vநீதிபதிகள் நியமனம்: மத்திய அரசு மீது புகார்!

public

உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் விவகாரத்தில் கொலீஜியத்தின் பரிந்துரையே இறுதியானது என்று தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். இதற்கு மாறாக, உச்ச நீதிமன்றமும் மத்திய சட்ட அமைச்சகமும் பதில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம், வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தராகண்ட் மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்தது. இது குறித்து முடிவெடுக்காமல் தாமதித்துவந்த மத்திய அரசு, நேற்று (ஏப்ரல் 25) மல்ஹோத்ராவை நீதிபதியாக நியமனம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டது. இவர், நாளை உச்ச நீதிமன்றத்தில் பதவி ஏற்கவுள்ளார். ஆனால், கே.எம்.ஜோசப் பற்றிய எந்தத் தகவலும் மத்திய அரசின் சார்பாக வெளியிடப்படவில்லை. 2016ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்குத் தடை விதித்தவர் கே.எம்.ஜோசப் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து விமர்சித்துவரும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இன்று (ஏப்ரல் 26) தனது ட்விட்டர் பக்கத்தில் கே.எம்.ஜோசப் நியமனம் குறித்துப் பதிவிட்டுள்ளார். “நாளை (ஏப்ரல் 27) உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்து மல்ஹோத்ரா பதவியேற்கவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், நீதிபதி கே.எம்.ஜோசப் நியமிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. அவரது நியமனத்தைத் தடுத்து நிறுத்துவது எது? அவரது மாநிலமா, மதமா அல்லது உத்தராகண்ட் வழக்கில் அவர் வழங்கிய தீர்ப்பா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“தற்போதுள்ள சட்டப்படி, நீதிபதிகள் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையே இறுதியானது. மோடியின் அரசாங்கம் சட்டத்தை விடப் பெரியதா?” என்று மத்திய அரசைக் கேட்டுள்ளார் ப.சிதம்பரம்.

இது குறித்து, இன்று (ஏப்ரல் 26) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் மூத்த காங்கிரஸ் தலைவரும் வழக்கறிஞருமான கபில் சிபல். அப்போது, இந்திய நீதித் துறை அபாயத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார். ”தனது சுதந்திரத்திற்காக நீதித் துறை ஒன்றிணைந்து போராடாவிட்டால், ஜனநாயகம் அபாயத்திற்கு உள்ளாகும். அவர்கள் (பாஜக), தங்களது ஆட்களை உயர் நீதிமன்றங்களில் நிரப்ப விரும்புகிறார்கள். கொலீஜியத்தின் பரிந்துரைகளை ஏற்காமல், தங்களுக்குச் சாதகமானவர்களையே நீதிபதிகளாக நியமிக்க விரும்புகிறார்கள்” என்று தெரிவித்தார். நீதித் துறையின் சுதந்திரத்தைக் காக்க யார் குரல் கொடுக்கப்போகிறார்கள் என்று அறிய விரும்புவதாகவும், நீதித் துறைக்காக ஒருமித்தவாறு குரலெழுப்பினால் போதுமானது என்றும் அவர் கூறினார்.

கே.எம்.ஜோசப் நியமனம் குறித்து முடிவெடுக்காமல் தாமதித்துவந்த மத்திய சட்ட அமைச்சகம், காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து கொலீஜியத்தின் பரிந்துரையைத் திருப்பி அனுப்பியுள்ளது. தற்போதைய சூழலில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்புவது தக்க முடிவல்ல என்றும், அந்த முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எழுதிய கடிதத்தில் அது தெரிவித்துள்ளது. இதுபற்றிப் பேசிய மத்திய சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத், பணி மூப்பு அடிப்படையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் 11 பேர் கே.எம்.ஜோசப்புக்கு முன்னால் இருப்பதாகக் கூறியுள்ளார்.

முன்னதாக, மத்திய அரசு நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யாததைக் கண்டித்து, வழக்கறிஞர் மல்ஹோத்ராவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யத் தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இரண்டு பேரையும் நியமிப்பதோ அல்லது நிராகரிப்பதோ மத்திய அரசின் முடிவாக இருந்திருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு கொலீஜியத்தின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பினால் அதுபற்றி முடிவெடுக்கப்படும் என்றும், அதற்கு முன்பே மத்திய அரசின் ஆணையை நிறுத்தி வைப்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது என்றும், இதுபோல இதற்கு முன்பு கேள்விப்பட்டதில்லை என்றும் தெரிவித்தனர் நீதிபதிகள். மேலும், வழக்கறிஞர் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படுவதை வழக்கறிஞர்களே ஆட்சேபிப்பது ஆச்சரியமளிக்கிறது என்றும் கூறினர்.

ஆனால், தாங்கள் நீதித் துறையின் சுதந்திரம் பற்றி மட்டுமே கவலைப்படுவதாகத் தெரிவித்தார் இந்திரா ஜெய்சிங். உடனடியாக விசாரிக்க வேண்டிய வழக்குகளின் வரிசையில் இதனைச் சேர்க்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அதற்கான நேரம் வரும்போது விசாரணை நடைபெறுமென்று தெரிவித்தனர்.

கொலீஜியத்தின் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்துமாறு தெரிவித்த மத்திய அரசுக்கு எதிராக, உச்ச நீதிமன்ற பார் கவுன்சிலைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *