Zஜெயலலிதா இருந்திருந்தால்..?: மம்தா

public

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அதிமுக நிலைப்பாடு மாறியிருக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

திருணாமூல் காங்கிரஸ் கட்சிக்காக உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வருடாந்திர நிகழ்ச்சி கொல்கத்தாவில் நேற்று (ஜூலை 21) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, “மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இதுவே நமது சபதம். நாட்டைக் காப்பாற்றுவதற்காக பாஜக ஆட்சியை அகற்றுவோம்.

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொல்கத்தாவில் மிகப்பெரிய பேரணியை நடத்துவோம். பாஜகவின் வீழ்ச்சியின் தொடக்கமாக இந்தப் பேரணி அமையும். எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் அழைத்து அந்தப் பேரணியை மிகப் பிரமாண்டமான முறையில் நடத்துவோம். நாற்காலிகளைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. மக்கள் மற்றும் நாட்டைப் பற்றியே நாங்கள் கவலைப்படுகிறோம்” என்று தெரிவித்தார்.

மிட்னாபூரில் அண்மையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது மேடை அருகே இருந்த பந்தல் சரிந்து விழுந்ததில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

இதனைத் தன் பேச்சின்போது குறிப்பிட்ட மம்தா, “ஒரு பந்தலைக்கூட அமைக்கத் தெரியாதவர்கள் நாட்டை எப்படிக் கட்டமைப்பார்கள்?” என்று விமர்சித்தார்.

மேலும், “நேற்றைய நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது அவர்கள் (பாஜக) 325 வாக்குகளைப் பெற்றிருந்தனர். அதிமுக ஆதரவால் பாஜக தப்பித்துவிட்டது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அதிமுக வாக்குகளை பாஜக பெற்றிருக்க முடியாது.

அடுத்த தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவை மு.க.ஸ்டாலின் தோற்கடிப்பார். உ.பி.யில் மாயாவதியும் அகிலேஷும் இணைந்தால் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 50 தொகுதிகளை வெல்லலாம். மத்தியப் பிரதேசத்தில் பாஜகவால் எட்டு தொகுதிகளைக் கூட வெல்ல முடியாது. குஜராத்தில் ஒரு தொகுதியிலும் பாஜக வெல்லாது. பிகாரில் லாலு அனைத்துத் தொகுதிகளையும் பிடிப்பார். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக பலம் 100ஆக குறைந்துவிடும். அதிகபட்சமாக 150 தொகுதிகளை அவர்கள் பெறலாம்” என்று தெரிவித்தார்.

“பாஜக – ஆர்எஸ்எஸ்ஸில் இருந்த நல்ல தலைவர்களை நான் வெறுக்கவில்லை. நாட்டை தற்போது ஆளும் தலிபான்களைப் போன்றவர்கள் அல்ல அவர்கள். என்கவுன்டர் என்ற பெயரில் உ.பி.யில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர்” என்றும் மம்தா குறிப்பிட்டார்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *