Bஉங்கள் நடையின் எடையென்ன?

public

ஒரு கப் காபி!

எப்போதும் இறுக்கமாக இருப்பது சிலருக்குப் பழக்கம். தேவைப்படும் சமயங்களைவிட, தேவையேபடாத சமயங்களில் அவற்றை அதிகம் பிடித்துக்கொண்டிருக்கிறோம். எங்கே நம் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற பாதுகாப்பின்மையும் அடிக்கடி இதற்கு நியாயம் சேர்த்துவிடுகிறது. நம் நடையில் இறுக்கம், உடையில் இறுக்கம், பேச்சில் இறுக்கம், அதிகாரத்தில் இறுக்கம் என இறுகியே போய்விடுகிறோம். ஒத்திசைவற்ற இந்த இறுக்கம் எங்கிருந்துதான் வருகிறது?

மகாத்மா காந்தி நடப்பதைக் காணொலியில் பார்த்திருக்கிறீர்களா? அந்த நடையின் எளிமைதான் காந்தி அடைந்த இறை ஊற்றின் பிரசாதம் எனத் தோன்றுமளவுக்கு இருக்கும் அவரது நடை. கனமற்று, வேகமாக ஒரு பறவை கால்களை நீட்டி நீட்டித் தனது எடையை இறுத்தி, பின் முன்னே செல்வதைப் போல இருக்கும் அந்த நடை.

சில ஆண்டுகளுக்கு முன் ரிஷிகேஷிலுள்ள ஆசிரமத்தை ஒரு பயணத்தின் வழியாகச் சென்றடைந்தேன். பெரிதாக எதிலும் ஈடுபாடு இல்லை, அமைதியாக எங்காவது பொழுதைக் கழிக்கலாம் என்ற எண்ணம், கூடவே சோம்பலும் இருந்ததால் கங்கை நதி பாயும் அந்த இயற்கை எழில் சூழ்ந்த ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கத் தொடங்கினேன். தியானம் சார்ந்த ஆரம்பப் பயிற்சிகள் புதிய உள்பயணத்திற்கு அழைத்துச் சென்றன.

அப்போது வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு தம்பதி உணவு இடைவேளையில் நான் தங்கியிருக்கும் அறையைக் கடந்து செல்வார்கள். இருவருக்கும் முப்பது வயதுதான் இருக்கும். எந்த வார்த்தைப் பரிமாற்றமும் இல்லாமல் அந்த கணவனும் மனைவியும் தங்களுக்குள் ஓர் உரையாடலை நிகழ்த்திக்கொண்டே இருப்பார்கள்.

புற்களின் மீது கால்கள் பதிவதுகூட தியான காலத்தில் கேட்கும் என்பார்கள். ஆனால், அவர்களது நடையில் அதைக்கூட நம்மால் கேட்க முடியாது. எடையற்ற அவர்களது நடை, எனக்குள் இருந்த இறுக்கத்தை அப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் கரைக்கத் தொடங்கியது. அவர்கள் நடப்பதைப் பார்க்கும்போது இருவர் நடப்பது போலவே தெரியாது, ஓர் உடல், ஒரு மனம், ஓர் ஆன்மா அசைந்துகொண்டிருப்பதைப் போலத்தான் அவர்களது நடை இருக்கும். எனக்கு அவர்கள் நடப்பதை வேடிக்கை பார்ப்பது தியான வகுப்பைவிட எளிமையாக, மேம்பட்டதாக இருந்தது.

கிளம்பும் நாட்கள் நெருங்கும்போது, ‘எனக்குப் பெற்றோராக உங்களால் இருக்க முடியுமா?’ எனக் கேட்கத் தோன்றியது. ஏன் அப்படித் தோன்றியது என்பதற்கு இப்போதுவரை என்னிடம் பதில் இல்லை. மெல்ல நகர்ந்து அவர்கள் அருகில் கூச்சத்தோடு செல்கையில், முன்பிருந்தே என்னைக் கவனித்துவரும் அவர்கள் ஒரே போல முகம் நிறைய புன்னகையுடன் கண்களை மட்டும் சிமிட்டினார்கள். எனக்கு அதற்கு மேல், அங்கே இருக்க முடியாமல் வேறு திசை நோக்கி சென்றுவிட்டேன். அவர்கள் எப்போதும் போல நடக்கத் தொடங்கினார்கள்.

காந்தியின் நடையைத்தான் அவர்கள் நடையிலும் பார்த்தேன். அவற்றில் எப்போதும் ஒரு சங்கீதம் இருக்கும். ரவீந்திரநாத் தாகூர், காந்தி நடக்கவில்லை, மிதக்கிறார் என்பார்.

மனம் மிதக்கும்போது, நடையும் மிதக்குமல்லவா.

**- முகேஷ் சுப்ரமணியம்**

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு இளைஞரணி: ஸ்டாலினுக்கு நெருக்கடி!](https://minnambalam.com/k/2019/05/29/85)

**

.

**

[துரைமுருகனுக்கு என்னாச்சு?](https://minnambalam.com/k/2019/05/29/59)

**

.

**

[நாங்குநேரியில் பீட்டர் அல்போன்ஸ்?](https://minnambalam.com/k/2019/05/29/56)

**

.

**

[96 ஜானுவும் இளையராஜாவின் புரிதலும்!](https://minnambalam.com/k/2019/05/29/26)

**

.

.

**

[டிஜிட்டல் திண்ணை: தோல்வி- தினகரனிடம் சசிகலா கேட்ட கேள்வி!](https://minnambalam.com/k/2019/05/28/80)

**

.

.

.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *