கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டும் போதாது: உலக சுகாதார அமைப்பு!

public

கொரோனாவைத் தடுப்பதற்குத் தடுப்பூசி மட்டும் போதாது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 8 மாதங்களாக ஒட்டுமொத்த உலகத்தையும் கொரோனா ஆட்டிப்படைத்து வருகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு உலக நாடுகள் போராடி வருகின்றன. இதில் சில மருந்து நிறுவனங்கள் தயாரித்துள்ள மருந்துகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் இருக்கின்றன. இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மருந்து கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து 50 சதவிகிதம் பலன் அளித்தாலே சாதகமான விஷயம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்கா, ரஷ்யா மருந்துகள் 90 சதவிகிதத்துக்கும் மேல் பயனளிப்பதாக அதன் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனிகா இணைந்து கண்டுபிடித்துள்ள மருந்து முதலில் கிடைக்கும் என மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் பைசர் நிறுவனம் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள மருந்து மூன்றாம் கட்ட பரிசோதனையில் 90 சதவிகிதத்துக்கு அதிகமான வெற்றி கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ரஷ்யாவில் ஸ்பூட்னிக்-வி மருந்து 92 சதவிகிதம் பலனளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க நிறுவனமான மாடர்னா நேற்று வெளியிட்ட அறிவிப்பில், எங்களது தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனை முடிவு 95 சதவிகிதம் பயனுள்ளதாக வந்துள்ளது என்று தெரிவித்தது. இந்நிறுவனம் கண்டுபிடித்துள்ள ‘எம்ஆா்என்ஏ-1273’ தடுப்பூசி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று (நவம்பர் 16) தடுப்பூசி குறித்துப் பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ், “ஒரு தடுப்பூசி தானாகவே தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவராது. கண்காணிப்பு, சோதனை, தனிமைப்படுத்துதல், தொடர்புகளைக் கண்டறிதல் தனிநபர்களைக் கவனமாக இருக்க ஊக்குவித்தல், சமூக இடைவெளி ஆகியவற்றை இன்னும் தொடர வேண்டும்.

தடுப்பூசி சில கட்டுப்பாடுகளுடன் தான் பயன்பாட்டிற்கு வரும், சுகாதார பணியாளர்கள், வயது மூத்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் முதலில் வழங்கப்படும். இதன்மூலம் இறப்பும், பாதிப்பும் தான் குறையும். எனவே கொரோனாவை தடுப்பதற்குத் தடுப்பூசி போதுமானதாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

**-பிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *