wஅதிமுகவுடன் இணைவது தற்கொலை முயற்சி: தினகரன்

public

அதிமுகவுடன் அமமுக இணைவதற்கு 1000 சதவிகிதம் வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ள தினகரன், “அப்படி இணைவது தற்கொலை முயற்சி” என்றும் கூறியுள்ளார்.

அமமுகவும் அதிமுகவும் இணையப்போவதாக சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வனும் பேட்டியளித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுடன் சிறையில் சசிகலாவை சந்தித்தார் தினகரன். இதனையடுத்து அவர் அமமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ஒரு தகவல் வெளியானது.

இந்த நிலையில் நெல்லையில் நேற்று (டிசம்பர் 21) செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “நான் கட்சிப் பதவியிலிருந்து விலகப் போவதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதிமுக மீட்டெடுக்க ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு தலைமைப் பொறுப்பு வகிக்க சசிகலாவுக்கும், எனக்கும் தொண்டர்கள் அதிகாரம் வழங்கியுள்ளனர். ஆக, நான் பதவி விலக வேண்டிய அவசியம் என்ன? மேலும், அதிமுகவும் அமமுகவும் இணையப் போவதாக ஒரு வதந்தி காட்டுத் தீயைப் போல பரவி வருகிறது. அமமுகவின் வளர்ச்சியைக் கண்டு பயப்படுபவர்கள் இதுபோன்ற பொய் பிரச்சாரங்களை கிளப்பிவிடுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

“எந்த காலத்திலும் திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பே இல்லை. அமமுக அதிமுகவோடு இணைவதற்கு 100 சதவிகிதம் அல்ல, 1000 சதவிகிதம் வாய்ப்பே கிடையாது” என்று உறுதியாக தெரிவித்த தினகரன், இணைப்பிற்கு உளவுத் துறை வேலை பார்ப்பதாகவும் தை 10ஆம் தேதி அதிமுக-அமமுக இணைந்துவிடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளனவாம். நாங்கள் அதிமுகவுடன் இணைவது என்பது தற்கொலை முயற்சியாகும் என்று விமர்சித்துள்ளார்.

மேலும், “பழைய கட்சி ஒன்று எங்களிடமிருந்த ஒருவரை தூண்டில் போட்டு வளைக்கின்ற அளவுக்கு இருக்கிறது. காரணம் ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்ததுதான். வரும் சட்டமன்றத் தேர்தலில் 20 இடங்களிலும் நாங்கள்தான் வெற்றிபெறுவோம். அதில் குறிப்பாக திருவாரூரில் அந்தக் கட்சிக்கு ஒரு அடி கொடுத்தால் சரியாகிவிடும்” என்று திமுகவை மறைமுகமாக விமர்சித்தார்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *