தொகுதி பங்கீடு விவகாரத்தில் இலக்கங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் ‘கையோடு கை கோர்ப்போம்” பயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (மார்ச் 2) தொடங்கி வைத்தார். இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம், உங்களுக்கு ஒதுக்கக்கூடிய தொகுதிகளில் உள் ஒதுக்கீடாக கமல்ஹாசனுக்கு கொடுக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு,
“இதைபற்றி கமல்ஹாசனும் எங்களிடம் கேட்கவில்லை. அவர்களும் (திமுக) அப்படி சொல்லவில்லை.
மேற்கு வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸுடன் கூட்டணியே வராது என்றார்கள். அங்கு கூட்டணி வந்துவிட்டது. ஆம் ஆத்மி வராது என்றார்கள். அதுவும் வந்துவிட்டது. சிவசேனா மற்றும் என்.சி.பி.உடன் முரண்பாடு இருப்பதாக சொன்னார்கள். அங்கும் கூட்டணி அமைந்துவிட்டது. ராஷ்டிரியா ஜனதா தளத்துடன் கூட்டணி ஏற்படாது என்றார்கள். அதுவும் வந்துவிட்டது.
எல்லோருடனும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமே போடப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் எங்களுடன் திமுகதான் நட்புணர்வோடு இருக்கிறது. எங்களுக்குள் ஒரு பிரச்சினையும் இல்லை. சுமூகமாக விரைவில் கையெழுத்தாகும்” என கூறினார் செல்வப்பெருந்தகை.
“நேற்று முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரைச் சந்தித்த போது கூட கூட்டணி குறித்து பேசினோம். பேச்சுவார்த்தை சுமூகமாக இருக்கிறது. 40ம் எங்கள் தொகுதிதான். அதாவது கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் நிற்கும் 40 தொகுதிகளும் எங்கள் தொகுதிதான். இவர்கள் இந்தியா கூட்டணியின் வேட்பாளர்கள்.
எங்கள் கட்சியில் எல்லோரும் தோழமைக்கு உண்மையாக இருப்போம். யாரும் போலியாக இல்லை. கேட்கிற சீட்டை தரவில்லை என நீங்களே முடிவு செய்துகொள்வீர்களா.
திமுகவுக்கும் எங்களுக்கும் இடையே எந்த கசப்பும் கிடையாது. மதிமுக, விசிகவுடனான பேச்சுவார்த்தைகள் எல்லாம் இன்னும் முடியவில்லை. காங்கிரஸ் மீது மட்டும் ஏன் ஆர்வம் காட்டுகிறீர்கள் என” கேள்வி எழுப்பிய செல்வப்பெருந்தகையிடம்,
மற்றக் கட்சிகள் எல்லாம் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு சென்றுவிட்டன. காங்கிரஸ் மட்டும் ஏன் முதல்கட்ட பேச்சுவார்த்தையோடு திரும்ப போகவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
“எங்களுக்கு அகில இந்திய தலைமை இருக்கிறது. அவர்கள் டெல்லியில் இருந்து வந்து வந்து போக முடியாது. அவர்கள் செல்போனில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பிரச்சினை எதுவும் இல்லை. நீங்கள் எதிர்பார்ப்பது போல் நல்ல இலக்கங்கள் வரும்.
காங்கிரஸ் ஒருபோதும் இலக்கங்களை விட்டுக்கொடுக்காது. அவர்களும் விட்டுகொடுக்கமாட்டார்கள். தொகுதிகள் எண்ணிக்கைகள் குறித்து பேசி முடிவெடுப்போம்” என்றார்.
திமுக – காங்கிரஸ் கட்சிகள் இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர், டி.ஆர்.பாலு தலைமையிலான தேர்தல் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பிறகு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இதுவரை நடைபெறாத நிலையில், அகில இந்திய தலைவர்கள் தொலைபேசி மூலம் பேசி வருகிறார்கள் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தமிழ் நாட்டின் ‘டாப் 3’ வெயில் மாவட்டங்கள் இதுதான்!
பாஜகவுடன் ஜி.கே.வாசன் பேச்சுவார்த்தை : அதிமுகவில் இணைந்த தமாகா நிர்வாகி!