’இவர்கள் இப்படித்தான்’ என்று திரைத்துறையைச் சேர்ந்த ஒவ்வொருவர் மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதுண்டு. சாதாரண மக்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாமல் கலைத்துறையைச் சார்ந்தவர்களும் கூட அப்படிப்பட்ட எண்ணங்களை மலை போலக் குவித்து வைத்திருப்பார்கள்.
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பு, அவரிடம் இணை இயக்குநராக இருந்த சுரேஷ் மாரியின் படைப்பு, அந்தப் படத்தில் புதியதொரு தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணி, கூடவே ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் போன்றவர்களோடு முக்கியப் பாத்திரத்தில் ‘லொள்ளு சபா’ மாறனின் இருப்பு ஆகியன ஒன்றுசேர்ந்து ‘ஜெ பேபி’ குறித்து நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கலவையான எதிர்பார்ப்புகளை உண்டாக்கின.
தற்போது ‘ஜெ பேபி’ தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. இப்படம் எந்தெந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளோடு பொருந்திப் போகிறது? என்பதை இங்கே பார்க்கலாம்.
யார் இந்த பேபி?
சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் அயனாவரத்தில் வசித்துவரும் செந்தில் (மாறன்), சங்கர் (அட்டகத்தி தினேஷ்) இருவருக்கும் போன் செய்கிறார். உடனடியாகக் காவல்நிலையம் வருமாறு கூறுகிறார்.
பெயிண்டராக இருந்து வரும் செந்திலும், ஷேர் ஆட்டோ ஓட்டும் சங்கரும் பதறியடித்துக்கொண்டு இன்ஸ்பெக்டர் முன்னே நிற்கின்றனர். இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள்.
‘உங்க அம்மா எங்க இருக்காங்க’ என்று இன்ஸ்பெக்டர் கேட்க, இருவரும் பதில் சொல்ல முடியாமல் திணறுகின்றனர். சகோதரன், சகோதரிகள் மற்றும் இதர உறவினர்களுக்கு போன் செய்து விசாரிக்கின்றனர். அனைத்து இடங்களிலும், ‘அவர் இங்கு வரவில்லை’ என்ற பதில் மட்டுமே கிடைக்கிறது.
இறுதியில், ‘தெரியாது’ என்று அவர்கள் சொல்கின்றனர். பதிலுக்கு இன்ஸ்பெக்டரோ, ‘அவங்க இப்போ கொல்கத்தாவுல இருக்காங்க’ என்கிறார். உடனடியாக ரயில் ஏறிச் சென்று அவரை அழைத்து வருமாறு கூறியதோடு, மூர்த்தி என்பவரது மொபைல் எண்ணையும் அவர்களிடம் கொடுக்கிறார்.
சங்கரின் முகத்திலேயே முழிக்கக் கூடாது என்பது போல விரோதம் பாராட்டும் செந்திலுக்கு, அவருடன் ஒன்றாகப் பயணம் செய்வதை நினைத்துப் பார்க்கவே இயலவில்லை. ஆனால், வேறு வழியில்லாமல் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து கொல்கத்தாவுக்குப் பயணிக்கின்றனர்.
அங்கு மூர்த்தியின் உதவியோடு தாய் பேபியை (ஊர்வசி) அழைத்து வரச் செல்கின்றனர். அதற்குள், காவல் நிலையத்தில் இருந்த அவரை போலீசார் காப்பகத்திற்கு அனுப்பி விடுகின்றனர். அதனால், ஒருநாள் அங்கு தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அதற்கடுத்த நாள் இன்ஸ்பெக்டரிடம் கடிதம் வாங்கிக்கொண்டு காப்பகம் சென்றால், ‘ஞாயிற்றுக்கிழமை’ என்று அனுமதி தர மறுக்கின்றனர். திங்கள் கிழமையன்று செந்திலும் சங்கரும் மூர்த்தியுடன் மீண்டும் அங்கு செல்கின்றனர். அன்றைய தினம், ‘பேபியைக் காணவில்லை’ என்கின்றனர் காப்பகப் பணியாளர்கள்.
செந்திலும் சங்கரும் அதிர்ச்சியில் உறைகின்றனர்; அங்கிருப்பவர்களிடம் தகராறு செய்கின்றனர். எங்கு தேடியும் பேபி கிடைக்காமல் போக, ‘அம்மா கிடைத்தவுடன் நானே தகவல் சொல்கிறேன்’ என்று சொல்லி இருவரையும் சென்னைக்கு அனுப்பி வைக்கிறார் மூர்த்தி.
ரயில் பயணத்தின்போது, சங்கரின் மனைவிக்கு குழந்தை பிறந்த தகவல் கிடைக்கிறது. அதேநேரத்தில், காப்பகத்தின் ஒருபகுதியில் பேபி மறைந்திருந்த விஷயமும் தெரிய வருகிறது.
‘சென்னை சென்று குழந்தையின் முகம் பார்த்துவிட்டு மீண்டும் கொல்கத்தா வரலாம்’ என்று சங்கர் சொல்கிறார்; ஆனால் செந்தில் அதற்குச் சம்மதிப்பதில்லை. தனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றுபோய் தான் அவமானப்படக் காரணமாக இருந்த பெண்ணின் தங்கையைத் தம்பி காதல் திருமணம் செய்தார் என்பதே அவரது வெறுப்புக்குப் பின்னிருக்கும் காரணம்.
Thangamani : தங்கமணி – திரை விமர்சனம்!
அந்த ஒரு சம்பவம், இருவருக்குள் இருந்த உறவை அறுத்தெறிகிறது. ஆனால், அந்தப் பிரிவே அவர்களது தாய் பேபியின் மனநிலையைச் சிதைத்தது பின்னர் தெரிய வருகிறது.
கொல்கத்தா காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட பேபி, அங்கிருப்பவர்கள் கலங்கிப்போகும் அளவுக்கு அடாவடியில் ஈடுபட்டதை செந்திலும் சங்கரும் அறிகின்றனர். அப்போதுதான், பெற்ற பிள்ளைகளை விட்டுத் தாய் பிரிந்து செல்லும் அளவுக்கு என்ன நிகழ்ந்தது என்பது தெரிய வருகிறது.
அந்தச் சம்பவங்கள் ஒவ்வொன்றும் நாம் வாய்விட்டுச் சிரிக்கும்படியாகவும், கண்ணீர் விட்டுக் கதறும்படியாகவும் இருக்கின்றன. அவை ‘ஜெ பேபி’ யார் என்பதை நமக்குத் துல்லியமாக உணர்த்துகின்றன.
கதறி அழ வைக்கும்
ஒரு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள உணர்ச்சிமிகு காட்சியைப் பார்த்துக் கண்ணீர் வடிக்கும் இயல்பு உங்களுக்கு உண்டென்றால், ‘ஜெ பேபி’யைப் பார்த்தபிறகு நீங்கள் நிச்சயம் அழுது சிவந்த கண்களுடன் தான் தியேட்டரில் இருந்து வெளியே வர நேரிடும். அந்த அளவுக்கு, கண்ணீரில் நம்மை நனைக்கும் காட்சிகள் இதில் நிறையவே உண்டு.
தான் ஒரு நடிப்பு ராட்சசி என்பதை ‘மைக்கேல் மதன காமராஜன்’னுக்கு முன்னரே உணர்த்திவிட்டார் ஊர்வசி. அதனால், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நம்மை அழவைப்பது பெரிதில்லை. ‘விசாரணை’ போன்ற படங்களின் வழியே தான் ஒரு திறன்மிகு நடிகர் என்பதை தினேஷும் நிரூபித்துவிட்டார்.
ஆனால், இப்படத்தில் தினேஷின் சகோதரர்களாக, சகோதரிகளாக, உறவினர்களாக நடித்தவர்களும் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கின்றனர் என்பதுதான் ’ஜெ பேபி’ தரும் ஆச்சர்யம்.
முக்கியமாக, சந்தானம் படங்களில் ‘ஒன்லைனர்’களாக அள்ளியிறைத்து நம்மைச் சிரிக்க வைத்த மாறனுக்கு இதில் சீரியசான பாத்திரம்.
முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு ஆங்காங்கே அவல நகைச்சுவைக்கான ‘ஒன்லைனர்’களை அவர் அள்ளிவிட்டுச் சிரிப்பலைகளை எழுப்புகிறார். நிச்சயமாக, அவரது திரை வாழ்வில் இது ஒரு அற்புதமான வாய்ப்பு. அதனைப் பயன்படுத்தி மனிதர் சிக்சர்களாக வெளுத்தெடுத்திருக்கிறார்.
கொல்கத்தா நகரத்திலுள்ள இடங்களைப் பரந்து விரிந்ததாகத் திரையில் காட்டுவதிலும் சரி; சென்னை நகரத்து இடுக்குகளில் இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து புறப்படுவதிலும் சரி; எந்தக் குறையும் இல்லாமல் ‘சினிமாட்டிக்’ அனுபவத்தைத் தருகிறது ஜெயந்த் சேதுமாதவனின் ஒளிப்பதிவு.
ராமு தங்கராஜின் கலை வடிவமைப்பில், ஒவ்வொரு பிரேமிலும் சம்பந்தப்பட்ட பாத்திரங்களின் வாழ்க்கை இயல்புகள் நமக்குக் காணக் கிடைக்கின்றன.
இடைவேளைக்கு முன்பான திரைக்கதை பேபி எனும் பாத்திரத்தின் ஒரு முகத்தைக் காட்டுகிறது என்றால், பின்பாதி அதன் மறுபாதியை வெளிப்படுத்துகிறது. அதற்கு ஏற்றவாறு படத்தொகுப்பில் நிதானத்தையும், வேகத்தையும் கையாண்டிருக்கிறார் சண்முகம் வேலுசாமி.
டோனி பிரிட்டோவின் இசையில் பாடல்கள் மென்மையாகக் காதுகளை வருடுகின்றன; நிச்சயமாக, இரண்டாம் முறை கேட்கையில் அவை பிடித்துப்போகும். அதேநேரத்தில், காட்சிகளின் தன்மையைப் பல மடங்கு உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது அவர் தந்துள்ள பின்னணி இசை.
ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, ஒலிப்பதிவு, வண்ணமூட்டல் என்று பல அம்சங்கள் இயக்குநர் வடித்த கதையோடு பிணைந்து திரையில் வெளிப்படுகின்றன. மொத்தப் படத்தையும் பார்த்து முடித்தபின்பு, கதையின் நாயகர்களாக நாமே மாறி தாயைத் தேடிக் கொல்கத்தா சென்ற உணர்வு எழுகிறது.
அந்த இடத்தில், ‘இது ஒரு உண்மைக்கதை’ எனும் தகவலைப் பகிர்கிறார் இயக்குநர் சுரேஷ் மாரி. அதற்குக் காரணமாக இருந்த ஜெயமூர்த்தியே, இப்படத்திலும் அந்த பாத்திரத்தை ஏற்றிருக்கிறார் என்பது இன்னுமொரு ஆச்சர்யம்.
முன்பாதியிலும் பின்பாதியிலும் சில காட்சிகள் மெதுவாக நகர்வதாகச் சிலருக்கு தோன்றக்கூடும். அது மட்டுமே இப்படத்திலுள்ள பெருங்குறை. ஆனால், அக்காட்சிகளே நம்மை உணர்வுப்பூர்வமாகத் திரையுடன் இணைக்கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது.
வீ லவ் யூ
இதற்கு மேல் நாம் பேசப்போவது ‘ஸ்பாய்லர்’ ரகத்தில் சேரும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சமூக மதிப்பீடுகள் சார்ந்து ஒரே குடும்பத்தில் பிறந்த உறவுகளுக்குள் நிகழும் பிரிவுகளே ‘ஜெ பேபி’யின் ஆதார மையமாக உள்ளன.
செந்தில் ஏன் சங்கரை வெறுக்கிறார் என்பதற்கான காரணத்தைத் திரைக்கதையின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறார் இயக்குநர். அதனைச் சரி செய்ய முடியாமல் தவிப்பதே சங்கரின் நிலையாகத் தொடர்ந்து வரும்.
ஒருகட்டத்தில், ‘என்னப்பா நீ என்னை உன் தம்பியா ஏத்துக்கவே மாட்டியா’ என்று தினேஷ் கேட்குமிடமும், அதற்கு மாறன் பதில் சொல்லுமிடமும் இந்த படம் தரும் அற்புதமான தருணம்.
இரவில் அந்தக் காட்சி நிகழ்வதாகக் காட்டியிருப்பார் இயக்குநர். அப்போது, தினேஷ் நிற்குமிடத்திற்கு வெகு அருகாமையில் ஒரு ரயில் வலப்புறத்தில் இருந்து இடதுபுறமாகச் செல்லும்.
தினேஷ் சொன்ன பதிலை, மாறன் அசைபோடும் வேளையில் பொழுது விடிந்திருக்கும். அந்த நேரத்தில், முந்தைய இரவு ரயில் சென்றதற்கு எதிர்திசையில் இன்னொரு தண்டவாளத்தில் வேறொரு ரயில் செல்வதாகக் காட்டியிருப்பார் இயக்குநர். அந்த ஒரு ஷாட்டுக்காகவே, இயக்குநர் சுரேஷ் மாரிக்கு ஒரு பூந்தோட்டத்தையே பரிசாகத் தரலாம்.
கிட்டத்தட்ட இருபதாண்டுகளாக உதவி இயக்குநராகவும் இணை இயக்குநராகவும் இருந்து, அவர் இப்படத்தைத் தந்திருக்கிறார். வெகு தாமதமாக அவர் இயக்குநராகி இருந்தாலும், உறவின் அவசியத்தைச் சொல்கிற ஒரு பொக்கிஷத்தைத் தந்து அறிமுகமாகியிருக்கிறார்.
‘பெற்றோரை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிடாதீர்கள்’ எனும் குரல்களுக்கு நடுவே, அன்பை அள்ளிக்கொட்டத் தயாராக இருந்தும் சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் பெற்ற தாயைப் பிரிந்து வாடும் பிள்ளைகளின் இயலாமை நிறைந்த வாழ்க்கையைப் பேசுகிறது ‘ஜெ பேபி’.
இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்களின் இயல்போடு, அவர்களது வாழ்க்கை முறைகளோடு, பொருளாதார நிலைமையோடு பொருந்திப் போகாவிட்டாலும், உறவுகளை மதிப்பவர் என்ற தகுதியே ஒருவரை ‘ஜெ பேபி’யோடு அழுத்தமாய் பிணைக்கும்; கண்ணீர் விட்டுக் கதறி அழ வைக்கும்.
அதற்காக, இயக்குநர் சுரேஷ் மாரி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை வாரியிறைக்கலாம். ’வீ லவ் யூ..’ என்று மனதாரச் சொல்லலாம்!
மொத்தத்தில் இந்த ‘ஜெ பேபி’ தாமதமாய் கிடைத்த பொக்கிஷம்!
-உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Thug Life: ”வெறித்தன காம்போ” தக் லைஃப் படத்தில் இணையும் முன்னணி நடிகர்?
மகளிர் தினத்தில் சச்சின் பாராட்டிய பெண்மணி : யார் இந்த ஜசிந்தா கல்யாண்?
நேற்று அட்மிஷன், இன்று ஆபரேஷன்… அப்பல்லோவில் அஜித்! முழு ஹெல்த் அப்டேட்!
மீண்டும் வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தி