மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 மே 2019

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு இளைஞரணி: ஸ்டாலினுக்கு நெருக்கடி!

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு இளைஞரணி: ஸ்டாலினுக்கு நெருக்கடி!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் மெசேஜை டைப் செய்துகொண்டிருந்தது.

“இரண்டு மூன்று நாட்களாக சமூக தளங்களில் ஒரு செய்தி உலா வந்துகொண்டிருக்கிறது. ‘நடந்து முடிந்த தேர்தலில் கழகத்துக்காக தீவிரமாக பரப்புரை செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு கழகத்தின் இளைஞரணிச் செயலாளர் பதவியை தலைமை கொடுக்க வேண்டும். தளபதி அமர்ந்த பொறுப்பில் உதயநிதியை அமரவைத்து அழகு பார்க்க வேண்டும்’ என்ற வேண்டுகோள்களும், அழுத்தங்களும் அந்த செய்திகள் மூலமாக பரப்பப்பட்டு வருகின்றன.

இதுமட்டுமல்ல, இப்போது ஜெயித்து வந்திருக்கும் 13 எம்.எல்.ஏ.க்களும், மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகளும் உதயநிதிக்கு கட்சியில் பதவி வழங்குமாறு தலைமையிடம் வேண்டுகோள் வைத்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன.

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக திமுக நிகழ்ச்சிகளில் தலைகாட்டத் தொடங்கிய உதயநிதி, தேர்தல் பிரச்சாரத்தில் முழு வீச்சாக இறங்கினார். தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் சென்று கறுப்பு சிகப்பு துண்டு போட்டுக்கொண்டு எதிர்க்கட்சியினரை கடுமையாகத் தாக்கினார். இந்த நிலையில்தான், தேர்தல் முடிவுகள் வெளிவந்த ஒரு வாரத்துக்குள்ளாகவே உதயநிதிக்கு பதவி என்ற குரல்கள் எழுந்துள்ளன.

இந்த கோரிக்கைகளுக்கு அடிப்படையே உதயநிதியின் தாயாரான துர்கா ஸ்டாலின் தான் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில். கடந்த இரண்டு நாட்களாகவே துர்கா தனது கணவரும் திமுக தலைவருமான ஸ்டாலினிடம், உதயநிதிக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்து வருகிறார் என்கிறார்கள். எல்லா விஷயத்திலும் மனைவி சொல்லுக்கு மதிப்பு கொடுக்கும் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் அவசரப்படவேண்டாம் என்று எண்ணுவதாகச் சொல்கிறார்கள். ‘தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம் உதயாதானே , பதவி கொடுக்க இதானே சரியான நேரம். என்ன தப்பிருக்கு’ என்று துர்காவே ஸ்டாலினிடம் கேட்டதாகவும் திமுக வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

இதேநேரம் உதயநிதிக்கு நெருக்கமான அன்பில் மகேஷ்,மா.சுப்பிரமணியன் போன்றவர்களுக்கு இந்த விஷயம் தெரியவர, ஏற்கனவே எப்போது எப்போது என்று காத்துக் கொண்டிருந்த அவர்கள் இதை அப்படியே ஊதி சமூக வலை தளங்களில் பரவ வைத்தார்கள். ஸ்டாலினே தன் செல்போனில் உதயநிதிக்கு பதவி வேண்டும் என வலியுறுத்தும் வாட்ஸ் அப் மெசேஜ்களை பார்த்திருக்கிறார்.

உதயநிதிக்காக அவரது மச்சான் சபரீசனும் ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார். ’அவர் எலக்‌ஷன்ல நல்லா உழைச்சிருக்காரு. அதுக்கு ஒரு பரிசு கொடுத்தது போல இருக்கும். தவிர நிர்வாகிகள், தொண்டர்கள் கோரிக்கை வைக்கிறாங்களே... அவங்க எண்ணத்துக்கு மாறா நாம எதுவும்செய்யலையே’ என்று சொல்லியிருக்கிறார் சபரீசன். அப்போது அவரை உட்காரவைத்த ஸ்டாலின் தனது அறைக்கு ஓஎம்ஜி பொறுப்பாளர் சுனிலை அழைத்திருக்கிறார்.

’சுனில்... உதயாவுக்கு கட்சியில பதவி கொடுக்கணும்னு சோஷியல் மீடியாவுல நிறைய வருதே... அதெல்லாம் என்ன? மத்தவங்க என்ன நினைக்குறாங்க?’ என்று கேட்டிருக்கிறார். ஸ்டாலினிடம் எதையுமே வெளிப்படையாக பேசும் சுனில், ‘பெரிய வெற்றி பெற்றிருக்கிற நேரத்துல இப்ப உதயாவுக்கு பதவி கொடுத்தோம்னா, திமுகவை எதிர்க்கிறதுக்கு வேற எதுவும் இல்லாம இருந்தவங்களுக்கு இதுவே சாக்கா போயிடும் சார்’ என்று சொல்லியிருக்கிறார்.

இதைக் கேட்ட சபரீசனுக்கு அதிர்ச்சி. அதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், ‘இன்னும் வயசு இருக்குல்ல. இப்பவே கொடுத்தா விமர்சனங்கள் அதிகமா வரும்’ என்று சொல்லியதாக ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

ஆனாலும் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி கொடுத்தாக வேண்டும் என்று குடும்ப ரீதியில் அவருக்கு அழுத்தங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ‘திமுகன்னா கருணாநிதி, அவருக்குப் பின்னாடி ஸ்டாலின், அவருக்குப் பின்னாடி உதயநிதின்னு ஆகிடுச்சு. அதிமுக அப்படி இல்லை. இங்க சாதாரண ஒரு தொண்டர் கூட உயர் பதவிக்கு வர முடியும்’ என்றெல்லாம் திமுகவைத் தாக்கினார். இந்நிலையில் உதயநிதிக்கு கட்சிப் பதவி என்று முன் வைக்கப்பட்டிருக்கும் முழக்கத்தை அரசியல் ரீதியாகவும், கட்சிக்குள்ளும், குடும்பத்துக்குள்ளும் ஸ்டாலின் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு திமுகவுக்குள் நிலவுகிறது’ என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: தோல்வி- தினகரனிடம் சசிகலா கேட்ட கேள்வி!

.

.

துரைமுருகனுக்கு என்னாச்சு?

.

நாங்குநேரியில் பீட்டர் அல்போன்ஸ்?

.

96 ஜானுவும் இளையராஜாவின் புரிதலும்!

.

இந்தியன் 2: ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பிய லைகா?

.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

5 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

5 நிமிட வாசிப்பு

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

புதன் 29 மே 2019