சாத்தான்குளம்: 4 சிபிஐ அதிகாரிகள், கைதான எஸ்.எஸ்.ஐ.க்கு கொரோனா!

Published On:

| By Balaji

சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோன்று கைதான காவலர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை மகன், இரட்டை கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கடந்த ஜூலை 10ஆம் தேதி, 8 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் மதுரை வந்தனர்.

பின்னர் சாத்தான்குளம் காவல் நிலையம், கோவில்பட்டி கிளை சிறை, சாத்தான்குளம் தந்தை, மகன் வீடு ஆகிய இடங்களில் விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதா், சாா்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோரிடம் நீதிமன்ற ஒப்புதலுடன் காவலில் எடுத்து விசாரணை நடத்தி சிபிஐ அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர்.

அதுபோன்று, தலைமைக் காவலர் சாமதுரை,முதல் நிலைக் காவலர்கள் வெயில்முத்து, செல்லதுரை ஆகியோரையும் காவலில் எடுத்து விசாரித்து வந்த நிலையில், சிபிஐ காவலர் சைலேந்திர குமார், உதவி ஆய்வாளர் சச்சின் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் மதுரை ரயில்வே மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் சிபிஐ குழுவிலிருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், பவன், அஜய் ஆகிய இரண்டு சிபிஐ அதிகாரிகளுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதுபோன்று வழக்கில் கைதான காவலர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் பால்துரைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 சிபிஐ அதிகாரிகள் மற்றும் கைதான எஸ்.எஸ்.ஐ.க்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share