முதல்வர்  பங்கேற்கும் மாநாட்டிற்குத் தடைவிதிக்க நீதிமன்றம்  மறுப்பு!

public

மதுரை ஒத்தக்கடையில் முதல்வர் இன்று பங்கேற்கும் மாநாட்டிற்குத் தடைவிதிக்கச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.

மதுரை உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த வெள்ளைதுரை என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஒத்தக்கடை பகுதியில் வீர முத்தரையர் முன்னேற்றச் சங்கம் சார்பாக இன்று கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை பரவி வரும் நிலையில் இந்த கூட்டம் நடைபெறுவது ஆபத்தானது. இந்த கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். 25 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகம், அரசியல், விளையாட்டு நிகழ்ச்சி ஆகியவற்றில் 200 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் இந்த கூட்டத்தில் 25ஆயிரம் பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கியது ஏற்புடையதல்ல. எனவே இந்த கூட்டம் நடத்த வழங்கப்பட்ட அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ள உள்ள நிலையில் இது அவசர வழக்காகத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஜி.ஆர் சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், கூட்டம் நடைபெறும் உள் அரங்கில் 200 நபர்கள் மட்டுமே அமர ஆணை வழங்கப்பட்டுள்ளது. தற்போது கூட்டம் நடைபெறும் இடம், 14 ஏக்கர் என்பதால் 25 ஆயிரம் நபர்கள் அமரக் கூடியது என்றும்  மதுரையில் தெப்பத்திருவிழா, ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்ச்சிக்குச் சிறப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வீர முத்தரையர் முன்னேற்றச் சங்க கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள், கிராமசபைக் கூட்டங்களை அனுமதிக்காமல் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.  மேலும் மதுரையில் நேற்று நடந்த பாஜக கூட்டம் மற்றும் முதல்வர் கூட்டத்தில் எத்தனை நபர்கள் கலந்து கொண்டனர்? நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தின் அளவு எவ்வளவு? தற்போது உள்ள சூழ்நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகள் எவ்வாறு நடைபெறுகின்றன? என்றும் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, இந்தக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளதால் கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் பலர் வருகை தந்திருப்பார்கள். தற்போது தடை விதித்து உத்தரவு பிறப்பித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த கூட்டத்திற்குத் தடை விதிக்க விரும்பவில்லை. இனி இதுபோன்ற கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் போது வைரஸ் தொற்று காலத்தைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அப்போது, இந்த  கூட்டம் எவ்வளவு நேரம் நடைபெறும், எவ்வளவு நபர்கள் கலந்து கொள்வார்கள் என்பது தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். கலவரம் மற்றும் வன்முறை ஏற்படுத்தும் வகையில் கூட்டத்தில் பேச்சாளர்கள் யாரும் பேசக்கூடாது.

விழாக்குழுவினர் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கு ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையைப் பிப்ரவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *