரு படத்தை அவர் தயாரித்தது. ஒரு சர்வதேச சிறந்த படத்தைப் பார்த்த ஒரு திருப்தி இந்தப் படம் நிறைவாகும் போது நமக்குள் தோன்றும்.

மொத்தத்தில் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ இந்த ஆண்டு வெளியாகியுள்ள மற்றொரு முக்கியமான படம். இதற்கு ஆதரவு கொடுக்க தவறிவிட்டு பின் ஆன்லைனில் ’மல்லிவுட் படையெடுக்குது, கோலிவுட் வீழ்ந்து போச்சு’ என ஒப்பாரி வைப்பதில் எந்தப் பயனும் இல்லை.

-ஷா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியரை மிரட்டும் கல்வித்துறை அதிகாரிகள்?

சின்னப்பிள்ளைக்கு வீடு : அண்ணாமலை, உதயநிதி ரியாக்சன்!

“ஜாபர் சாதிக் தொடர்புடைய யாரையும் விடக்கூடாது” : அண்ணாமலை

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *