மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 மே 2019

96 ஜானுவும் இளையராஜாவின் புரிதலும்!

96 ஜானுவும் இளையராஜாவின் புரிதலும்!

உதய் பாடகலிங்கம்

இளையராஜாவின் இசையைக் கேட்கும் சிலருக்கு, அவரது பேச்சுகளில் பெரிதாக ஈர்ப்பிருக்காது. அரசியல், ஆன்மிகம், சினிமா என்று தனக்குப் பிடித்த அத்தனையையும் விவரிப்பதில் அவருக்கென்று தனித்த பார்வை இருக்கும். இது அத்தனையையும் மீறி, தன் உயரத்தை மறந்த கலைஞன் என்ற எண்ணத்தை அவரது பேச்சுகள் அவ்வப்போது வெளிப்படுத்தும். சமீபத்திய பேட்டியொன்றில், தனது பழைய பாடல்களை இப்போது படங்களில் பயன்படுத்துவது ஆண்மைத்தனமா என்று அவர் எழுப்பிய கேள்வி அத்தகையதுதான்.

தனது படைப்பை வேறொருவர் பயன்படுத்துவது குறித்துக் கேள்வி எழுப்ப அவருக்கு உரிமை உண்டு. ஆனால், தனது மனக்குமுறலை வெளிப்படுத்தும் முயற்சியில் தேவையற்ற இலக்குகள் நோக்கி அவரது பேச்சு நீள்வதுதான் முகம் சுளிக்கவைக்கிறது.

சமீபத்தில் சினிமா எக்ஸ்பிரஸ் இணையதளத்துக்கு அளித்த பேட்டியின்போது, 96 படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் இசை பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அது ஒரு பெருமை என்ற தொனியில் கேள்வி கேட்கப்பட, அதற்குச் சம்பந்தமில்லாத வேறொரு திசையை நோக்கிப் பதிலளித்துள்ளார் இளையராஜா. குறிப்பிட்ட காலகட்டத்தில் இடம்பெற்ற பாடல் என்பதைக் காட்ட, சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்கள் சொந்தமாக ஒரு பாடலை உருவாக்க வேண்டியதுதானே என்று கேட்டிருக்கிறார். இதைக் கேட்பவர்களுக்கு, அவர் சொன்னதில் என்ன தவறு என்றே கேட்கத் தோன்றும்.

அந்தக் கேள்வியைக் கேட்ட பத்திரிகையாளர் சுதிர் ஸ்ரீநிவாசன், தன் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்த விஷயத்தோடு இளையராஜாவின் ஏதேனும் ஒரு பாடலைப் பொருத்திப் பார்க்க முடியும் என்று கூறுகிறார். சமீபத்தில் வெளியான 96 படத்திலும், இதேபோல அந்த படத்தின் நாயகி பாடுவது போலக் காட்சிகள் அமைந்துள்ளன என்று குறிப்பிடுகிறார். அது தவறான விஷயம் என்று பதில் சொல்லத் தொடங்கும் இளையராஜா, அந்தக் காலச்சூழலைப் பிரதிபலிக்கும் பாடலைத் தருவதற்கான திறமை (Stuff) இல்லை என்று குறிப்பிடுகிறார்.

தவறான தர்க்கம்

யாதோன் கி பாரத் படத்தில் பிரிந்த மூன்று சகோதரர்கள் சிறு வயதில் தங்களுக்குள் பாடிக்கொள்ளும் பாடலைப் பெரியவர்களானதும் திரும்பப் பாடி ஒன்று சேருவார்கள். சிறு வயதில் அவர்கள் பாடிய பாடலைச் சித்திரிக்கும்போது அதற்கு ஆர்.டி.பர்மன் புதிதாகத்தான் ஒரு பாடலை அமைத்தார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வேறொரு இசையமைப்பாளரின் பாடலை அந்த இடத்தில் பயன்படுத்தவில்லை என்று இளையராஜா வாதிடுகிறார்.

யாதோன் கி பாரத் படத்துக்கும் 96 படத்துக்கும் அடிப்படையில் வித்தியாசம் உள்ளது. யாதோன் கி பாரத் படத்தில் சிறு வயதில் பாடும் பாடல் அவர்கள் குடும்பத்தில் பாடப்படும் பாடல் என்பதுதான் கதை. வெகுஜனத் திரை மொழியில் சொல்வதானால் குடும்பப் பாட்டு. ஆனால், 96 படத்தில் அப்படி எதுவும் இல்லை. அந்தப் படத்தில் வரும் பள்ளிச் சிறுமி தன் காலத்தில் பிரபலமான திரைப் பாடல்களை, குறிப்பாக எஸ்.ஜானகி பாடிய பாடலைப் பாடிப் பள்ளியில் புகழ்பெறுகிறாள் என்பது கதை. ஒரு பாத்திரம் குடும்பப் பாடல் பாடினால் புதிதாக இசையமைக்கலாம். சமகாலத் திரையிசைப் பாடல்களைப் பாடுவதாக ஒரு பாத்திரம் அமைந்தால் புதிதாக எப்படி அமைப்பது? அது கதைக்கே முரணாக அல்லவா அமையும்?

அதே நேரத்தில், அவரது பாடல்களைப் பயன்படுத்துவதற்காக, திரைக்கதையில் வலிந்து இது போன்ற சூழல்களைத் திணிக்க முடியும் என்பதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். அப்படி இருந்தால் அதைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கலாம். ஆனால், 96 படத்துக்கு அந்த விமர்சனம் பொருந்தாது. படத்தில் அந்த அளவுக்குப் பழைய பாடல்கள் கதையோடு கச்சிதமாக இணைக்கப்பட்டுள்ளன.

ராஜாவின் புகழ் பாடும் படங்கள்

கதைக்குப் பொருந்துமா என்பது ஒருபுறம் இருக்க, 96 படத்தில் ராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்ட விதம் அவரது புகழைக் கூட்டுவதாகவே அமைந்துள்ளது. ஒரு கட்டுரையில், கவிதையில் அல்லது கதையில் திருக்குறளை உட்புகுத்துகிறோம் என்றால் திருக்குறளைக் கொண்டாடுகிறோம் என்றே அர்த்தம். இளையராஜாவின் ஆயிரத்துச் சொச்சம் படங்களில் இடம்பெற்ற பாடல்களும் பின்னணி இசையும் அத்தகைய பெருமைக்குரியவைதான்.

சுப்பிரமணியபுரம் படத்தில் சவுண்ட் சர்வீஸ் நடத்திவரும் கடையில் ஹீரோ இருப்பார். அவரைக் கடந்து போகும் ஹீரோயினைக் கண்டதும் காதல் பூக்கும். பின்னணியில், கல்லுக்குள் ஈரம் படத்தில் இடம்பெற்ற ‘சிறு பொன்மணி அசையும்’ பாடல் ஒலிக்கும். இறைவி படத்தில் ஒரு மதுபான விடுதியில் ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலை ஒலிக்கவிடுவார் டிஜே. சமீபத்தில் வந்த மெஹந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோ ஒரு கேசட் கடை வைத்திருப்பார். ராஜராஜ சோழன் நான் பாடல் ஒலிக்க, பின்னணியில் காதல் காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன. இவையனைத்தும் இளையராஜாவின் புகழையே பாடுகின்றன.

தமிழ் சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்படும் ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் படங்களிலும் இது நிகழ்ந்துள்ளது. படத்தைப் பார்ப்பவர்களுக்கு மேலும் உற்சாகத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தவே இந்த நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் படங்களில் ஒலிக்கும் ராஜாவின் பாடல்கள் அந்தப் படத்துக்கு மதிப்புக் கூட்டுகின்றன என்பதில் ஐயமே இல்லை. இளையராஜாவின் பாடல்களை வைத்துச் சம்பந்தப்பட்ட படக் குழுவினர் புகழ் பெறுவதாக நினைத்தால், அதற்கு மறுப்பு சொல்ல முடியாது. அதே சமயம், ராஜாவின் பாடல்கள் அவை உருவான காலத்தோடு எந்த அளவுக்கு இரண்டறக் கலந்திருக்கின்றன என்னும் வரலாறு உண்மையைப் பதிவுசெய்யும் பணியையும் இதுபோன்ற படங்கள் ஆற்றுகின்றன.

சம்பந்தப்பட்ட 96 படக்குழு, தாங்கள் முறையாக அனுமதி பெற்றே இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளது என்பதையும் இங்கு கணக்கில் கொள்ள வேண்டும்.

96 படத்தில் இடம்பெறும் நாயகி கதாபாத்திரம் 1990களில் வந்த இளையராஜாவின் பாடல்களை வெறுமனே பாட மட்டுமே செய்கிறது. அந்தக் காட்சிகளில் அவரது ஒரிஜினல் ட்ராக் ஏதும் பயன்படுத்தப்படவில்லை. இந்த விஷயம் இளையராஜாவுக்குத் தெரிந்ததாகவும் தெரியவில்லை. காரணம், அவர் தற்போதைய சினிமாக்களைப் பார்ப்பதில்லை. தன் காதில் வந்து விழும் விஷயங்களை மட்டுமே கேட்டு எதிர்வினையாற்றுகிறார்.

ஆண்மை என்னும் தவறான சொல்லாடல்

இளையராஜா நம்பும் ஆன்மிகத்தின்படி, அவருக்கான உயரம் இறைவன் தந்ததாகவே இருக்கட்டும். அதற்காக, இதெல்லாம் ஆண்மைத்தனமா என்பது கேட்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்? சம்பந்தப்பட்டவர்கள் பெண்களாக இருந்தால், இதெல்லாம் பெண்மைத்தனமா என்று கேட்க முடியுமா? கலைஞர்களின் செயல்பாட்டில் குறையிருந்தால் அது படைப்புக் குறையாகத்தான் இருக்குமே தவிர, அதை ஆண்மை / பெண்மை பிரச்சினையாக எப்படிக் கருத முடியும்?

வீரம், துணிவு, தைரியம் ஆகியவற்றை ஆண்மை என்பதோடு தொடர்புபடுத்திப் பேசும் நமது சமூகச் சூழலில் இப்போது படைப்புத் திறனையும் ஆண்மையோடு தொடர்புபடுத்துவதன் மூலம் இளையராஜா பெண்மையை மேலும் களங்கப்படுத்துகிறார் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

காப்புரிமை தொடர்பாக அவர் கேள்வி எழுப்பியிருந்தால், அது சட்டப்படி நியாயமானதாக இருக்கும். ஆனால், சம்பந்தப்பட்ட கலைஞர்கள் செய்வது ஆண்மைத்தனமா என்று கேள்வி எழுப்புவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

இப்போது மட்டும் ஏன் எதிர்ப்பு?

இளையராஜாவின் புகழ் பெற்ற பாடல்கள் பலவற்றை யுவன் ரீமிக்ஸ் செய்திருக்கிறார். சில பகுதிகளைப் பாடல்களின் இடையே பயன்படுத்தி இருக்கிறார். அவரது சகோதரர் மகன் பிரேம்ஜியும் இதைச் செய்திருக்கிறார். இவற்றைக் குறித்தெல்லாம், இளையராஜா ஒருபோதும் கேள்வி எழுப்பியதில்லை.

படிக்காதவன் படத்தில் இடம்பெற்ற ‘ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்’ பாடலை சம்சாரம் அது மின்சாரம் படத்தில் சிறிது இடைவெளியில் பயன்படுத்தினார் இயக்குநர் விசு. இளையராஜாவின் பல புகழ்பெற்ற பாடல்கள் இவ்வாறு நகைச்சுவையாகப் பல படங்களில் பிரதி எடுக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் காலத்தில் அதை ஒப்புக்கொண்ட இளையராஜா, இப்போதைய இயக்குநர்கள் தன் இசையைப் போற்றுவதை ஏற்றுக்கொள்ள மறுப்பதும், மோசமான குற்றச்சாட்டுகளால் அதை இகழ்வதும் முரண் அல்லவா?

காலத்தின் அடையாளமான கலைஞன்

இதெல்லாம் இருக்கட்டும். இளையராஜா என்பவர் யார்? அவரை நோக்கி இந்த வாதங்களை முன்வைப்பதற்கே சங்கடம் ஏற்படும் அளவுக்கு மகத்தான கலைஞர். நம் காலத்து மேதை. தமிழ் மக்களின் வாழ்வோடு கலந்த இசையைத் தந்தவர். திரையிசை மட்டுமல்ல, அவர் இசையமைத்த நத்திங் பட் விண்ட், ஹௌ டூ நேம் இட் ஆல்பங்கள், கீதாஞ்சலி, ரமணர் இசைத் தொகுப்பு, திருவாசகம் போன்றவையும் மக்களின் மனங்களில் நிரந்தரமாகக் குடியிருப்பவை.

5 நிமிடப் பாடலை உருவாக்க எத்தனையோ மணி நேரங்களை எடுத்துக்கொள்ளும் இசையமைப்பாளர்கள் மத்தியில், 5 நிமிடங்களுக்கு முன்னதாகவே அதனை உருவாக்கிவிடும் ஆற்றல் பெற்றவர் இளையராஜா. எத்தனையோ திரைக் காட்சிகளுக்கு மின்னல் வேகத்தில் பின்னணி இசை கோத்தவர். இது போன்று எத்தனையோ சாதனைகளைச் செய்தவருக்கு இதுபோன்ற சர்ச்சைகள் தேவையா என்பதுதான் வேதனையோடு நாம் எழுப்ப விரும்பும் கேள்வி.

இளையராஜாவுக்கு முன்னும் பின்னும் திரையிசையில் பல சாதனையாளர்கள் இருக்கின்றனர். ஆனால், ஒரு சமூகத்தின் அடையாளமாகவே உருவெடுப்பது ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கும் கவுரவம். இளையராஜா காலத்தின் அடையாளம். அவரது பாடல்களைத் தங்கள் படங்களில் பயன்படுத்துபவர்கள் அந்தக் காலத்தையே பிரதிபலிக்கிறார்கள். அதன் அமரத்தன்மையை மறு உறுதி செய்கிறார்கள். அதன் மூலம் இளையராஜாவின் புகழுக்கும் இசையின் மேன்மைக்கும் தங்களால் இயன்ற மரியாதையைச் செலுத்துகிறார்கள். அவர்கள் வேண்டுவது இளையராஜாவின் ஆசிகளை. மாறாக, வசைகளை அவர் தந்தாலும் அதையும் ஆசியாகவே எடுத்துக்கொள்ளும் அளவுக்கு இசை உலகமும் தமிழ்ச் சமூகமும் அவர் மீது மதிப்பை வைத்திருக்கின்றன.

அதையும் மீறி இதுபோன்ற சர்ச்சைகள் வந்தால் என்ன செய்வது?

வேறென்ன செய்வது? வழக்கம்போல அவரது இசையில் திளைத்து இதையெல்லாம் மறக்க வேண்டியதுதான்!

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: தோல்வி- தினகரனிடம் சசிகலா கேட்ட கேள்வி!

.

.

தேர்தல் முடிவு: சசிகலா ரியாக்ஷன்!

.

திமுக: ராஜ்ய சபாவுக்குச் செல்பவர்கள் யார்?

.

டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்களா, தொண்டர்களா? முடிவுக்கு வந்த ஸ்டாலின்

.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் எப்போது: ஸ்டாலின் பதில்!

.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

5 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

5 நிமிட வாசிப்பு

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

புதன் 29 மே 2019