2024 ஐபிஎல் தொடரின் 31-வது லீக் போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. டாப் 2 அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி என்பதால் இப்போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
அப்படியான ஒரு ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா, சுனில் நரேனின் அபார சதத்தால் 20 ஓவர்களில் 223 ரன்கள் குவித்தது. நரேன் 56 பந்துகளில் 109 ரன்கள் விளாசியிருந்தார்.
இதை தொடர்ந்து, 224 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி துவக்கத்தில் இருந்தே மளமளவென விக்கெட்களை இழந்தது. இன்னிங்ஸின் முதல் 13 ஓவர்களிலேயே 6 விக்கெட்களை இழந்த அந்த அணி, மீதமுள்ள 7 ஓவர்களில் 99 ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு சென்றது.
அப்போது, துவக்க ஆட்டக்காரராக, இம்பேக்ட் பிளேயராக ஆட்டத்தில் களமிறங்கிய ஜோஸ் பட்லர், மைதானத்தில் ஒரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினார். குறிப்பாக, கடைசி 18 பந்துகளில் 46 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த 18 பந்துகளையும் சந்தித்து, ஒரு அபார சதத்துடன் ராஜஸ்தான் அணியை வெற்றிக் கோட்டை கடக்க செய்தார். அவரின் இந்த மாயாஜால ஆட்டத்தால், ராஜஸ்தான் அணி போட்டியின் கடைசி பந்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஒரு த்ரில் வெற்றியை பெற்றது.
இந்த தொடரில் தனது 2வது சதத்தை பூர்த்தி செய்துள்ள ஜோஸ் பட்லர், ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 7 சதங்களை விளாசியுள்ளார். இதன்மூலம், ஐபிஎல் தொடர்களில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில், கிறிஸ் கெய்லை (6) பின்னுக்குத் தள்ளி பட்லர் 2ஆம் இடம் பிடித்துள்ளார். இப்பட்டியலில், 8 சதங்களுடன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள்
1) விராட் கோலி – 8
2) ஜோஸ் பட்லர் – 7
3) கிறிஸ் கெய்ல் – 6
4) கே.எல்.ராகுல் – 4
4) ஷேன் வாட்சன் – 4
4) டேவிட் வார்னர் – 4
அதேபோல, ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற தனது சாதனையை ராஜஸ்தான் அணி தானே சமன் செய்துள்ளது. முன்னதாக, 2020 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் அணி 224 ரன்கள் என்ற இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. தற்போது, கொல்கத்தா அணிக்கு எதிராக அதே இலக்கை எட்டி, தனது சாதனையை ராஜஸ்தான் அணி தானே சமன் செய்துள்ளது.
An Impactful Innings 😍
🔝 class effort from a 🔝 player ft. Jos Buttler
Watch the match LIVE on @StarSportsIndia and @JioCinema 💻📱#TATAIPL | #KKRvRR | @rajasthanroyals pic.twitter.com/5vz2qLIC7Z
— IndianPremierLeague (@IPL) April 16, 2024
அது மட்டுமின்றி, ஐபிஎல் தொடர்களில் சேஸிங்கின் போது அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலிலும், ஜோஸ் பட்லர் தற்போது முதலிடம் பிடித்துள்ளார். முன்னதாக, விராட் கோலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா 2 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்நிலையில், தற்போது ஜோஸ் பட்லர் 3 சதங்களை விளாசி அப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற பட்லர், தனது இந்த அபாரமான ஆட்டம் குறித்து பேசியபோது, “தோனி, கோலி போன்ற வீரர்கள், எப்படி களத்தில் கடைசி வரை நின்று வெற்றி கிடைக்கும் என நம்பிக்கையுடன் போராடுவார்களோ, அதைதான் நான் இன்று மேற்கொள்ள முயற்சித்தேன்”, எனக் கூறியுள்ளார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: கோடையில் உங்கள் நகங்களை பராமரிப்பது எப்படி?
மின்னம்பலம் மெகா சர்வே: புதுச்சேரி… புது எம்.பி யார்?
முடிவுக்கு வரும் பிரபல சீரியல்… ரசிகர்கள் ஏமாற்றம்… இதுதான் காரணமா?
திருநங்கையாக நடிக்கும் சிம்பு.. இது நம்ப லிஸ்ட்லயே இல்லயே..?!