oகாவிரி மேலாண்மை வாரியம்: முதல்வர் ஆலோசனை!

public

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானது. அந்தத் தீர்ப்பில், காவிரி நடுவர் மன்றத்தினால் இதுநாள் வரை தமிழகத்துக்கு வழங்கப்பட்டு வந்த 192 டிஎம்சி நீரில் 14.75 டிஎம்சியைக் குறைத்து 177.25 டிஎம்சியாக வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை 6 வாரத்தில் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தக் காலக்கெடு இன்றோடு நிறைவடைகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனத் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளும் குரல் கொடுத்துவருகின்றன. இதேபோல் தமிழக விவசாயிகளும் டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். எனினும் மத்திய அரசு தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று(மார்ச் 29) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள், அதிகாரிகள் உட்படப் பலரும் இதில் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சி.வி.சண்முகம், ஓ.எஸ். மணியன், செங்கோட்டையன், துரைக்கண்ணு, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

சுமார் 1 மணி நேரம் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காவிரி நதிநீர் விவகாரத்தில் சட்டப்பூர்வமாக எத்தகைய நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை முடிவுபெற்ற பின்னர் அதிகாரிகளையும் அனுப்பிவிட்டு அமைச்சர்களுடன் தனியாக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்றோடு நிறைவடைவதால், எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகள் போன்றவை தங்களின் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. தஞ்சை, ஆற்றுப்பாலத்தில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, நிர்வாக ரீதியிலான சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வது, காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுப்பது என்பது குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *