vசிறப்புத் தொடர்: சண்டை வந்தால் என்ன செய்வது?

public

வெண்பா கீதாயன்

ஓவியம்: சசி மாரீஸ்

**நீ கூடிடு கூடலே – 25: உறவுகளை அலசும் தினசரி தொடர்**

சாதாரண நண்பர்களுக்குள்ளேயே புரிதலின்மை மற்றும் சண்டைகள் போன்றவை நிகழும்போது காதலில் அதுவும் ஒரே வீட்டில் இருக்கும்போது சண்டைகள் நடந்தே தீரும். சண்டை போடுவதற்கு ஒரு சிறிய காரணம் போதும். சண்டையே போடாமல் எந்தவோர் உறவும் இவ்வுலகில் கிடையாது. அவ்வாறு சண்டை வராத உறவு என்றால் ஒன்று போலியாக இருக்க வேண்டும் அல்லது ஒருவர் சர்வாதிகாரியாக இருக்க வேண்டும்.

ஒருவர் என்ன சொன்னாலும் அவருடைய துணை பணிந்து நடந்துகொண்டால் சண்டை வராது. ஆனால், அனைத்திலும் பணிவது முற்றிலும் தவறான பழக்கம். காதலில் சரண்புகுந்து கிடக்கலாம்; அதற்காகச் சுயத்தை இழக்கக் கூடாது. இதற்காக ஏதேனும் ஒரு புத்தகத்தையோ, தத்துவ ஞானியையோ, கொள்கையையோ கற்கத் தேவையில்லை. சுயம் என்பது கேட்டும் வாசித்தும் வருவது கிடையாது. தானாக நம்முள் உருவாவது. கேட்டும் வாசித்தும் திடீரென ஓர் பழக்கத்தைச் சுயமெனக் கருதினால் என்றேனும் தனியாக இருக்கும்போது நம் மனச்சான்று நீ ஒரு போலி என்று முகத்தில் அறைந்து அழவைக்கும்.

இன்றைய சமூகம் பெரும்பாலும் டிப்ரஷனில் மூழ்கக் காரணம் இந்தச் சுயத்தை அடையாளம் காண முடியாமல் இருப்பதுதான். சிலர் ஏதேனும் ஒரு கொள்கையால் தாக்கம் பெற்று, அதுவாக மாற விழைந்து, தன் சுயத்துடன் தோற்று டிப்ரஷனில் விழுந்து கிடப்பார்கள்.

உதாரணமாகப் பெண்ணியத்தை எடுத்துக் கொள்வோம். நேற்று வரை காதலனுடன் எந்த உயர்வு தாழ்வும் பார்க்காமல் காதலித்து வந்த நான் இன்று வறட்டுத்தனமான பெண்ணியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அடிமைப்படுத்தப்படுவதாக உணர்கிறேன். எனவே சுதந்திரம் வேண்டி என் பெண்ணுரிமையை மீட்கக் காதலனை ப்ரேக்அப் செய்கிறேன். சோஷியல் மீடியாவில் தினமும் ஆண்களைக் கரித்துக்கொட்டி வசைபாடுகிறேன்.

ஆஃப்லைன் வந்ததும் என் அறையில் நான் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கமுடியும்? கண்டிப்பாகத் தீவிர மனஅழுத்தம் வந்துவிடும். நேற்று வரை என் சுயம் அனிச்சையாக இயங்கியது. சந்தோஷமாக இருந்தேன். இன்று ஒரு கொள்கையினால் ஈர்க்கப்பட்டுக் காதலை அடிமைத்தனமாகக் கருதி விலகிய பின் என் சுயம் என்னை மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கிவிடும். அடுத்தடுத்து வருகிற காதலின் ஸ்திரத்தன்மையையும் இத்தகைய கொள்கை – சுயம் மனப்போராட்டம் நொறுக்கிவிடும். இறுதியில் அந்தக் கொள்கைக்கு நம்மை பலியாக்கித் தனித்து வாழ நேரும். அப்போதும் இதே மனஅழுத்தம் நம்மை நிம்மதியாகத் தூங்க விடாது.

எனவே எந்தவொரு புறக்காரணிகளையும் உங்கள் சுயத்தின் மீது திணித்துக்கொள்ள வேண்டாம். சுதந்திர உணர்வு, சமத்துவம், தன்மானம் ஆகியவை முக்கியம்தான். ஆனால், என்பவை வேறு, செயற்கையாக ஒரு கொள்கைக்கு நம்மை ஒப்புக்கொடுத்துவிட்டுச் சுயத்தைத் தொலைத்துவிட்டு நிற்பது வேறு.

உறவில் இந்தச் சுயம் தொலைதல் எவ்வாறு நிகழ்கிறது? எவற்றை மாற்றிக்கொள்ளலாம்? எவற்றை மாற்றிக்கொள்ளக் கூடாது?

உடல் என்று எடுத்துக்கொண்டால் மெலிவடையச் சொல்லும் காதலனை ஒருபோதும் திட்டக் கூடாது. அதேசமயம் காதலன் பருமனாகச் சொன்னால் அதற்கு ஒப்புக்கொள்ளாதீர்கள். உடல் குறித்து ஆலோசனைகளை முன்வைக்கலாம். ஆனால், கட்டளைகள் கூடாது. உணவிலும் நீங்கள் அசைவம் என்றபோது சைவத்திற்கு மாறச்சொல்லி வற்புறுத்தினால் ஏற்றுக்கொள்ளாதீர்கள். உங்களுக்கே தோன்றும்போது மாறுவதில் பிரச்சினை இல்லை. வழிபாட்டு முறைகளிலும் திணிப்பு கூடாது. உங்கள் துணை நாத்திகர் என்றால் அவரை வழிபாட்டுத்தலத்திற்கு இழுத்துச் செல்வதும் தவறு. வளர்ப்புப் பிராணிகள் வீட்டில் ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்றால் மெனக்கெட்டு வாங்கி வந்து எரிச்சலூட்டக் கூடாது.

தம் காதலன் / காதலிக்கு நம்முடைய ஒரு குறிப்பிட்ட நண்பன் / தோழியைப் பிடிக்கவில்லையெனில் அவர்களை வீட்டிற்கு அழைத்து வருவதை அறவே தவிர்க்க வேண்டும். அதேபோலத் துணையுடன் செல்லும்போது அவர்களைச் சந்திப்பதும் பெரிய சிக்கலுக்கு வழிவகுக்கும். மாறாக, ஒரு சந்திப்பு நிகழ்த்திப் புரிதலை உருவாக்கலாம் என்று நினைத்தால் அது மேலும் விரிவடைந்து உங்களுக்கும் உங்கள் துணைக்குமிடையில் விரிசலை ஏற்படுத்தும். நண்பர்கள் முன்னிலையில் நம் துணையைப் பகடி செய்வதைக் கூடியமட்டும் குறைத்துக்கொள்ள வேண்டும்.

மேற்காணும் விஷயங்கள் உடனே பிரச்சினையை உருவாக்காது. என்றேனும் இருவரில் யாருக்காவது மூட் சரியில்லை என்றால் சிறிய தீப்பொறியில் பற்றிக்கொள்ளும். அப்போது தன்னை மீறி இவையெல்லாம் நினைவுக்கு வந்து சண்டையாகிப் பிரிவுக்கு வழிவகுக்கும்.

“அன்னிக்கு உன் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி என்னை சப்பை ஃபிகர்னு கிண்டலடிக்கும்போதே நீ எவ்வளவு கேவலமானவன்னு தெரிஞ்சுக்கிட்டேன்டா” என்றோ, “அந்த வருண் எனக்குப் புடிக்காதுனு தெரிஞ்சும் இங்க கூட்டிட்டு வந்து காபி போட்டுத் தர்றனா எவ்ளோ திமிரு இருக்கும்டி” என்றோ பேசக்கூடிய சூழல் உருவாகும்.

இத்தகைய நிகழ்வுகள் நடக்கும்போது அமைதியாக இருந்து சண்டை வரும்போது இப்படிக் கேட்டு ஆற்றாமையைத் தீர்க்க முயல்வோம். எவ்வளவு காதல் இருந்தாலும் மானுடச் சிறுமை இம்மாதிரி தருணங்களில் வெளிப்பட்டுவிடும். காவியக் காதலர்களாக இருந்தாலும் வெறும் மனிதர்கள்தானே…

(காதல் தொடரும்)

(**கட்டுரையாளர்:**

வெண்பா கீதாயன்

. எழுத்தாளர். சமகால நிகழ்வுகள், இலக்கியம், உளவியல், சமூகம் சார்ந்த கருத்துகளைப் பல்வேறு ஊடகங்களில் எழுதி வருகிறார்.)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *