பள்ளிகளில் கொரோனா: பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு!

public

தமிழ்நாட்டில் பள்ளிகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் விவரங்களை பள்ளிக்கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதையடுத்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அதேசமயம், பள்ளிகள் திறக்கப்பட்ட நாளிலிருந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று கண்டறியப்படும் பள்ளிகளுக்கு தற்காலிகமாக விடுமுறை அளிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இருப்பினும், பள்ளிகள் திறந்ததால்தான் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது என்பது தவறு. ஏற்கனவே தொற்று இருப்பவர்கள் பள்ளிக்கு வந்தவுடன் அது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இது பெரிய அளவிலான பாதிப்பு இல்லை. தொடர்ந்து பள்ளிகள் கண்காணிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

அதனால், பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். பள்ளி நுழைவு வாயில் வெப்பநிலை பரிசோதனை, மாணவர்கள், ஆசிரியர்கள் மாஸ்க் அணிந்திருப்பது கட்டாயம், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது, பள்ளிகள் திறக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியாளர்களின் விவரங்களை பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் மின்னஞ்சல் முகவரிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *