12ஆயிரம் வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.4000: பார் கவுன்சில்!

public

தமிழகத்தில், 12 ஆயிரம் வழக்கறிஞர்களுக்கு, தலா, 4,000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி பாதிப்படைந்துள்ள வழக்கறிஞர்களுக்கும் நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. தினசரி நீதிமன்றத்துக்கு பணிக்குச் சென்றால் தான் வாழ்வாதாரம் என்றிருந்த இளம் வழக்கறிஞர்களின் நிலை கேள்விக்குறியானது.

இந்நிலையில், கடந்த மாதம் நிதியுதவி கோரும் அனைத்து தகுதியான வழக்கறிஞர்களிடமிருந்தும் விண்ணப்பங்களைப் பார் கவுன்சில் கோரியிருந்தது. அதன்படி நிவாரணத்துக்காக 17,059 வழக்கறிஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 12,000 வழக்கறிஞர்கள் நிவாரணம் பெறத் தகுதியானவர்கள் என்று அறிவித்து அவர்களுக்காக 4000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

பார் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா ஊரடங்கு காரணமாக நலிவடைந்த வழக்கறிஞர்களுக்காக அமைக்கப்பட்ட பார் கவுன்சில் நிதியகத்துக்கு, நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் பிறதரப்பினரிடமிருந்து ரூ. 1 கோடி வந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் பொது நிதியிலிருந்து ரூ. 3 கோடி, இந்திய பார் கவுன்சிலின் வழக்கறிஞர்கள் நல சங்கத்தின் தலைவரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ரூ.1 கோடி என மொத்தம் 5 கோடி ரூபாய் தமிழ்நாடு பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் நிவாரண நிதிக்காகச் சேர்ந்துள்ளது.

இதன்மூலம் பாதிப்படைந்துள்ள வழக்கறிஞர்களுக்கு நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் முதல் அந்தந்த மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்கள் மூலம் உதவிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் ஜூன் மாதம் முதல் நீதிமன்றங்களைச் செயல்படச் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *