கௌதம் இயக்கிய படங்களை ’முதல் நாள் முதல் காட்சி’ பார்ப்பதென்பது ஒருவகையான அந்தஸ்து என்று ரசிகர்கள் கருதிய காலமுண்டு. ’நீதானே என் பொன்வசந்தம்’ படத்திற்குப் பிறகு அவர் இயக்கிய படங்கள் வெளியாவதில் நீடித்துவரும் கால தாமதம் அந்த எண்ணத்தையே தலைகீழாக மாற்றியிருக்கிறது.
நிறைவை எட்டியபிறகும் அவை வெளியாவதில் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்கள் பிணைந்துள்ளன. இந்த நிலையிலேயே, கௌதமின் இயக்கத்தில் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தனிப்பட்ட முறையில் கௌதமைத் தொடரும் பிரச்சனைகள், அவரது படைப்பாக்கத்தின் மீது தாக்கத்தை உண்டுபண்ணியிருக்கிறதா? அதற்கு இப்படம் தரும் காட்சியனுபவம் என்ன பதிலைத் தருகிறது?
ஒரு காதலுக்கு பின்னே
ஜோஷ்வா (வருண்) ஒரு கூலிப்படைக் கொலையாளி. அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த சமீர் எனும் நபரைக் கொல்வதற்காக, அவர் சென்னையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அப்போது, முதன்முறையாக குந்தவி (ராஹெய்) எனும் பெண்ணைச் சந்திக்கிறார். பார்த்த நொடியில் அவர் மீது நேசம் கொள்கிறார். அதேநேரத்தில், வந்த வேலையை முடிக்கவும் அவர் தவறவில்லை.
அந்த நிகழ்ச்சியின் முடிவில், குந்தவி உடன் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு ஜோஷ்வாவுக்குக் கிடைக்கிறது. அதுவே, அடுத்தடுத்து இருவரும் சந்திக்கக் காரணமாகிறது. அமெரிக்காவில் உள்ள நீதித் துறையில் பணியாற்றி வருபவர் குந்தவி. இன்னும் சில ஆண்டுகளில் அங்கு பெரிய பதவியை வகிப்பேன் என்று அவர் தனது எதிர்காலத் திட்டத்தைச் சொல்கிறார். பதிலுக்கு, தான் ஒரு கூலிப்படை கொலையாளி எனும் உண்மையை ஒப்புக்கொள்கிறார் ஜோஷ்வா.
அந்தக் கணமே, ஜோஷ்வாவை விட்டுப் பிரிந்து அமெரிக்கா செல்கிறார் குந்தவி. அவர் மீது கொண்ட காதலால் தான் செய்த வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, விஐபிகளுக்கு பாதுகாவலராக மாறுகிறார் ஜோஷ்வா. ஜோஷ்வாவுக்கு அசைன்மெண்ட்களை நிர்ணயிக்கும் மாதவி (திவ்யதர்ஷினி), என்றாவது ஒருநாள் அவர் மீண்டும் தன்னோடு வேலை செய்ய வருவார் என நம்புகிறார்.
நான்காண்டுகள் கழித்து, குந்தவியின் உயிரைப் பறிப்பவர்களுக்குப் பெரும் பணம் தருவதாகத் தனக்கு ஒரு அழைப்பு வந்ததாக ஜோஷ்வாவிடம் சொல்கிறார் மாதவி. ’இந்தக் கணத்தில் நீ மட்டுமே குந்தவியைக் காப்பாற்ற முடியும்’ என்கிறார். அடுத்த நொடியே, தான் பார்த்த வேலைகளைக் கடாசிவிட்டு குந்தவியின் ’பாடிகார்டு’ ஆக மாறுகிறார் ஜோஷ்வா. அதற்குக் குந்தவியும் சம்மதிக்கிறார்.
அமெரிக்காவில் ஒரு போதைப்பொருள் வழக்கு விசாரணையில் குந்தவி ஆஜராகாமல் தடுக்கும் நோக்கிலேயே, அவரது உயிருக்கு விலை வைக்கிறது சம்பந்தப்பட்ட கும்பல். அவர்களிடம் இருந்து அவரைக் காக்கத் தன்னுயிரையும் தரத் தயாராகிறார் ஜோஷ்வா. குந்தவியைச் சென்னைக்கு அழைத்து வந்து ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கிறார். ஆனால், அதனைக் கண்டுபிடித்து அடுத்தடுத்து பலர் அவர்களைக் கொல்ல வருகின்றனர்.
கிட்டத்தட்ட ஜோஷ்வாவின் உயிரைப் பறிக்கும் வகையில் அமைகின்றன அந்த சம்பவங்கள். அவற்றில் இருந்து தப்பித்து, குந்தவியின் உயிரை ஜோஷ்வா காப்பாற்றினாரா? இல்லையா? என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
வெறுமனே பாதுகாவலராக மட்டுமல்லாமல், குந்தவியின் காதலராகவும் ஜோஷ்வா இருக்கிறார் என்பதே இது வழக்கமான ஆக்ஷன் படமில்லை என்பதைச் சொல்லிவிடுகிறது. கூடவே, கௌதம் படங்களில் நாயகனும், நாயகியும் காதலில் உருகுவதற்கான சந்தர்ப்பங்களையும் உருவாக்கித் தருகிறது. அந்த வகையில், அதிரடிச் சண்டைக்காட்சிகளுக்கு நடுவே பூக்கும் காதலைச் சொல்கிறது ‘ஜோஷ்வா இமை போல் காக்க’.
ஜொலிக்கும் யான்னிக் பென்
வருண் இந்த படத்தில் ஜோஷ்வா ஆக நடித்துள்ளார். ‘கோமாளி’, ‘சீறு’ படங்களில் அவரைப் பார்த்தவர்களுக்கு இப்படம் நிச்சயம் ஆச்சர்யமாக அமையும். தான் ஏற்ற பாத்திரத்திற்கு நேர்மையாக உழைத்திருக்கும் வருண், சீரியசான காட்சிகளில் அந்த பாத்திரமாக நம்மை உணர வைக்கிறார்.
ராஹெய் இப்படத்தின் நாயகி. குந்தவி பாத்திரத்தில் அவரைப் பார்ப்பவர்களுக்கு, ‘நிச்சயம் அவர் அமெரிக்க ரிட்டர்ன் தான்’ என்று தோன்றும். அந்த அளவுக்குத் திரையில் அப்பாத்திரமாக மட்டும் தெரிகிறார்.
இதில் வில்லன் என்று தனியாக ஒருவரை மட்டும் கைகாட்ட முடியாது. அதுவே, இந்த படத்தின் மிகப்பெரிய பலவீனம். அதே நேரத்தில் மன்சூர் அலிகான், கிருஷ்ணா மற்றும் அவர்களது அடியாட்களாக வருபவர்கள் அந்த பணியைச் செவ்வனே செய்கின்றனர். ஆனால், அவர்களுக்கு இன்னும் சில காட்சிகளைத் தந்திருக்கலாம் என்று சொல்லும் அளவுக்குக் குறைவான ‘ஸ்பேஸ்’ திரையில் தரப்பட்டுள்ளது.
இதில் கொலைகளுக்கான ‘அசைன்மெண்ட்’ தருபவராக நடித்துள்ளார் திவ்யதர்ஷினி. திரையில் ‘ஜஸ்ட் லைக் தட்’ அவர் வந்து போயிருப்பது கொஞ்சம் ஆச்சர்யம் தருகிறது. இவர்கள் தவிர்த்து கிட்டி, லிஸி ஆண்டனி உட்படச் சிலர் திரையில் தோன்றுகின்றனர். அடியாட்களாக வருபவர்கள் எண்ணிக்கை நிச்சயம் நூறைத் தொடும்.
அவ்வப்போது நிகழும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப ‘அப்டேட்’ ஆகிக் கொள்வது கௌதமின் பாணி. இதிலும், ஆக்ஷன் கொரியோகிராபிக்கு ‘கேண்டிட்’ பாணியில் ஒளிப்பதிவைக் கையாள வைத்திருக்கிறார். அது திரையில் நம்மை யாரோ துரத்துகின்றனரோ? அல்லது யாரையாவது நாம் துரத்துகிறோமோ? என்று எண்ண வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிருக்கு அதில் பங்குண்டு என்ற போதும், அவரைத் தாண்டி ஜொலிக்கிறார் சண்டைக்காட்சி வடிவமைப்பாளர் யான்னிக் பென். கிளைமேக்ஸில் ஒரு அறைக்குள் நடக்கும் சண்டைக்காட்சியில் கட்டிலில் அடியாட்கள் விழுவதெல்லாம் நம் மண்டைக்குள் மாயப்பூச்சிகள் உலா வரக் காரணமாகின்றன.
படத்தொகுப்பாளர் ஆண்டனி இதில் கடின உழைப்பைக் கொட்டியிருக்கிறார். அடுத்தடுத்து வரும் சண்டைக்காட்சிகளே அதற்கான உதாரணம். சொகுசு பங்களா, இடைப்பகுதியில் வரும் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு மற்றும் காருக்குள் நடக்கும் மோதல் காட்சிகளில் குமார் கங்கப்பனின் தயாரிப்பு வடிவமைப்பு குழு முக்கியப் பங்கு வகிக்கிறது.
இன்னும் ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, டிஐ, விஎஃப்எக்ஸ், ஒலிக்கலவை என்று பல தொழில்நுட்பப் பணிகள் சிறப்பாக அமைந்து படத்துடன் நம்மை ஒன்றச் செய்கின்றன. இசையமைப்பாளர் கார்த்திக் தனது பின்னணி இசையால் சில இடங்களில் பிரமிக்க வைக்கிறார்.
‘நடுநிசி நாய்கள்’ தவிர்த்து இதுவரை தான் இயக்கிய படங்களில் இருந்து வேறுபட்டு, புதுமுகங்கள் போன்றிருக்கும் நடிப்புக் கலைஞர்களைக் கொண்டு ‘ஜோஷ்வா’வை தந்திருக்கிறார் கௌதம் மேனன். குறிப்பாக, ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் தரும் இப்படம் அவரது வழக்கத்திற்கு மாறான வகைமையில் அமைந்துள்ளது.
சிலவற்றை தெளிவுபடுத்தியிருக்கலாம்
இந்த படத்தில் வில்லன்களில் ஒருவராக நடிகர் கிருஷ்ணா வருகிறார். நாயகனாக நடித்த இவரை முழுமையாக வில்லனாகக் காட்டுவாரா கௌதம் என்று நாம் யோசிக்கும்போதே, அவரது பாத்திரம் அந்தளவுக்கு வில்லத்தனமானது இல்லை என்று நகர்கிறது திரைக்கதை. அடுத்த சில நிமிடங்களில் அந்த நிலைமை தலைகீழாகிறது.
‘என்னைய விட என் தங்கச்சிய இவனுக்கு ரொம்ப பிடிக்கும்’ என்று ஓரிடத்தில் சொல்கிறார் கிருஷ்ணா. அதேபோல, ‘இவன் நல்லவன் கிடையாது. இவன் தங்கச்சிதான் எனக்கு ப்ரெண்ட்’ என்று வருண் சொல்வதாகவும் ஒரு காட்சி உண்டு. இந்த முரண்பாடு திரையில் துல்லியமாகச் சொல்லப்படவில்லை.
இவர்கள் இருவரையும் காட்டும்போது, சம்பந்தப்பட்ட தங்கை பாத்திரத்தின் இப்போதைய தோற்றத்தையும் பெயருக்காவது திரையில் காட்டத்தானே வேண்டும். ஆனால், அது நிகழவில்லை. மூவர் சம்பந்தப்பட்ட ‘பிளாஷ்பேக்’ காட்சி சில நொடிகளில் கடந்துபோவதும் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதன் கால அளவை அதிகப்படுத்தினால் திரைக்கதையில் தொய்வு ஏற்படலாம் என்ற எண்ணத்தில் கௌதம் இவ்வாறு முடிவெடுத்திருக்கலாம்.
படத்தின் தொடக்கத்திலேயே, ஜோஷ்வா – குந்தவி இடையிலான அறிமுகம் காட்டப்படுகிறது. அதன்பிறகான காட்சிகள், ‘நான்காண்டுகளுக்குப் பிறகு’ என்ற எழுத்துருக்களோடு திரையில் தோன்றுகின்றன. அது எந்தளவுக்கு ரசிகர்களை கொக்கி போட்டு இழுக்கும் என்று தெரியவில்லை. திரைக்கதையில் அக்காட்சிகளுக்கான இடத்தைக் கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கலாம்.
வழக்கமாக, கௌதமின் படங்களில் நாயகன், நாயகி இடையே காதல் பூப்பதற்கு முன்பாகக் கவித்துவமான சில காட்சிகள் இடம்பெறும். அதன் பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்கும். அப்பாத்திரங்களின் நுணுக்கமான, தனித்துவமான அசைவுகளுக்கு அதில் இடம் தரப்பட்டிருக்கும். இதில் ராஹெய் மற்றும் வருணுக்கு அந்த வாய்ப்பினைக் கௌதம் தரவே இல்லை.
சமீபத்திய ட்ரெண்டை ஒட்டி ‘கேண்டிட்’ பாணி ஒளிப்பதிவை ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’, ‘வெந்து தணிந்தது காடு’ படங்களில் குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தினார் கௌதம். ஆனால், ரசிகர்களிடையே அவை ‘கிளாசிக்’ அந்தஸ்தை பெறவில்லை. அதற்கு, அப்படங்களின் காட்சியாக்கத்தில் நிகழ்ந்த பட்ஜெட் குறைபாடுகளும் ஒரு காரணம். இதிலும் அது தொடர்கதை ஆகியிருக்கிறது.
ஒரு படம் உருவாகும்போது, சில காரணங்களால் காத்திருப்பும் கால தாமதமும் ஏற்படலாம். ஆனால், முழுமையாகப் பணிகள் முடிந்தவுடன் அது திரையரங்குகளுக்குச் சென்றுவிட வேண்டும். அங்கு அதன் தலைவிதி எப்படியிருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியது படைப்பாளியின் கடமை.
அப்படிப்பட்ட படங்கள் திரையரங்கு வாசலை மிதிக்காமல் காத்திருக்க நேர்வது பெருந்துன்பம். அந்த நிலையைக் கடந்து, மீண்டும் தனது படைப்பாக்கத் திறமையைப் பழையது போலவே கௌதம் வெளிப்படுத்த வேண்டும். அதன் கூறுகள் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’வில் தெரிகின்றன. மற்றபடி, இதனை அவரது ’ட்ரேட்மார்க்’ படம் என்று சொல்ல முடியாது.
ஒருவேளை ‘கௌதம் மேனன் படங்கள்ல உள்ள கிளிஷே இதில கம்மியா இருக்கு ப்ரோ’ என்று முழங்கும் 2கே கிட்ஸ்களுக்கு இதில் நிறைந்திருக்கும் ஆக்ஷன் பிடித்துப்போகலாம். யார் கண்டது?
மொத்தத்தில் இந்த ‘ஜோஷ்வா – இமை போல காக்க’ ஆக்ஷன் பட ரசிகர்களுக்கு மட்டும்..!
-உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக – காங்கிரஸ்… செல்போனில் பேச்சுவார்த்தை: செல்வப்பெருந்தகை புது விளக்கம்!
தமிழ் நாட்டின் ‘டாப் 3’ வெயில் மாவட்டங்கள் இதுதான்!