பவதாரிணியின் நவராத்திரி பாடல்: கலங்கும் வசந்தபாலன்

சினிமா

இசையமைப்பாளரும், பாடகியுமான பவதாரிணி ஜனவரி 25 காலமான நிலையில், அவரது இறுதி நிகழ்வுகள் இன்று (ஜனவரி 27) தேனி மாவட்டம் பண்ணையபுரத்தில் நடக்கிறது.

இந்த நிலையில் ஆரம்ப காலத்தில் இளையராஜா வீட்டுக்கு செல்லும்போது பவதாரிணியை பார்த்த நினைவுகளை கண்ணீருடன் நினைவு கூர்ந்துள்ளார் இயக்குனர் வசந்தபாலன்.
அவர் தனது பதிவில், “இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன் என் முதல் படம் அமைந்தது. அந்த படத்திற்காக அடிக்கடி ராஜா சார் இல்லத்துக்குச் செல்வேன்.

ஹாலைத் தாண்டி முதல் அறையில் கார்த்திக் ராஜாவின் கம்போசிங் நடக்கும்.

இளையராஜா அவர்களின் தி.நகர் இல்லத்தைப் பற்றி ஒரு கதையே எழுதலாம். அத்தனை சம்பவங்கள் அவ்வளவு மனிதர்கள் வருவார்கள் செல்வார்கள். பரபரப்பாய் இருக்கும்.

ராஜா சாரை சந்திக்க வருகிற நடிகர்கள்,தயாரிப்பாளர்கள்,இயக்குநர்கள் ஒரு பக்கம்,

கார்த்திக் மற்றும் யுவனை சந்திக்க வருகிற இயக்குநர்கள், பாடலாசிரியர்கள் ஒரு பக்கம்.

யுவன், பவதாரிணியின் நண்பர்கள் வட்டம் பெரியது. இருவரும் கிரிக்கெட் விளையாடுவார்கள். சிலசமயம் ஸ்ருதி ஹாசன்,அக்‌ஷரா ஹாசனையும் அங்கு பார்த்திருக்கிறேன்.

சிலநாட்களில் இன்னும் பெரும்கூட்டம் கூடும். சிரிப்பும் பாட்டும் விளையாட்டும் கலந்து அந்த வீட்டைப் பார்க்கையில் ஆசையாக இருக்கும். விளையாட்டில் நம்மையும் சேர்க்கமாட்டார்களா என்ற ஏக்கம் ஏற்படும். மனதிற்குள் வருடம் 16 படத்தில் வருகிற பழமுதிர்சோலை பாடல் கேட்கும்.

அவர்கள் வீட்டில் நடக்கும் நவராத்திரியில் பவதாரிணியை அவர்கள் அம்மா இழுத்து வந்து பாட வைப்பார்கள். சிறு தேவதையின் குரல். பாடி விட்டு மீண்டும் பவதாரிணி விளையாட ஓடி விடுவார். பலமுறை நேராக பாடி கேட்டிருக்கிறேன்.

என் முதல் படத்தில்
’முட்டைக்குள் இருக்கும் போது
முட்டைக்குள் இருக்கும் போது

என்ன தான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு?’ என்ற குறும் பாடலை பவதாரிணி பாடியிருந்தார்.

பவதாரிணி பாடும் பாடலில் ஒரு குழந்தைமையும் தெய்வீகமும் கலந்து இருக்கும்.
மயில் போல பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஜனனி ஜனனி பாடலைப் போல ஆன்மாவை உருக்கும் பாடல்.

பவதாரிணி இழப்பு செய்தி, நேற்றைய நாளை வண்ணமில்லாத ஒலி ஒளியில்லாத இசையில்லா நாளாக மாற்றி விட்டது.

பவதாரிணிக்கு 47 வயது என்பதை மூளை ஏற்க மறுக்கிறது. மயில் போல பொண்ணு தான்… இரக்கமற்ற காலம் எல்லாவற்றையும் இப்படித் தான் குலைத்து போட்டு விளையாடுமோ?” என்று பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.

“டெல்லியில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி”: அரவிந்த் கெஜ்ரிவால்

எஸ்.பி.க்கள், துணை ஆணையர்கள் இடமாற்றம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *