vசின்மயி வேண்டுகோளுக்கு செவிசாய்த்த மக்கள்!

public

சுவிட்சர்லாந்தில் வைரமுத்து சார்பாகத் தமக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதாக சின்மயி கூறியிருந்த நிலையில் அவருக்கு ஆதரவாகத் திரைத் துறை, பத்திரிகைத் துறையைச் சேர்ந்த பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

2004ஆம் ஆண்டு வீழமாட்டோம் ஆல்பம் வெளியீட்டுக்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது வைரமுத்து சார்பாக தனக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதாக சின்மயி தனது [ட்விட்டர் பக்கத்தில்](http://minnambalam.com/k/2018/10/10/39) தெரிவித்திருந்தார். அந்தச் சம்பவத்தின் போது அவருடைய தாய் பத்மாசினி உடனிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக பத்மாசினி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் வைரமுத்து சார்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேஷ் என்பவர் [மிரட்டல் விடுத்ததாகக்](http://minnambalam.com/k/2018/10/10/109) கூறினார்.

இத்தனை ஆண்டுக் காலம் இதுகுறித்து வெளியில் பேசாதது ஏன் என்ற கேள்விக்கு, “அப்போது நாங்கள் கூறியிருந்தால் நம்பியிருக்க மாட்டீர்கள். இப்போதுள்ள சூழல் காரணமாக அனைவரும் இதற்குச் செவிமடுக்கின்றனர்” எனக் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக வைரமுத்து, “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப் பிரச்சினை குறித்து நடிகை ஆண்ட்ரியா, “பத்து வருஷத்துக்கு முன்போ, ஐம்பது வருஷத்துக்கு முன்போ… தப்பு தப்பு தானே. உண்மை எப்போது வேண்டுமானாலும் வெளியே வந்துவிடும். பயம் இல்லாமல் நாங்கள் வாழ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான், “சின்மயி நான் உங்களை மதிக்கிறேன். கடவுள் உங்களோடு இருப்பார். நன்றி” என்று பதிவிட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த சின்மயி, “ஜிப்ரான் நான் உங்களுக்குக் கடன்பட்டுள்ளேன். என்னை நம்பியதற்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

சமந்தா, வரலட்சுமி ஆகியோர் ஏற்கெனவே தங்கள் ஆதரவை சின்மயிக்குத் தெரிவித்திருந்த நிலையில் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, நடன இயக்குநர் கல்யாண் ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பெருகிவரும் ஆதரவை ஒரு சமூக சேவையாக மாற்ற, நீங்கள் பாதிக்கப்பட்ட அத்தனை நிகழ்வுகளையும் மறைக்காமல் வெளியே சொல்லுங்கள் என சின்மயி கோரிக்கை விடுத்திருந்தார். அதன் பலனாக பலரும் சின்மயியின் இன்பாக்ஸில் தாங்கள் பாதிக்கப்பட்டவற்றைப் பற்றிப் பேசியிருக்கின்றனர். “நான் பாதிக்கப்பட்டதை என் கணவரிடம் தைரியமாகச் சொன்னேன். அந்த நபரை நேரடியாகச் சென்று கேட்டபோது, அவரது மகளும் இப்படி பாதிக்கப்படுவதை அறிந்து அதிர்ந்துபோனோம்’ என ஒருவர் சின்மயிக்கு தகவல் அனுப்பியிருக்கிறார்.

“பாலியல் குற்றங்களை செய்யும் மிருகங்கள், யாரிடமாவது தங்களது செயலைப் பெருமையாக சொல்லும். அவர்களே அவ்வளவு தைரியமாகப் பேசும்போது நாம் ஏன் அமைதியாக இருக்கவேண்டும். அவர்களின் பெயரை வெளியே சொல்லி உலகத்தின் முன் நிறுத்துவோம்” என்று தொடர்ந்து ட்வீட்களை பதிவு செய்திருக்கிறார் சின்மயி.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *