கிச்சன் கீர்த்தனா: காலை உணவுக்கு ஏற்றதா ‘ஓவர்நைட்’ ஓட்ஸ்?

public

தற்போது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது ஓவர்நைட் ஓட்ஸ். நேரமின்மை காரணமாக தினமும் காலை உணவு சாப்பிட முடியாமல் தவிர்ப்பவர்கள், முதல்நாள் இரவே ஓட்ஸை ஊறவைத்து மறுநாள் சாப்பிடும் ஓவர்நைட் ஓட்ஸை காலை உணவாக எடுத்துக்கொள்வது அதிகரித்து வருகிறது. அதென்ன ஓவர்நைட் ஓட்ஸ்… அது காலை உணவுக்கு ஏற்றதா என்கிற சந்தேகம் பலருக்குண்டு.
இதோ அதற்கான பதில்… “நேரமின்மை காரணமாக காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு ஓவர்நைட் ஓட்ஸ் நிச்சயம் வரப்பிரசாதம்தான். ஆனால் வெறுமனே இன்ஸ்டன்ட் ஓட்ஸை ஓவர்நைட் ஓட்ஸாக செய்து சாப்பிடுவது பலன் தராது. ஓவர்நைட் ஓட்ஸ் தயாரிப்புக்கு ரா ஓட்ஸ், ரோல்டு ஓட்ஸ், ஸ்டீல் கட் ஓட்ஸ் ஆகியவைதான் ஏற்றவை.
இந்த வகை ஓட்ஸில்தான் எந்தவிதமான பதப்படுத்தலும் இல்லாமல் எல்லா சத்துகளும் அப்படியே கிடைக்கும். அதாவது கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் பி, தாமிரச்சத்து, மக்னீசியம், துத்தநாகம் என எல்லா சத்துகளும் இருக்கும். இன்ஸ்டன்ட் ஓட்ஸில் சத்துகள் குறைவாக இருக்கும்.
ஓவர்நைட் ஓட்ஸ் தயாரிக்க மேற்குறிப்பிட்ட ஓட்ஸ் வகையில் ஒன்றில் தேவையான அளவை எடுத்து தண்ணீர், பால், பாதாம் பால், தேங்காய்ப் பால் என ஏதேனும் ஒன்றில் ஊறவைக்க வேண்டும். இதை முதல் நாள் இரவே ஊறவைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் எடுத்துப் பார்த்தால் சமைத்த ஓட்ஸ் பக்குவத்தில் மெத்தென ஊறியிருக்கும்.
எல்லா நீர்ச்சத்தையும் அது உறிஞ்சியிருக்கும் என்பதால் தேவைப்பட்டால் நீங்கள் மேலும் சிறிது பாலோ, தண்ணீரோ சேர்த்துக்கொள்ளலாம். சிலர் தயிர்கூட சேர்த்துக் கொள்வார்கள். இந்த ஓட்ஸுடன் அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.
மாம்பழம், ஆப்பிள், பேரிக்காய், மாதுளை என எதை வேண்டுமானாலும் சேர்க்கலாம். ஒரே ஒரு பழத்தையோ அல்லது பழக் கலவையையோ சேர்த்துச் சாப்பிடலாம். பாதாம், வால்நட்ஸ் என நட்ஸும், பூசணி விதை, சூரியகாந்தி விதை, சியா சீட்ஸ் என சீட்ஸையும் சேர்ப்பதன் மூலம் கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும்.
சாதாரணமாக உப்புமா செய்யும்போது வெறும் வெங்காயம், தக்காளி மட்டும் சேர்க்காமல் காய்கறிகளும் சேர்ப்பதால் அது ஊட்டமான உணவாக மாறுவது போலத்தான் இதுவும்.
ஓவர்நைட் ஓட்ஸில் பால் வேண்டாம் என்பவர்கள் தயிர் சேர்த்துக் கொள்ளலாம். தயிரிலுள்ள புரோபயாடிக்ஸ் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லது. பாதாம் பால் சேர்க்கும்போது புரதச்சத்து கூடும். ஓட்ஸை முதல்நாள் இரவே ஊறவைத்துச் சாப்பிடுவதால் செரிமானம் எளிதாகும். நட்ஸ், சீட்ஸ் சேர்த்துச் சாப்பிடும்போது அது முழுமையான ஊட்டச்சத்துள்ள உணவாக மாறுகிறது” என்கிறார்கள் டயட்டீஷியன்கள்.

**[நேற்றைய ரெசிபி : கறிவேப்பிலை குழம்பு!](https://www.minnambalam.com/public/2022/05/21/15/Curry-leaves-kulamu)**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *