cசிதம்பரத்தை அடுத்து பிரபுல் பட்டேல்

public

காங்கிரசின் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பிரபுல் பட்டேல் மீதான நில மோசடி புகாரில் 12 மணி நேரம் அவரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் வரும் 21ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் பாஜகவின் முக்கிய எதிர்க் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபுல் பட்டேல் 12 மணி நேரம் விசாரிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய தொடர்பில் இருந்த இக்பால் மிர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நில முறைகேடு மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதாக பிரபுல் பட்டேல் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரு தினங்கள் இருக்கும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான பிரபுல் பட்டேல் மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேற்று காலை 10.30 மணிக்கு சென்றார். நேற்று இரவு வரை நடைபெற்ற விசாரணையில் பிரபுல் பட்டேல் முன்பு வகித்து வந்த விமான போக்குவரத்து துறை தொடர்பான விவகாரங்களும் கேட்கப்பட்டன என்று கூறப்படுகிறது.

நேற்று இரவு அமலாக்கத் துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் விசாரணைக்கு பிரபுல் பட்டேல் ஒத்துழைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் விசாரணைக்கு ஆஜரான பிரபுல் பட்டேல் தன் மீதான புகார்களை ஏற்க மறுத்ததோடு அனைத்துக்கும் முறையான ஆவணங்கள் இருப்பதாகவும் அனைத்து பரிமாற்றங்களும் வெளிப்படையாக சட்டரீதியாக நடைபெற்றதாகவும் கூறியிருக்கிறார்.

இன்றும் அமலாக்கத் துறை பட்டேலை மீண்டும் விசாரணைக்கு அழைத்திருக்கிறது‌.

சில நாட்களுக்கு முன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூட்டுறவு வங்கி ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அடுத்த நாளே அமலாக்கத் துறை அலுவலகத்தில் தானாக முன்வந்து ஆஜராக சென்றார் சரத்பவார். ஆனால் அவரை விசாரணைக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டது அமலாக்கத் துறை. இப்போது அவரது கட்சியைச் சேர்ந்த பிரபுல் பட்டேலை சட்டமன்ற தேர்தலுக்கு இரு தினங்கள் முன்பு கூட்டிச்சென்று விசாரிப்பது மராட்டிய தேர்தலுக்காகத்தான் என்கிறார்கள் தேசிய வாத காங்கிரஸ் கட்சியினர்.

சிதம்பரத்தை அடுத்து சிக்கப் போகும் முன்னாள் மத்திய அமைச்சராக பிரபுல் பட்டேல் இருப்பார் என்கிறார்கள் மும்பை அரசியல் வட்டாரத்தில்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *