wசிறப்புக் கட்டுரை: மகிழ்ச்சியும் மனநலமும் – 2

public

டாக்டர் சுனில்குமார், டாக்டர் ஜெயசுதா காமராஜ்

**சிறப்புத் தொடர்: உங்கள் மனசு**

உங்களைப் பார்த்து, நீங்களே ஆச்சர்யப்பட்டது எப்போது? இந்தக் கேள்வியைக் கேட்டால், வெகு சிலர் மட்டுமே பதில் சொல்வார்கள். சிலரோ, தாங்கள் அதிக துன்பத்தில் துழல்வதாக நினைத்துக்கொண்டு, தனக்குத்தானே நம்பிக்கையூட்டிக்கொள்ள இதனைச் செய்வதுண்டு. ஆனால், தினமும் உங்களைப் பார்த்து நீங்களே ஆச்சர்யப்பட்டால் (Admire Yourself) மகிழ்ச்சி தானாக வரும் என்பது ஆய்வுப்பூர்வமான உண்மை.

பல கருத்தரங்குகளில் இதனை நாங்கள் சொன்னபோது, நிறைய பேர் முதலில் சிரிப்பையே பதிலாகத் தந்தனர். அதன்பிறகு, உங்களை நீங்களே கண்ணாடியில் பார்த்து வியப்பதில்லையா? குறிப்பாக, காலையில் எழுந்ததும் இதனைச் செய்யும் வழக்கமிருக்கிறதா என்று கேட்டிருக்கிறோம். ”நாங்கள் என்ன த்ரிஷாவா? நயன்தாராவா?” என்று பல பெண்கள் பதிலுக்குக் கேள்வி எழுப்பியுள்ளனர். த்ரிஷாவும் நயன்தாராவும் அழகு என்பதற்காக, நீங்கள் அழகு இல்லை என்று யார் சொன்னது என்று அவர்களிடம் நாங்கள் சொல்லியிருக்கிறோம். அதாவது, முதலில் நம்மை நாம் ரசிக்கும்போதுதான், பிறரும் நம்மை ரசிக்கும் தருணம் உண்டாகும்.

இதற்கடுத்ததாக மகிழ்ச்சியை அளிக்கும் ஒரு செயல், உங்களை நீங்களே முழுதாக ஏற்றுக்கொள்ளுதல் (Accept Yourself). நமக்கிருக்கும் உடல் குறைகளையோ, மனக்குறைகளையோ, இயல்பையோ, குணங்களையோ, நாம் முழுதாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லாததை நினைத்து வருத்தப்பட்டால், கண்டிப்பாக மகிழ்ச்சியை வேறெங்கும் தேட முடியாது.

உங்களை நீங்களே பாராட்டிக்கொள்வது (Appreciate Yourself), எப்படிப்பட்ட இக்கட்டான தருணத்தையும் கடந்து செல்லும் வல்லமையைத் தரும். இதற்கடுத்ததாக வருவது, உங்களுக்கு நீங்களே மரியாதை அளிப்பது (Respect Yourself). நம் மீது நமக்கு மதிப்பில்லாவிட்டால், பிறர் நமக்கு மரியாதை அளிக்க வேண்டுமென எதிர்பார்ப்பது வீண் தான்.

இதுபோல உங்கள் மீது நம்பிக்கை கொள்ளூதல் (பிலீவ் யுவர்செல்ப்) மற்றும் உங்களை மதிப்பிடுதல் (Value Yourself). உங்களைப் புதுப்பித்துக்கொள்ளுதல் (Rejuvenate Yourself), நீங்களே உங்களுக்கு சக்தியூட்டுதல் (Energise Yourself) போன்றவை நமக்கு நல்மகிழ்ச்சியைப் பெற்றுத்தரும்.

உங்களுக்கு நீங்களே ஓய்வளிப்பதும் (Relax Yourself) மகிழ்ச்சியைத் தரும். 24 மணி நேரமும், வாரத்தின் எல்லா நாட்களும் உழைப்பைக் கொட்டுவேன்; பணத்தை அள்ளுவேன்; புகழைக் குவிப்பேன் என்றிருக்கக்கூடாது. நமக்குத் தேவையான ஓய்வை புறக்கணிக்கக்கூடாது. உங்களை நீங்களே மன்னித்துக் கொள்வதும் (Forgive Yourself) நிம்மதியைத் தரும் ஒரு விஷயம். நம்மை நாமே மன்னிக்கவும், மற்றவர்களை மன்னிக்கவும், உலகத்தை மன்னிக்கவும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். மன்னிக்கும் குணம் வாய்க்கப்பெற்ற எவரும், இந்த உலகில் மகிழ்ச்சியாகத்தான் வாழ்வார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம், இவை எல்லாமே நம்மில் இருந்துதான் தொடங்கப்பட வேண்டுமென்பது தான்.

மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும், மகிழ்ச்சியளிக்க வேண்டும், மன்னிக்க வேண்டும், கவனிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். எல்லோரும் என்னை மெச்ச வேண்டுமென்று இன்று பலரும் விரும்புகிறார்கள். ஆனால், இந்த உலகம் எப்போது அவர்களை மெச்சும் என்று யாருக்கும் தெரியாது. இல்லாததை நினைத்து, இருப்பதன் அருமையை உணர மறந்த சமூகமாகத்தான் நாம் அனைவரும் இருக்கிறோம்.

நமக்கு மகிழ்ச்சியளிக்கும் மேற்கண்ட விஷயங்களைச் சரியாகப் பின்பற்றினாலே போதும்; மகிழ்ச்சி தானாக வரும்.

இது தவிர, மகிழ்ச்சி என்பது மரபணு வழியாகவும் ஒருவரிடம் குடிகொள்கிறது என்று சில ஆய்வுகள் சொல்கின்றன. ஒருவருடைய ஆளுமையிலும் கூட, மகிழ்ச்சி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. நம் குறிக்கோளை அடைந்தோமா, தேவைகளைப் பூர்த்தி செய்தோமா என்று மனநல சோதனையில் பரிசோதிக்கிறார்கள். இதனுடைய விளைவுதான் மகிழ்ச்சி என்கிறார்கள்.

அடிப்படையிலேயே சிலருடைய ஆளுமை வேறுபட்டிருக்கும். சிலரை Extrovert என்று சொல்லுவோம்; சிலரை Introvert என்போம். Introvert என்பவர்கள் தனிமையில் இனிமை காண்பவர்கள். Extrovert என்பவர்கள் நான்கு பேருடன் எளிதாக நட்பு பாராட்டுபவர்கள். மனநல நிபுணர்களைப் பொறுத்தவரை Extrovert மகிழ்ச்சியாக இருப்பதாகக் கருதுகிறார்கள்.

மகிழ்ச்சியாக இருப்பவர்களின் மூளையே சற்று வித்தியாசமாக இருப்பதாகச் சொல்கிறது மற்றொரு ஆய்வு. இதன்படி, ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது, ஆல்ஃபா அலைகள் மூளையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மூளையின் அதிர்வலைகள் கூட, ஒருவரது மகிழ்ச்சியை வைத்து நிர்ணயம் செய்யப்படுகின்றன.

இதேபோல, ஒருவர் நேர்மறை (Optimistic) அல்லது எதிர்மறை (Pessimistic) சிந்தனை உள்ளவராக இருப்பார். நேர்மறை சிந்தனைக்கும் மகிழ்ச்சிக்கும் நேரடி தொடர்புள்ளது. மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே, உங்களால் நேர்மறையாளராக இருக்க முடியும். நேர்மறையாளராக இருந்தால், உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். இது இரண்டையும் தனியாகப் பிரிக்க முடியாது.

**போலி மகிழ்ச்சி**

போலிகளால் எப்போதும் நிரந்தர விளைவுகளைத் தர முடியாது. உண்மையான மகிழ்ச்சி என்பது நாம் மற்றவர்க்கு கொடுப்பதைப் பொறுத்தே அமையும். இண்டர்நெட் யுகத்தில் மகிழ்ச்சியின் விளக்கத்தை நாம் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கிறோம். லைக், கமெண்ட் பொறுத்து, நமது மகிழ்ச்சியை நிர்ணயிக்கிறோம். மாய உலகில் நமது மகிழ்ச்சியைப் புதைத்து வைக்கிறோம். நமது அறிவோ, சிந்தனையோ, இயல்போ, மற்றவர்கள் அளிக்கும் கருத்தைப் பொறுத்து அமைகிறது. மகிழ்சியாக இருப்பதாகக் காட்டிக்கொள்வது அல்லது நடிப்பது, கண்டிப்பாக நமது மனநலத்தைப் பாதிக்கும். அதோடு, இவ்வாறு கிடைக்கும் மகிழ்ச்சி ரொம்பவே ஆபத்தானதும் கூட.

**மகிழ்ச்சிக்கான வழிகள்**

நம்மை நாமே மகிழ்ச்சிப்படுத்த, இந்த உலகில் நிறைய வழிகள் இருக்கின்றன. Gratitude Letter என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். நன்றி சொல்லுதல் மூலமாக, மகிழ்ச்சி நம்மைத் தேடி வரும்.

வெளிநாட்டவர்கள் காலையில் எழுந்ததும், பிரார்த்தனையோடு தான் ஒரு நாளைத் தொடங்குவார்கள். கடவுளுக்கு நன்றி சொல்வது அல்லது தான் உயிர்வாழக் காரணமானவர்களுக்கு நன்றி சொல்வது, உடல் பயிற்சிகள் செய்வது, அர்த்தமுள்ள செயல்களைத் தினமும் மேற்கொள்வது போன்றவை தானாக மகிழ்ச்சியடைய வைக்கும். நேர்மறையான எண்ணங்களை யோசிப்பதை ஒரு பயிற்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, நம்மை நாமே நேசிக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது, உங்களையும் அறியாமல் ஒரு மகிழ்ச்சி மனதில் தானாகக் குடிகொள்ளூம்.

உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளத் தொடங்கினால், உலகமும் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும். கண்டிப்பாக, இது கற்பனையல்ல; பரிசோதித்துப் பாருங்கள்; வெற்றி அடையுங்கள்!

**எழுத்தாக்கம்: உதய் பாடகலிங்கம்**

**கட்டுரையாளர்கள்:**

**டாக்டர் சுனில்குமார், மருத்துவ உளவியல் நிபுணர்**

மைண்ட் ஸோன் மருத்துவமனையின் நிறுவனர். மணிபால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ உளவியல் பயின்றவர். மது போதை பற்றி ஆய்வுப் பட்டம் பெற்றவர். குழந்தைகள் மனநல மருத்துவராக, 2002 – 2009ஆம் ஆண்டுகளில் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் பணியாற்றியவர். இவர், மனநல சிகிச்சை குறித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆய்வேடுகளைச் சமர்ப்பித்திருக்கிறார். சமகாலச் சமூகம் எத்தகைய மனநல பாதிப்புகளை எதிர்கொண்டுவருகிறது என்பதற்கான இவரது தீர்வுத் தேடல் தொடர்கிறது.

**டாக்டர் ஜெயசுதா காமராஜ், உளவியல் நிபுணர்**

மைண்ட் ஸோன் மருத்துவமனையின் இணை நிறுவனர். சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் உளவியல் பிரிவில் எம்.பில் பட்டம் பெற்றவர். மது போதை குறித்து ஆய்வுப் பட்டம் பெற்றிருக்கிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகளில் ஆய்வேடுகள் சமர்ப்பித்திருக்கிறார்.

குடும்ப நல ஆலோசனை, போதை மீட்பு, குழந்தை வளர்ப்பு மற்றும் பெற்றோர் திறம் போன்ற விஷயங்களைக் கையாளுவதில் வல்லுநர்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *