qகாவல்நிலையத்தில் இளமதி: கணவன் மீது வழக்கு

public

சேலம் மாவட்டம் மேட்டூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டதைத் தொடர்ந்து கடத்தப்பட்ட இளமதி மேட்டூர் காவல் நிலையத்தில் ஆஜரானார்.

சேலம் மாவட்டம் கொளத்தூரில் கடந்த மார்ச் 9ஆம் தேதி, திராவிட விடுதலைக் கழகத்தின் சார்பில் செல்வன்-இளமதி காதல் ஜோடிக்கு சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதுமண தம்பதியரையும், திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்களையும் கும்பல் ஒன்று கடுமையாகத் தாக்கியதோடு இளமதியையும் கடத்திச் சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களில் 18 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து இளமதியை மீட்டெடுக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். சம்பவம் நடந்து நான்கு நாட்களாகியும் இளமதி கண்டுபிடிக்கப்படவில்லை. இளமதியைத் திருமணம் செய்த செல்வன், தனது மனைவியை மீட்டெடுக்கக் கடும் போராட்டம் நடத்திவந்தார். இது தொடர்பாக நமது மின்னம்பலத்தில், [‘மனைவியை மீட்டுத் தாருங்கள்’: கலங்கும் செல்வன்](https://www.minnambalam.com/politics/2020/03/13/78/selam-women-elamathi-kidnapped-case-status) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், நாடாளுமன்றத்திலும் இது குறித்துப் பேசினார். தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் ‘இளமதி எங்கே’ என்னும் ஹேஷ்டேக் ட்ரெண்டானது. கடத்தப்பட்ட இளம்பெண் காணாமல் போன சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இன்று(மார்ச் 14) இளமதி காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திருமணம் நடத்தி வைத்த ஈஸ்வரன், கணவன் செல்வன் மற்றுமொரு திவிக உறுப்பினர் ஆகிய நான்கு பேர் மீதும் பவானி காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டத்தின் 323,366,506/2 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது வழக்கறிஞருடன் ஆஜரான இளமதி, பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இளமதியின் இந்த முடிவு பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

**-இரா.பி. சுமி கிருஷ்ணா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *