போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் தொடர்புடைய யாரையும் என்.சி.பி.அதிகாரிகள் விட்டுவிடக் கூடாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் போதைப்பொருளை கடத்திய வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணாமலை வலியுறுத்தல்
இந்நிலையில் ஜாபர் சாதிக் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கடந்த 3 ஆண்டுகளில், பல திமுக தலைவர்களுடன் ஜாபர் சாதிக் நெருக்கமாக இருந்த நிலையில், பணமோசடி செய்ய , ஜாபர் சாதிக் எவ்வாறு அவர்களுக்கு உதவியாகச் செயல்பட்டார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
விசாரணை அதிகாரிகள், முழுமையான விசாரணை மேற்கொண்டு, ஜாபர் சாதிக் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் திமுக ஆட்சியில் மிக எளிதாகப் பரவியிருக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தடைசெய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஜாபர் சாதிக் வழக்கு விவரம்
சில மாதங்களுக்கு முன்பு நியூசிலாந்து சுங்க அதிகாரிகள் மற்றும் ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலையமைகத்துக்கு ஒரு தகவல் வந்தது.
அதில், ‘காய்ந்த தேங்காய்ப் பொடி, சத்து மாவு உள்ளிட்ட உணவு பொருள் பொட்டலங்களில் அதிகளவிலான சூடோபெட்ரைன் என்ற போதைப்பொருள் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு வருகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஇஏ எனப்படும் அமெரிக்க போதைப்பொருள் அமலாக்க நிர்வாகத்திடமிருந்தும் டெல்லி என்.சி.பி.அதிகாரிகளுக்கு சில தகவல்கள் கிடைத்தன.
மெத்தம்பேட்டமைன் என்ற போதைப்பொருளை தயாரிக்க பயன்படுத்துவதுதான் இந்த சூடோபெட்ரைன் என்று என்.சி.பி. அதிகாரிகள் கூறுகின்றனர். என்.சி.பியின் கூற்றுப்படி, இந்த போதைப்பொருளுக்கு உலகளவில் அதிக டிமாண்ட் இருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் ஒரு கிலோ சுமார் ரூ 1.5 கோடியில் இருந்து ரூ 2 கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து வந்த தகவலைத் தொடர்ந்து 4 மாத விசாரணை மற்றும் கண்காணிப்புக்கு பிறகு என்சிபி மற்றும் டெல்லி காவல்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு, ஆஸ்திரேலியாவுக்கு மேலும் போதைப்பொருள் கடத்தப்படவிருந்ததை கண்டுபிடித்தது.
அதன்படி இருவாரங்களுக்கு முன்பு மேற்கு டெல்லி, பசாய் தாராபூரில் உள்ள ஒரு குடோனுக்கு அதிகாரிகள் சென்றனர். அங்கு பலதானிய உணவு கலவையில், சூடோபெட்ரைன் போதைபொருளை வைத்து பொட்டலம் போட்டுக்கொண்டிருந்த மூன்று பேரை என்.சி.பி.குழு கையும் களவுமாக பிடித்தது.
அப்போது 50 கிலோ எடை கொண்ட சூடோபெட்ரைனை பறிமுதல் செய்த அதிகாரிகள் சென்னையை சேர்ந்த முகேஷ் (34), முஜிபுர் ரஹ்மான் (26), மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக் குமார்(36) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
அவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் 45 முறை, 2000 கோடி ரூபாய் மதிப்பிலான 3500 கிலோ போதைப்பொருள்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் தான் சென்னை மேற்கு மண்டல திமுக அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் போதை கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இந்த மூன்று பேர் பிடிபட்டதை தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவானார். அவரை திமுக கட்சியில் இருந்து நீக்கியது.
விசாரணைக்கு ஆஜராகும்படி என்.சி.பி அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் ஜாபர் சாதிக் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை செய்த மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வீட்டுக்கு சீல் வைத்தனர்.
தொடர்ந்து ஜாபர் சாதிக்கை தேடி வந்த அதிகாரிகள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டலில் வைத்து பிடித்தனர். ஜெய்ப்பூரில் பிடித்தாலும் டெல்லிக்கு அழைத்து வந்து கைது செய்துள்ளனர்.
ஜாபர் சாதிக் கைது குறித்து என்.சி.பி துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங் கூறுகையில், “இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கின் தலைவர் ஜாபர் சாதிக். மாஸ்டர்மைண்டாக செயல்பட்டுள்ளார்.
மொத்தம் 45முறை 3500 கிலோ போதைப்பொருளை கடத்தியுள்ளார். இதன்மூலம் சம்பாதித்த பணத்தை சினிமா, கட்டுமான துறைகளில் முதலீடு செய்துள்ளார். சென்னையில் 2019-ல் ஹோட்டல் ஒன்றைக் கட்டியிருக்கிறார்.
சினிமா துறையில் இவருக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தமிழ் திரைப்படமான மங்கை முழுக்க முழுக்க போதைபொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் இருந்து தயாரித்ததாக தெரிவித்துள்ளார்.
அவர் தலைமறைவானது முதல் திருவனந்தபுரம், அகமதாபாத், புனே, மும்பை, டெல்லி என பல்வேறு இடங்களில் பதுங்கி இருந்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலுக்கான நிதி ஆதாரம் மற்றும் அதன்மூலம் கிடைத்தவை குறித்து விசாரணை நடந்து வருகிறது. சூடோபெட்ரைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதானால் 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
ஜாபர் சாதிக் தயாரித்த படங்கள்
ஜாபர் சாதிக் தனது ஜேஎஸ்எம் குழும நிறுவனத்தின் மூலம் வெற்றிமாறன் எழுதி அமீர் இயக்கும் இறைவன் மிகப்பெரியவன் மற்றும் இந்திரா, மங்கை, மாயவலை ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார்.
இதில், மங்கை படத்தின் முதல் பாடலை இயக்குநர் கிருத்திகா உதயநிதி கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியாவின் ‘டாப் 10’ பாப்புலர் பைக்குகள் இதுதான்!
Anna Library: சூப்பர் திட்டத்தினை அறிமுகம் செய்த… அண்ணா நூற்றாண்டு நூலகம்!